Close
செப்டம்பர் 20, 2024 3:59 காலை

புத்தகம் அறிவோம்… அடுக்களை டூ ஐநா..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

மகளை தைரியமாக வளர்க்க வேண்டுமென்பதற்காக இந்த 7 வயது பச்சை மண்ணை..வீட்டுக்கு முன்னால் இருந்த நூலகத்துக்குள் பிடித்து தள்ளிவிட்ட அம்மாதான் எனக்கான வரம்.

“பொம்பளப்புள்ள, ஆம்புளைக்கு சமமா போய் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து படிக்கறா பாரு” என்று மோவாயில் கை வைத்து அதிசயப்பட்ட பெறுசுகளைக் கண்டுகொள்ளா மல், “நீ நெறய படிக்கணும்” என்று கழுத்தைப் பிடித்து தள்ளி விட்ட அம்மாதான் இத்தனைக்கும் காரணம். அந்த நூலகர் அதை விட தங்கமான மனிதர். குமுதம் , கல்கண்டு, இதயம் பேசுகிறது என வரும் அத்தனை வாரப்பத்திரிக்கைகளையும் வீட்டுக்கே கொடுத்தனுப்பி, ஒரே நாளில் எத்தனை முறை போனாலும் முகஞ்சுழிக்காமல், எரிந்து அழாமல் நூல் மாற்றிக்கொடுக்கிற மகராசன் அவர் .(பக்.12, 13).

ஒருவருக்கு முறையான கல்வியும், கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் ஆர்வமும் , விடா முயற்சியும்இருந்தால் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை ஐ.நா.சபை வரை போகலாம் என்பதற்கு ரமாதேவி இரத்தினசாமி ஒரு உதாரணம்.

மதுரை மாவட்டம் எம். கல்லுப்பட்டி என்ற சிற்றூரில் பிறந்து, 7 வயது இருக்கும் போதே தந்தையை இழந்து, அம்மாவின் அரவணைப்பில் படித்து 17 வயதிலேயே ஆசிரியப்பணிக்குச் சென்றவர் இவர். வேலை கிடைத்தது போதும் என்றில்லாமல், ஆசிரியப்பணியோடு கிடைத்த நேரத்தில் பல்வேறு கூடுதல் தகுதிகளையும் வளர்த்துக் கொண்டவர்.

இந்தி முதல் சமஸ்கிருதம் வரை கற்றிருக்கிறார். ஆசிரியர் உரிமைப் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்கும் போயிருக்கிறார். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப் பின் தமிழக மற்றும் இந்திய அளவில் செயல்பட்டிருக்கிறார். மகளிர் பிரச்சினைகள் தொடர்பாகவும் சர்வதேச கருத்தரங் குகளில் உரையாற்றி இருக்கிறார். இவ்வளவுக்கும் காரணம் அவருடைய பரவலான வாசிப்பு, கூடுதல் தகுதிகளை உருவாக்கிக் கொண்டது, அர்ப்பணிப்புடன் கூடிய ஆசிரியப் பணி இவையெல்லாம் தாம் .

மிகவும் சுவையாக உரையாடல் மொழியில், நகைச்சுவை யாகவும் அழகாகவும் எழுதியுள்ளார். வாசிக்கும் பெண்களுக் கு உற்சாகத் தரும் நூல்.வெளியீடு-Her Stories, 75500 98666,ரூ.150/.

# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top