Close
நவம்பர் 21, 2024 10:54 காலை

புத்தகம் அறிவோம்… இந்து மதம்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

ஐரோப்பிய பார்வையாளர் ஒருவருக்குப் பசு மாட்டோடு தொடர்புப்படுத்தக் கூடிய விஷயங்களாக இதயநோய்,பசு இறைச்சியை உண்பதால் மனிதனுக்கு வரும் வேறு பல நோய்கள் நினைவுக்கு வரலாம்.

ஆனால் இந்தியப் பார்வையாளர் ஒருவர் இந்தச் சாதாரண பசுவைக் கவனிக்கும்போது சாதாரணத் தன்மையைக் கடந்து அதை ஒரு புனிதச் சின்னமாக எல்லாவற்றினுடைய தாயாக, அவளுடைய சாணத்தில் ஐஸ்வர்யம் இருப்பதாகக் கருத இடமுண்டு.

நீங்கள் என்ன கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள் என்பது நீங்கள் எடுக்கும் நிலைப்பாட்டைப் பொருத்தது. பசு என்பது இந்துக்களுக்கும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் வெவ்வேறுவிதமான குறியீடாக அமைகிறது; இந்துமதத்துக் குள்ளும், நீங்கள் பிராமணரா அல்லது தோல் பதனிடும் தொழில் செய்பவரா அல்லது பால் கறந்து விற்பவரா அல்லது பசுமாட்டின் சாணத்தை எரிபொருளாகவும், அடுப்பெரிக்கவும் பயன்படுத்துபவரா என்பதைப் பொருத்து பசுமாடு என்பதன் பொருள் மாறுபடுகிறது.

இந்துமதம் என்பது ஒரு விதத்தில் இப்படிக் கூட இருக்கலாம். இந்துக்களும் இந்து அல்லாதவர்களும் இந்துமதத்தை வெவ்வேறு கோணத்தில் பார்க்கிறார்கள்; இந்துமதத்தைச் சார்ந்தவர்களும், நாம் முந்தைய அத்தியாயத்தில் பார்த்ததுபோல ஒரே மாதிரியாக சிந்திப்பதில்லை.

இந்துமதம் என்பதற்கு ஒரு எளிமையான விளக்கம் அளிப்ப தோ அல்லது வகைப்படுத்துவதோ எளிதாக இருக்கும்; ஆனால் இதில் எதற்கும் ஒத்துவராதது இந்து மதம். பசுவை விலங்கு என்று சொல்வதற்கும் இந்து மதத்தை மதம் என்று சொல்வதற்கும் வேறுபாடு இல்லை. எந்த வகையான விலங்கு? எந்த வகையான மதம்.? அவை குறியீட்டு ரீதியாக இந்துக் களுக்கு இடையில் உணர்த்தும் பொருள் என்ன?(பக்.171- 172).

கிம் நாட் என்ற ஆங்கில இறையியல் அறிஞர் எழுதியுள்ள
“இந்துமதம்” -மிகச் சுருக்கமான அறிமுகம் – என்ற இந்த நூல் இந்துசமயத்தின் அடிப்படை அம்சங்களை அறிய உதவும் நூல்.
இந்து மத சாரங்களைச் சொல்லும் நூல்கள், இந்து சமய ஞானிகள் – சங்கரர், இராமானுசர், மத்துவர் -சமய நிறுவனங்கள் – இராமகிருஷ்ண மடம், இஸ்கான்- , பிராமணர்கள் பெற்றிருக்கும் முக்கியதுவம், தலித்துகள் பெண்கள் நிலை, முக்கிய வழிபாட்டுத்தளங்கள் (மதுரை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.)

என்று இவைகள் யாவற்றை சுருக்கமாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. எந்த ஒரு விமர்சனமும் இல்லாமல், சொல்லப்படும் விஷயங்களை வாசிப்பவரகளின் பார்வைக்குவைத்துவிட்டுச் சென்றிருக் கிறது இந்த நூல். சாதாரண மனிதர்களுக்கான நூல்.

டி.கே.ரகுநாதன் எளிமையான நடையில் நமக்கு மொழியாக்கித் தந்திருக்கிறார்.வெளியீடு:அடையாளம்,1205/1 கருப்பூர் சாலை, புத்தானத்தம் -621310.விலை ரூ.90.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top