நிவேதிதை அம்மையாரைச் சந்தித்ததனால் பின்னர் நம் நாட்டு சுதந்திரத்திற்காகவும், மாதர்களுக்கு சம உரிமை கோரியும் போராடினார். மாதர் சுதந்திரம் பற்றி பாரதியார் கொண்டிருந்த எண்ணம் ஆன்மீக உணர்வு அடிப்படையினால் ஏற்பட்டதாகும்.
ஸ்திரி சுதந்திரம், ஆத்ம ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. பிறருக்கு தீங்கு விளையாத வரையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தன்னிஷ்டப்படியெல்லாம் நடக்கக்கூடிய அதிகாரமுண்டு.
மாதரைப் பாதுகாத்து, அவரைச் சுற்றியிருக்கும் வேலியாக இருப்பதே சமூகத்தில் மனிதன் செய்யவேண்டிய கடமை என்கிறார் பாரதி. மாதர் விடுதலை பற்றிய அவரது பத்து கட்டளைகள் இவை.
1. பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
3. விவாகம் செய்துகொண்ட பிறகு அவர் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும்.
4. பிதுரார்ஜியத்தில் பெண் குழந்தைகளுக்கு சமபாகம் கொடுக்க வேண்டும்.
5. புருஷன் இறந்த பிறகு ஸ்திரி மறுபடி விவாகம் செய்துகொள்வதைத் தடுக்கக்கூடாது.
6. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில், முதலியவற்றால் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரிகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.
7. பெண்களை கணவரைத் தவிர வேறு புருஷனுடன் பேசக்கூடாதென்றும், பழகக் கூடாதென்றும், பயத்தாலும், பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.
8. பெண்களுக்கு ஆண்கனைப் போலவே உயர் தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
9. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.
10. நாட்டில் ஆண்மக்களுக்கே உரிமைகள் இல்லாமல் இருக்கையில், அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும், சீக்கிரத்தில் மக்களுக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கு ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.
(பக்.15-16.)
அவருக்கு வாழ்க்கை அனுபவங்கள் எல்லாமே விரும்பத்தக்க அனுபவங்களே.இவ்வுலகம் இனியது; இதில் உள்ள வான் இனிமை காற்றும் இனிது.தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது, இளமை இனிது, முதுமை நன்று.
காத்தல் இனிது, காக்கப்படுதலும் இனிது.
அழித்தல் நன்று, அழிக்கப்படுதலும் நன்று.
உண்பது நன்று, உண்ணப்படுதலும் நன்று.
சுவை நன்று, உயிர் நன்று… நன்று… நன்று.(பக்.93).
இந்த நூல், “சுப்பிரமணிய பாரதி”பாரதியாரின் பேத்தி (தங்கம்மாள் பாரதி மகள்)முனைவர் எஸ்.விஜயபாரதி, இந்திய அரசின் பப்ளிகேசன் டிவிசனுக்காக, ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழாக்கம் செய்தவர் ரா.ஆ.சகாயன். இந்திய வாசகர்களுக்காக
ஆய்வுநோக்கில், மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்டுள்ளது.
1. பாரதியாரின் தோற்றம்
2. வாலிப தேச பக்தன்
3. துணிகர செயல்கள்
4. தோழர்கள் வட்டம்
5. ஒரு கவியின் அரசியல்
6. அமர நிலைக்கு அருகே
7 பாரதியும் அவருக்குப் பிறகும் என்று ஏழு தலைப்புகளில் இந்த நூல் வரையப்பட்டுள்ளது. வாசிக்கப்பட வேண்டிய நூல்.
பக்கம் 101. விலை ரூ.70.மதுரை காந்தி மியுசியத்தில் உள்ளது.
#சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை#