Close
ஜூலை 7, 2024 9:23 காலை

புத்தகம் அறிவோம்… இந்தியசுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்

ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் பிரச்சாரங்களினால்தான் சென்னை மாகாணத்தில் பிராமணர் அல்லாத மக்கள் அரசியலில் எழுச்சி கண்டனர் என்பது உண்மையாகும்.
தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும் இது பொருந்தும். சமூக சீர்திருத்தப் போராட்டங்களோடு தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் தேவைகளையும் குறைகளையும் சுயமரியாதை இயக்கம் எடுத்துக் கூறி வந்தது.

தமிழ்பேசும் முஸ்லீம்களும் பிராமணர் அல்லாதார் வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.இவ்வாறாக சுயமரியாதை இயக்கம் தமிழ் முஸ்லீம்களின் கவனத்தையும் ஈரத்தது. இவ்வாறு ஏற்பட்ட தொடர்பும் நட்பும் பல ஆண்டுகள் (இன்றும்) தொடர்ந்திருந்து அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தன.(பக் .146)

முஸ்லீம் மேடைகளிலிருந்தே இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்த மூடப்பழக்க வழக்கங்களைக் கண்டித்துப் பேசுவதற்கு சுயமரியாதை இயக்கத் தலைவர் (பெரியார்) தயங்கியது இல்லை. தர்காவில் நடைபெறும் வழிபாடுகள், மகான்களின் நினைவாக சந்தனக்கூடுவிழா நடத்துதல், இந்துக் கடவுளரின் ஊர்வலம் போல் தேர் இழுத்துச் செல்லுதல், மொகரம் பண்டிகையை அல்லாப் பண்டிகை என ஆடம்பரமாக, அனாச்சாரப் பழக்கங்களுடன் கொண்டாடுதல், நாகூர் போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை செல்லுதல் போன்றவற்றைக் கண்டித்தார்.(பக்.147).

முனைவர் ஜெ.ராஜாமுகமது புதுக்கோட்டைக்கு கிடைத்த பொக்கிஷம் எனலாம். விலங்கியல் பாடம் படித்து அருங்காட்சியகப் பணியில் சேர்ந்து பின்னர் வரலாற்று ஆசிரியராக மாறியவர். அகவை 75 ஐக் கடந்தும் வரலாற்றாய்வை தொய்வின்றி செய்துகொண்டிருப்பவர். புதுக்கோட்டை வரலாற்றை முழுமையாக அறிந்தவர்களில் முதலாமானவர் இவர். இவரின் “புதுக்கோட்டை வரலாறு” தான் இன்றும் நமக்கு புதுக்கோட்டை வரலாற்றை முழுமை யாக அறிய உதவுகிறது.

“இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லீம்கள் ” என்ற ராஜா முகமதுவின் நூல் தலைப்பை ஒட்டி மட்டுமே எழுதப்பட்டுள்ளது என்று எண்ணவேண்டாம். தமிழக முஸ்லிம்களைப் பற்றிய முழு விவரங்களையும் – தமிழக முஸ்லீம்களின் சமூக அமைப்பு, 1857 தொடங்கி 1947 வரை இந்திய தேசிய இயக்கத்தில் அவர்களின் பங்கு, சுயமரியாதை இயக்கங்களோடு உள்ள தொடர்பு, சுதந்திரத்திற்குப் பின் உள்ள நிகழ்வுகள் என்று இதில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்றவர் கள் பட்டியலையும் இந்நூலில் தந்துள்ளார்.சிறை சென்றவர் களில் கரூரைச் சேர்ந்த பியாரி பீவி – நன்னா சாஹிப் (6. மாதம்)திருச்சியைச் சேர்ந்த ரஹ்மத் பிவி (6 மாதம்) குறிப்பிடத் தக்கவர்கள்.

இது ஒரு ஆய்வு நூல்.தகுந்த ஆதாரங்களோடு எழுதப்பட்டுள் ளது. வரலாற்று மாணவர்கள் மட்டுமல்ல எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல்.வெளியீடு :இஸ்லாமிய தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம்,  ஜமால் முகமது கல்லூரி, திருச்சி. ரூ.120.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top