“நடை பயணம் மேற்கொண்டிருந்த தொண்டர்களுக்கு வழியில் வேறு சிலவேலைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. ஓய்வு நேரத்தில் சமூக சேவையில் கழித்திட திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஒவ்வொரிடத்திலும் தொண்டர்கள் உணவருந்திய பின், ஏழெட்டு பேராகச் சேர்ந்து ஒரு குழுவாக அருகிலுள்ள சேரிகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் கழுத்தில் தமுக்கை மாட்டிக்கொண்டு அடித்துக்கொண்டே முன்னால் செல்வார். மற்றவர்கள் கைகளில் மண்வெட்டி, துடைப்பம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சேரியை அடைந்து அங்கே எல்லா இடங்களையும் சுத்தம் செய்வார்கள். சாக்கடைகளை மண்வெட்டியால் வெட்டி தண்ணீர் தேங்காமல் ஓட விடுவார்கள்.
மது குடிப்பது எவ்வளவு ஆபத்தானது, மதுபோதை மனிதனை மிருகத்திற்கு சமமாக ஆக்கிறது என்றெல்லாம் பிரசாரம் செய்து மதுவிலக்குப் பிரசாரத்தையும் செய்தனர். இவர்கள் சேரிகளுக்குள் சுத்தம் செய்வதைப் பார்த்து, சேரி மக்களும் தாங்களும் மண்வெட்டி, துடைப்பம் சகிதம் வந்து தங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்வதோடு, அதனைத் தொடர்ந்து இனி தினமும் செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்ட னர். போராடச் சென்றுகொண்டிருந்த புரட்சிப்படை வழியில் செய்த சமூக மாற்றங்கள் இவை…
இந்தப் பணியில் பங்கு கொண்ட தொண்டர்களுக்கும் சரி, அந்தந்த சேரிவாசிகளுக்கும் இது ஓர் புது அனுபவம். எந்த வேலையிலும் ஏற்றத்தாழ்வு இல்லை. எந்தத் தொழிலையும் எவரும் செய்ய தயாராக வேண்டும். ஏன் மகாத்மா காந்தி தனது மனைவி கஸ்தூரிபாயை தங்கள் ஆசிரமக் கக்கூசைக் கழுவச்சொல்லவில்லையா? நாம் செய்வது பொது வேலை, நாட்டு க்குச் செய்யும் சேவை. இதில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர்.
பொதுவாக கிராம மக்கள் கடைபிடிக்க வேண்டிய சில சுகாதார முறைகளை கிராம மக்களுக்கு எடுத்துக் கூறினர். திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதும், நீர் நிலைகளை அசுத்தப்படுத்துவதும் தவறு என்றும் பொதுவெளியில் கண்ணியம் காப்பதும் அவசியம் எடுத்துக் கூறியதோடு தாங்களும் சிலவற்றை நடைமுறையில் செயல்படுத்தியும் காட்டினர்.
சத்தியாக்கிரக தொண்டர்கள் வந்து தங்கிச் சென்றபிறகு எந்தவொரு கிராமமும் அசுத்தமாகிவிட்டது என்ற அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் ராஜாஜியும் மற்றவர்கள் மிகக் கருத்தோடும் ஜாக்கிரதையாகவும் பார்த்துக்கொண்டார்கள். (தற்பொழுது பழனி பாதயாத்திரை போகிறவர்கள் தங்கிப் போகும் இடங்களை பக்தர்கள் போனபின் பார்க்க வேண்டும்.)
அதே போல் பொதுக்காரியங்களில் ஈடுபடுவோர் எங்ஙனம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் நடந்து கொண்டனர். காந்தியடிகளின் மனச்சாட்சி காப்பாளரல்லவா ராஜாஜி? மகாத்மாவின் பாதையில் நடந்து காட்டினார் ராஜாஜி.(பக். 46, 47, 48).
மகாத்மா காந்தியின் ‘தண்டி யாத்திரைக்கு’ இணையானது ராஜாஜி தலைமையில் நடந்த ‘வேதாரண்யம் உப்புச் சத்தியா கிரகமும்.’
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப்பிரவேசத்தை தலைமை தாங்கி நடத்தி மதுரை வைத்தியநாத அய்யர்,டாக்டர் டிஎஸ்எஸ்.ராஜன்,பின்னாளில் காந்திகிராமம் உருவாகக் காரணமாக இருந்த ஜி.ராமச்சந்திரன், டாக்டர் ருக்மணி லட்சுமிபதி,கே.சந்தானம்,ஓ.வி.அளகேசன், பின்னாளில் தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன்,தாயம்மாள் உள்ளிட்ட, ராஜாஜியால் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கபட்ட 98 பேர் இப்போராடத்தில் பங்கேற்றனர்.
1930, ஏப்ரல் 13 (ஜாலியன்வாலாபாக் நினைத்தில்) தமிழ் வருடப்பிறப்பன்று, திருச்சி டாக்டர் டிஎஸ்எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து தொடங்கிய யாத்திரை ஏப்ரல் 28 வேதாரண்யம் சென்றடைந்தது. வேதாரண்யத்தில் போராட்டத்திற்கான ஏற்பாட்டையெல்லம் செய்தவர் சர்தார் வேதரத்தினம்பிள்ளை. ஏப்ரல் 30 காலை 6 மணிக்கு, ராஜாஜி உப்பை அள்ளி “வந்தேமாதரம் “என்று கோஷமிட்டு போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு 3 சிறப்பு உண்டு. 1. மேலதிகாரி வரும் வரை காத்திருந்து கைதானது. 2. குற்றம் காட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்குப் பதில் நீதிபதியே ராஜாஜி இருந்த இடத்திற்கே வந்து விசாரித்து தீர்ப்பளித்தது. 3. வெள்ளை அரசாங்கத்தின் ஊழியர்கள் தங்கள் கடமையைச் செய்ய ஒத்துழைத்தது.
இப்படி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரக போராட்டத்தை மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் “உப்புச் சத்தியாக்கிரகம்” நூலில் வே.கோபாலன் . போராட்டத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் தெளிவாக காட்சிப்படுத்தி யிருக்கிறார்.மேலும் தியாகி சர்தார் வேதரத்தினம்பிள்ளை பற்றியும், தியாகி வைரப்பன் பற்றியும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது இந் நூலில். அகரம் பதிப்பகம் தஞ்சாவூர். ரூ.60.
# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை #