வாழ்க்கையில் முன்னேற எனக்கு (நூலாசிரியர் ஸ்ரீதரன்) நேரடியான தூண்டுகோல் கிடைக்காததால் என் ஆதர்ச புருஷர்களாக மூன்று மாமனிதர்களை வைத்துக்கொண்டேன். மூவர்களின் பெயரும் ‘ரா’வில் ஆரம்பிக்கின்றன. இவர்களின் கால் தூசிக்கும் நான் சமமில்லை. ஆனால் இவர்களுடைய வாழ்க்கையிலிருந்து மூன்று விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
கணித மேதை ராமானுஜனிடமிருந்து – எதையும் என் மூளைக்கு எட்டியவரையிலும் நுணுக்கமாகப் பகுத்தாராயும் குணம்.
சர் சி.வி.ராமனிடமிருந்து – இடைவிடாத உழைப்பு, யாரையும் துதிபாடாமல் சொந்த அறிவையும் ஆற்றலையும் நம்புதல், பகுத்தறிவுப் பார்வை.
டாக்டர் ராதாகிருஷ்ணனிடமிருந்து விரிவாகவும் ஆழமாகவும் ஒரு விஷயத்தை அலசிக் கம்பீரமான மொழிநடையில் பாடம் நடத்துதல். ஒவ்வொரு நாளும் கல்லூரிக்குள் நுழையும் போது
ராதாகிருஷ்ணனை நினைக்கத் தவறியதில்லை. ஆசிரியர் அணியும் உடை கண்ணியமாக இருக்க வேண்டுமென்ற அவரது உதாரணம் என்னைக் கவர்ந்தது.
ஒரு மனிதன் யாரைப்போல ஆக வேண்டும் என்று எப்பொழு தும் கற்பனை செய்தபடி இருக்கிறானோ அவ்வாறு உருவா வது சாத்தியம்தான். ஆகவே இளைய தலைமுறை யினர் சுயநலம் நிறைந்த அரசியல்வாதிகளையும் பகட்டாரவாரம் மிகுந்த திரைப்படத்துறையினரையும் பின்பற்றாமல் அறிவியல் மேதைகள், தொழில் வல்லுனர்கள், பண்பாளர்கள் போன்றோரில் வாழ்க்கையிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
(பக்.111 – 112).
அமெரிக்காவின் மூன்றாவது அதிபராக (1801-1809) பணியாற்றிய தாமஸ் ஜெஃபர்ஸன் (1743 – 1826) உயர்வுக்கான வழிகள் என ஒரு பட்டியல் தந்துள்ளார். அவற்றில் சில பின்வருமாறு:
1.இன்றைக்கு செய்யவேண்டிய கடமையை நாளைக்குச் செய்யலாம் என்று தள்ளிப்போடாதீர்கள். நாளை என்பது இல்லாத ஒன்று.
2. நீங்களே செய்து முடிக்கக் கூடிய செயலை (எடுத்துக்காட்டு கடிதத்தை தபால் பெட்டியில் போடுதல்) வேறு ஒருவருக்குக் கொடுத்து அவர் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முயலாதீர்கள்.அவர் அதைச் செய்ய மறந்துவிடுவார்.
3.பணம் கைக்கு வருமுன்னே செலவிற்கு திட்டம் போடாதீர்கள்.
4.உங்களுக்கு தேவையில்லாத பொருள் மலிவாகக் கிடைத்தாலும் வாங்காதீர்கள்.
5.பசி – தாகத்துக்காகச் செலவழிக்கலாம். பெருமைக்காக செலவிடக்கூடாது.
6.அளவோடு சாப்பிட்டால் முதுமையிலும் அழகோடு வாழலாம்.
7. ஒரு செயலை ஆர்வத்துடன் செய்தால் சோர்வு எழாது.
8. நிகழாத துன்பங்களை எண்ணிப் பயப்படக்கூடாது.
9.எல்லா விஷயங்களிலும் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் வழக்கம் வேண்டாம்.
வாழ்வில் முன்னேற, அமைதி பெற விரும்புவோர் இந்தப்பட்டியலை அடிக்கடி படித்துப் பின்பற்ற வேண்டும்.
(பக்.117-118).
டாக்டர் என்.ஸ்ரீதரன் மன்னர் கல்லூரியின் மேனாள் இந்தித் துறைப் பேராசிரியர். சமஸ்கிருதம், தமிழ், ஆங்கில மொழிகளிலும் புலமை பெற்றவர். மத்திய அரசின் நேஷனல் புக் டிரஸ்ட்ன் அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளர். ‘தென்னிந்தியா’விலேயே இந்தியில் முதன் முதலாக முனைவர் (Ph.D.,) பட்டம் பெற்றவர்.
இலக்கியம், தன்னம்பிக்கை, மொழி பெயர்ப்பு, ஆங்கில-தமிழ் அகராதி என்று 100 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரின் நூல்கள் அனைத்தையும் வானதி பதிப்பகமே வெளியிடுகிறது.25 வயதிற்குப் பின் காது கேட்கும் தன்மையை இழந்தவர்.
புத்தாண்டின் முதல் நாளான இன்று வாசிக்க வேண்டிய மிகச்சிறந்த வாழ்வியல் நூல்களில் ஒன்று“வாழ்க வளமுடன்”.
மனதைப் பக்குவப்படுத்திக்கொள்ளவும், வாழ்க்கையை நெறிப்படுத்திக்கொள்ளவும், வாழ்வில் முன்னேறிச் செல்லவும் நல்ல வழிகளைச் சொல்லும் நூல். குறிப்பிடவேண்டிய ஒன்று, உதாரணமாக குறிப்பிட வேண்டியவற்றிற்கு ஆசிரியர் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையே பெரிதும் பயன்படுத்தியிருப்பது.
ஸ்ரீதரன் சொல்வதுபோல், இளைய தலைமுறை, நடுத்தர வர்க்கத்தினர், மாலைப்பருவத்தில் இருக்கும் மூத்த வயதினர் யாவருக்குமான நூல் வாழ்க வளமுடன். கங்கை புத்தக நிலையம்,ரூ.65.
# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை-புதுக்கோட்டை #