Close
நவம்பர் 21, 2024 2:15 மணி

புத்தகம் அறிவோம்.. இனி இல்லை மரணபயம்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- இனி இல்லை மரணபயம்

மரணத்துக்காக துக்கப்படுவதில்லை. – மகாத்மா காந்தி. மரணம் மனிதனின் தோழன்; நண்பனும்கூட. மரணத்தை வீரத்துடன் தழுகிறவர்கள் தங்களைத் தாங்களே ஆசீர்வதித்துக்கொண்டவர்கள். வாழ்வின் அர்த்தத்தை நிறைவு செய்தவர்கள்.-ஹரிஜன் பந்து 20.4.1947.மிக மிக நல்லவனாக இருப்பது எப்படிப்பட்ட ஆபத்து என்பதை காந்தியின் மரணம் காட்டுகிறது.- ஜார்ஜ் பெர்னாட் ஷா.(பக்.23).

உயிர் பிரிவதற்கு முன் தன் கணவன் டோனியை அழைத்தாள். குரல் தழுதழுக்க கண்ணீர் கசிய அவனிடம் சொன்னாள்.”டோனி நீ ஒருபோதும் என்னைத் தவிர வேறெரு பெண்ணை நினைத்ததுகூட இல்லை. இப்போது நான் உன்னிடமிருந்து விலகிச்செல்கிறேன். என் மரணத்திற்குப் பின் நீ ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்.எனது ஆடம்பரமான ஆடைகளையும் நகைகளையும் அவளுக்குக் கொடு”.

டோனி சொன்னான்:” அன்பே அது என்னால் முடியாத காரியம். அன்பே உனது அளவு பதினாறு அல்லவா.அது அவளுக்கு எப்படிப் பொருந்தும்.அவள் அளவு பத்து அல்லவா”- மரணம் பற்றிய யூதர்களின் நகைச்சுவைகளில் ஒன்று.(பக்.73).

ராஜாஜியின் வாழ்வில் மரணம் ஒரு தொடர் பேரலைகளாக ஓயாது வீசிக்கொண்டிருந்தது. அவருக்கு 37 வயதுதான் அவர் மனைவி அலர்மேலு மங்கா இறந்தபோது. அப்போது ராஜாஜியின் மகள் லட்சுமிக்கு 3 வயது. தனது மகனை இழந்தார். தனது மூத்தமகள் நாமகிரி 26 வயதில் தனது கணவர் வரதாச்சாரியை இழந்தார். மகாத்மா காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியை மணந்த லட்சுமி 45 வயதில் விதவையானார்.

இத்தனை இழப்புகளையும் மரணங்களையும் எதிர்கொண்ட ராஜாஜி தனது சோகங்களை எல்லாம் கண்ணனின் காலடியில் சமர்பித்துவிட்டு ‘குறையொன்றுமில்லை’ என்று உலகுக்கு அறிவித்து மன அமைதி கொள்பவராக வாழ்ந்தார்.

‘குறையொன்றும் இல்லைமலை மூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறையொன்றும் இல்லை கோவிந்தா’ என்ற அவரெழுதிய பாடல் 1967 ல் கல்கி இதழில் வெளிவந்தது. பின்னர் எம்.எஸ். சுப்புலெட்சுமி பாடி இசைத்தட்டாக வந்து பிரபலமடைந்தது. ஐ.நா.சபையிலும் இப்பாடலை எம்.எஸ். பாடினார்.

1972 டிசம்பர் மாதம் சென்னை அரசு மருத்துவமனையில் தனது இறுதி நாட்களை ராஜாஜி எண்ணிக் கொண்டிருந்தார். தனது இறுதி மூச்சு பிரிவதற்கு முன் அவர் சொன்னது நான் சந்தோஷமாயிருக்கிறேன்.(பக்-81).

காலங்கார்த்தாலே மரணத்தைப் பற்றிய புத்தகமா என்று யோசிக்க வேண்டாம். இதை, தற்போது வாழுகின்ற வாழ்க்கையை உன்னதமாக்கிக்கொள்ள உதவும் புத்தகமாக எடுத்துக்கொள்ளலாம்.

சந்தியா பதிப்பக உரிமையாளர் சந்தியா நடராஜன் தனக்கு ஏற்பட்ட மாரடைப்பிலிருந்து தப்பித்தபின், அது தந்த அனுபவத்தைக் கொண்டு, மற்றவர்கள் ‘மரணபயத்திலிருந்து’ விடுபடுவதற்காக, மகாபாரதம், இராமயணம், பகவத்கீதை, வேதங்கள், உபநிடதங்கள் தேவாரம் போன்ற ஆன்மீக நூல்களிலிருந்தும், காந்தி, டால்ஸ்டாய், ஜே.கே. இன்னபிற அறிஞர்களின் நூல்களிலிருந்தும் மரணம் பற்றிய அழகிய செய்திகளை நமக்கு தொகுத்துக் கொடுத்திருக்கிறார். மரணத்தை ஒரு அழகியலாக நமக்கு ஆக்கித் தந்திருக்கிறார் . வெளியீடு -சந்தியா பதிப்பகம்,ரூ.110.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top