Close
டிசம்பர் 3, 2024 5:13 மணி

புத்தகம் அறிவோம்… புத்த நெறி..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- புத்தர் நெறி

பவுத்தர்கள் தங்கள் வணக்கத்தில் கூறுகிற, கூறி வணங்கத் தக்க விஷயங்கள் மூன்று. அவை
1. புத்தம் சரணம் கச்சாமி
2. தர்மம் சரணம் கச்சாமி
3. சங்கம் சரணம் கச்சாமி.
என்பனவாகும். இவற்றை முதலிலும் கடைசியிலும் சொல்லித்தான் அவர்கள் சமய காரியங்களைத் துவக்கவும் முடிக்கவும் செய்வார்கள்.

இவ்வாக்கியங்களின் தத்துவம் என்னவென்றால் புத்தம் (தலைவன்) தர்மம் (கொள்கை) சங்கம் ( ஸ்தாபனம்) ஆகிய மூன்றிற்கும் வணக்கம் செலுத்துகிறேன் என்பதாகும். இது பவுத்தர்களுக்கு மாத்திரமல்லாமல் மற்றும் உலகிலுள்ள யோக்கியமான எந்த ஸ்தாபனத்திலுமிலிருக்கும் யாருக்குமே உண்மையான கடமையாகும்.

எந்த ஒரு ஸ்தாபனத்திலும் ஈடுபட்டிருக்கும் ஒருவன் அதன் தலைவரைப்பின்பற்றி நல்லவண்ணம் சிந்தித்துத் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு அந்தத் தலைவனை, அந்த ஸ்தாபனத்திலிருந்து விலகுகிறவரை தனக்கு ‘குரு’வாக, ஆசானாகக் கருதவேண்டும்.

தலைவனைப் பெருமைப்படுத்துவதன் மூலம் ஸ்தாபன இலட்சியத்திற்கும் ஸ்தாபனத்திற்கும் தான் உண்மையான தொண்டு செய்தவனாகிறான்.

தலைவனிடம் மரியாதை, அன்பு, கீழ்படியும் தன்மை இல்லாமல் ஒரு ஸ்தாபனத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது ஈடுபட்டவனின் வயிற்றுப் பிழைப்பிற்கும், வாழ்விற்கும், சுயநலத்திற்கும் தெரிந்தெடுக்கப்பட்ட வியாபார தொழில் முறை என்பதாகத்தான் பொருள்படும். அதனால் தான் புத்தம் சரணம் என்று சொல்லிக் காரியம் துவக்குவதாகும்.

அதே போன்றே அடுத்த வணக்கமாகிய ‘தர்மம்’ ( புத்த தர்மம்) சரணம் கச்சாமி என்பதாகும். அதாவது ஒருவன் தான் ஈடுபட்டுள்ள ஸ்தாபனத்தின் இலட்சியங்களுக்கு நிபந்தனை யற்ற அடிமையாகப் பின்பற்றுபவனாக இருக்க வேண்டும்.

கொள்கைகளில் ஒரு சிறிது தனக்கு ஒத்துவரவில்லை யானாலும், அவன் யோக்கியனாக இருந்தால் உடனே ஸ்தாபனத்தை விட்டு விலகிவிட வேண்டும். ‘விலகிவிட சம்மதிக்கிறேன் என்று சொல்வது போன்ற பிரமாணமொழி யேயாகும் இது.

மூன்றாவது ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்பது ஒரு ஸ்தாப னத்தின் தலைவருக்கும், இலட்சியங்களுக்கும் எவ்வளவு ஆட்படத்தக்கதோ அதே போன்று சங்கத்திற்கும் (ஸ்தாபனத்திற்கும்), அடிமையாயிருந்து சங்கத்தைப் பாதுகாப்பதென்பதாகும். ஸ்தாபனத்திற்கு அடிமையாய் இல்லாமலும் பக்தி விஸ்வாசம் இல்லாமலும்  அந்த ஸ்தாபனத்திற்கு செய்யும் மாபெரும் துரோகமேயாகும்.

இம்மூன்று கொள்கைகளையும் முக்கியமானதாகக் காட்டு வதற்காகவே பவுத்த கொள்கைகளை முதன்மை யானவை யாகவும் முக்கியமானவையாகவும் ஆக்கி, பக்தி விஸ்வாச வணக்கத்தோடு ஏற்பாடு செய்துவந்த எல்லாப் பவுத்தர்க ளாலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

புத்தம் சரணம் கச்சாமி,
தர்மம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி,
என்ற வணக்கங்களின் தத்துவம் இது தான் என்பது எனது கருத்தாகும்”(பக்.3,4).

15.5.1957 -ல் சென்னை- எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த 2501ஆம் ஆண்டுப் புத்தர் விழாவின்போது தந்தைபெரியார் அவர்கள் தலைமையேற்று ஆற்றிய தலைமைப் பேருரையின் நூலாக்கம் இது.

பெரியாரின் இரண்டு விஷயங்களுக்கு முன்னத்தி ஏர் புத்தர். ஒன்று கடவுள்மறுப்பு,இரண்டு சாதி ஒழிப்பு. இரண்டிற்குமான விவாதங்களைத் துவக்கியவர் புத்தர். பெரியார் இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாக இங்கே விவாதிக்கிறார்.

வேதங்கள், மகாபாரதம், இராமாயணம் இவற்றில் அவருக்கு இருக்கும் ஞானத்தை இந்த உரையில் தெள்ளத்தெளிவாக உணர முடியும். ஒருவர் ஒன்றுக்கு மறுப்போ ஏற்போ சொல்ல வேண்டுமென்றால் அதற்கு மிகப்பெரிய வாசிப்பு வேண்டும். அதற்கு பெரியார் மிகச்சிறந்த வழிகாட்டி.திராவிடர் கழக (இயக்க) வெளியீடு.ரூ.8

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top