நிவேதிதையின் பிராத்தனை.
ஓ கிருஷ்ணா அன்பு இடையனே! புத்தர் பெருமானே, எல்லையற்ற கருணை தேவனே! ஏசுநாதா,ஆன்ம நேசனே !
ஆன்ம ரட்சகனே! ராமகிருஷ்ணா, தெய்வ அன்னையின் திருமுகமே! விவேகாநந்தா, மாபெரும் இதயமே !இந்த ஆன்மாவை ஏற்றுக் கொள்ளுங்கள்,ரட்சியுங்கள்.உங்கள் திருச்சந்நிதியிலேயே என்னை வைத்துக் கொள்ளுங்கள் என் தெய்வமே! என் தெய்வமே ! உங்கள் மேரொளி நிரந்தமாக என் மீது ஒளிரட்டும்.!(பக். 18).
“பாரத நாட்டின் அறிவுத்திறன் வேறு எந்த நாட்டிற்கும் சளைத்ததல்ல என்பதை உலக வரலாறு காட்டுகிறது. பாஸ்கராச்சாரியாரும், சங்கராச்சாரியாரும் பிறந்த மண்ணின் மைந்தர்கள் நியூட்டனும் டார்வினும் பிறந்த நாட்டிற்கு தாழ்ந்தவர்களா? அதை நாம் நம்பவில்லை.பக்.26-27.
முழு இந்து மதமும் சாதாரண வாழ்க்கையைப் புனிதப்படுத்துவதற்கான ஒரு நீண்ட தொகுதி. ஆன்மாவிற்கு உலகுடனான தொடர்பு பற்றி அறிவதற்கான இதயபூர்வ முயற்சி; தீர்த்தயாத்திரைகள் மேற்கொள்வதற்கான முயற்சி. கிராமத் திருவிழாக்களில் காணப்படுவது போல் இயற்கையுடன் தொடர்பு கொள்வதற்கும் அதே ஆவல். இயற்கையின் புனிதம் என்பது இந்து நாகரீகத்தின் அடிப்படைச் சிந்தனை.இந்து மதம் என்பது, உலகின் மிக நேர்த்தியானதும், மிகுந்த இசைவுநயம் வாய்ந்ததுமான சிந்தனை வளர்ச்சியும் ஆகும்.(பக்.33-34).
எந்தப் பெண்ணில் மாபெரும் கருணை விழித்துணர்ந் துள்ளதோ, எந்தப் பெண் சில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வந்திருக்கிறாளோ, தனது நாடு எப்படிப்பட்ட தென்று அறிந்துவைத்திருக்கிறாளோ அவள் வெறுமனே படித்த வளைவிட அதிகம் கற்றவள்.(பக்.41 – 42)
படிப்பதும் எழுதுவதும் கல்வியாவதில்லை. அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான ஆற்றல்தான் அவற்றை விட முக்கியமானது.(பக்.44).
உணர்ச்சிகளையும் நோக்கங்களையும் பண்படுத்தாதவரை ஒருவன் கற்றவன் அல்ல.அறிவு சம்பந்தமான சில தந்திரங்களைச் சாதுரியமாக வெளிகாட்ட அவன் அறிந்திருக்கிறான்.அவ்வளவுதான். இந்த தந்திரங்களால் அவன் பணம் சம்பாதிக்கலாம். அவனால் இதயத்தைத் தொடவோ வாழ்க்கையைத் தரவோ இயலாது. அவன் மனிதனே அல்ல; அவன் கை தேர்ந்த வாலில்லா குரங்கு.(பக்.44-45).
நாம் எதற்காக வேண்டுமானாலும் வாழ்வோம். ஆனால் நாம் நம் சுயநலத்தை மறப்பதற்கு கற்றுத்தருகின்ற அளவிற்கு அது உன்னதமானதாக இருக்க வேண்டும்! சுயநலத்தை மறப்பது என்பது கடவுளை அடைவதே.(பக்.52).
சகோதரி நிவேதிதை (அக்.28,1867-அக்.13-1911) விவேகானந் தரின் முதல் பெண் சீடர், பாரதியாரின் குரு, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் பங்களித்தவர், இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவர் பல்வேறு நிலைகளில் பேசிய உரைகளிலிருந்தும் எழுதிய நூல்களிலிருந்தும் எடுத்து தொகுக்கப்பட்ட கருத்துக்களஞ்சியம்தான் இந்தச் சிறுநூல்.
நிவேதிதையின் சுருக்கமான வரலாறும்,கடவுள் பிரார்த்தனை, தியானம், இந்தியா, இந்துமதம்,பெண், பெண் கல்வி, கல்வி, திருமணம், துறவு, ஆற்றல் களஞ்சியம் ஆகியவை பற்றிய நிவேதிதையின் கருத்துகளும் இந்நூலில் உள்ளது.
ஸ்ரீராமகிருஷ்ண மடம், எளிதாக வாசிப்பதற்காக கையடக்கப் புத்தகங்களை தயாரித்து வழங்குகிறது. அதில் ஒன்றுதான்” சகோதரி நிவேதிதையின் வெற்றிமுரசு” .
அதிகம் வாசிக்கப்பட வேண்டிய பெண்களில் நிவேதிதை ஒருவர். இவர் குருநாதர் 40 வயதில் மறைந்தார். இவர் 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து குருநாதரைப் போலவே இறவாப் புகழ் பெற்றார். விலை ரூ.110.