காந்திஜி எதையும் வீணாக்க மாட்டார். தனக்கு வரும் கடிதங்களின் மேல் உறைகளை தனியே எடுத்து, பிரித்து, உள்புறம் காலியாக இருக்கும் இடத்தில் குறிப்புகளையோ கடிதங்களையோ எழுதி அனுப்புவர்.
அப்படி கடிதங்களைப் பெற்றவர்கள் ஒருநாள் காந்திஜியைச் சந்தித்து “பாபுஜி தாங்கள் எங்களுக்கு எழுதும் கடிதங்களை காலங்காலமாதப் பத்திரப்படுத்திவைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் கடிதங்களை இப்படி வீணான காகிதங்களில் எழுதுகிறீர்களே” என்று குறைபட்டுக் கொண்டனர்.
அதற்கு காந்திஜி, “பாருங்கள் உங்களுக்கு கடிதம்தான் முக்கியம். காகிதம் எப்படி இருந்தால் என்ன? உங்களுக்கு விஷயங்கள் தெரிந்துவிட்ட பிறகு காகிதத்தைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்.” என்றார்.(பக்.16-17).
திருக்குறளின் பெருமை. ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாய் அவர்களுக்கும் காந்திஜி அவர்களுக்கும் கடிதத் தொடர்பு உண்டு. பல்வேறு சிந்தனைகளை பரிமாறிக்கொள்வார்கள்.
ஒருவர் இன்னொருவருக்குத் தீங்கு செய்தால் பாதிக்கப் பட்டவர் பழிக்குப் பழிவாங்குவதுதான் இயல்பு. அதை விட தீமை செய்தவரை மன்னித்துவிடுவது மிகச்சிறந்தமனித குணம். இது தான் பொதுவாகச் சொல்லப்பட்டு வரும் கருத்து.அதைவிடவும் ஒரு கருத்தை டால்ஸ்டாய் எழுதியிருந்தார்.
“தீமை செய்தவரை மன்னிப்பது மட்டுமல்லாமல் அவரே நாணும்படியாக அவருக்கு ஒரு நன்மையைச் செய்தல் மிகப்பெரிய பண்பு.”இந்தக் கருத்தைப் படித்த காந்திஜி மெய்சிலிர்த்துப்போனார்.
தம் அகிம்சைக் கொள்கைக்கு அரணாக இருக்கும் இந்தக் கருத்தை எழுதியதற்காக டால்ஸ்டாய் அவர்களுக்கு மிகவும் பாராட்டி கடிதம் எழுதினார்.
அதற்கு டால்ஸ்டாய் எழுதிய பதில் ” கருத்து மிகவும் சிறந்தது. ஆனால் அது என்னுடைய கருத்தல்ல. உங்கள் இந்தியாவில் தமிழ் மக்களின் சிறந்த நூலாக திருக்குறள் கருதப்படுகிறது. அந்த நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்பைப் படித்தேன். அதில் தான் இந்தக் கருத்து இருந்தது.அதற்குப் பிறகுதான் காந்திஜிக்கு திருக்குறள் மேல் மரியாதை வந்ததாம். படிக்க ஆசைப்பட்டாராம். அந்தக் குறள் இதுதான்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.(பக். 23).
இப்படியாக, இளசை எஸ்.சுந்தரம், “தியாக சீலர் கக்கன்” என்ற நூலில் கக்கனைப் பற்றிய அரிய 100 தகவல்களை தந்தது போல் இந்த நூலில் காந்தியைப் பற்றி 200 செய்திகளை தந்திருக்கிறார். இதில் 6.கடிதம் தான் முக்கியம்.
“காந்திஜி எழுதிய சத்திய சோதனை நூல் தொடங்கி அவரைப்பற்றிப் பல நூல்கள் வந்துவிட்டன. பிறகு ஏன் மகாத்மா – 200 என்ற நூலை நீங்கள் எழுதினீர்கள் என்று கேட்கலாம். இது அவசர யுகம். மொத்தமாகப் படிப்பதில் சிரமமிருக்கலாம். அதனால் சிறு சிறு சம்பவங்களைத் தொகுத்து எழுதியிருகிறேன் ” என்கிறார் ஆசிரியர். மிகவும் அருமையான தொகுப்பு.
வெளியீடு :விஜயா பதிப்பகம்,20 ராஜவீதி,கோயம்புத்தூர். 641001.விலை. ரூ. 140.
# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை#