வாழ்க்கை முறையை ஐந்து வகைகளாக, அவை எப்படி உயர் அடுக்குகளாக வளர்கின்றதென்பதை அருமையாக, தனித்தன்மையோடு விளக்குகிறார்.
தாழ்நிலையில், பிறவற்றை அழித்து வாழ்கின்ற, முற்றிலும் வன்முறையும் தன்னலம் நிறைந்த கொலைப் பொருளாதாரம்( parasitic economy ) இருக்கின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக புலியின் வாழ்க்கையைக் கூறலாம். சமுதாயத்தில் உழைக்காமல், மற்றைய உயிரினங்களையும் இயற்கையையும் அழித்து வாழ்கின்றவர்கள் கொலை வாழ்க்கை முறையைக் மேற்கொண்டவர்கள். இவர்கள் விலங்கு நிலையில் இருப்பவர்கள்.
இரண்டாவதான, அடுத்த மேல்நிலை வாழ்வியல் முறையாக கொள்ளைப் பொருளாதாரம் (predatory economy) அமைகின்றது. இதற்கு சான்று குரங்கு. குரங்கு உழைப்பதில்லை. மற்றவர்கள் உழைத்து பாடுபட்டு உருவாக்கிய மரங்களின் பழங்களைத் திருடித் தின்று வாழ்கின்றது. சமுதாயத்தில் குரங்குகளைப் போன்று மற்றவர்களைச் சுரண்டி வாழ்கின்றவர்கள் பெருகுகின்ற பொழுது, அமைதி இருக்காது. இதுவும் விலங்குநிலை வாழ்க்கைதான்.
மூன்றாவதாக, உயர்ந்த நிலையில் அமைவது முயற்சிப் பொருளாதாரம் (economy enterprise). தேனீக்களின் வாழ்க்கையில் இதனைக் காணலாம். தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை எடுக்கின்ற பொழுது, அவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றது. உதவி, உழைத்து வாழ்கின்ற விவசாயிகள், தொழிலாளர்கள் வாழும் வாழ்க்கை இது. இந்த வாழ்க்கைமுறையில் வன்முறை குறைவு, சத்தியம் இருக்கும்.
நான்காவது, சிறந்த வாழ்வியல் முறையாக உருவெடுப்பது கூட்டுப் பொருளாதாரம் (economy gregation) தேனீக்கள் வாழும் கூட்டு வாழ்க்கை இதற்கு எடுத்துக்காட்டு. ஒவ்வொருவரும் சக்திக்கேற்ப உழைத்து, தேவைக்கேற்ப எடுத்துக்கொள்ளும் வாழ்க்கைமுறையில் விட்டுக் கொடுத்தல், கூட்டுறவு இருக்கும்.
ஐந்தாவது, மேன்மையான வாழ்வியல் முறையாக, சேவைப் பொருளாதாரம் (economy of service) இதற்கு எடுத்துக்காட்டு தாய். ஒரு தாயிடம் தன்னலமற்ற பிறர்நலம் பேணுகின்ற தொண்டு, அன்பு ஒளிர்கின்றது. தாய் மனம் பெற்றவர்களால் உருவாகும் சமுதாயத்தில் முழுமையான அகிம்சையும் சத்தியமும் இருக்கும்.
இது தான் நிலையான பொருளாதாரமாக விளங்கும். மக்கள் நாகரீகம் என்ற பெயரால் தேவைகளைப் பெருக்கி நுகர்வுக் கலாசாரத்தில் ஈடுபட்டு, செலவுக்காக வழிமுறைதவறி, வரைமுறையின்றி வருவாய் தேட முயல்கின்றபொழுது ஏற்படுகின்ற சீரழிவைத்தான் இன்றைய பொருளாதார நிலை காட்டுகிறதென்பதை தக்க சான்றுகளோடு விளக்குகின்றார்.
டாக்டர் குமரப்பா அளித்த கருத்துகளில் ஒன்று பசுப்பாது காப்பு. நமது நாட்டுப்பொருளாதாரத்தைப் “பசுப் பொருளா தாரம்” என்று குறிப்பிட்டார். கிராமப் பொருளாதாரத்தின் மையமாக உயிர்நாடியாக விளங்குவது பசு.
இதனைக் காந்தியடிகள் உணர்த்தினார்.குமரப்பா பசுப் பொருளாதாரத்தின் இயல்புகளை அருமையாக சுட்டிக்காட்டு கின்றார். பசு தரும் பால் உடலோம்பும்; சாணம் நிலத்தின் வளம் காக்கும். பசு ஈன்று தரும் கன்றுக்குட்டி, காளையாகி உழைக்க உற்ற துணையாகும்.
பசுமாடு நமக்கு வேண்டாத கூளத்தைத் தின்றுவிட்டு, வேண்டியவற்றைத் தொடர்ந்து தருகின்றது. இறந்த பின்பு அதன் தோல் பயனுள்ள பொருளாகும்; உடல் உரமாகும். பசுவைச்சுற்றியே விவசாயியின் வாழ்க்கை சுழல்கிறது(பக். 19, 20,21). டாக்டர் மா.பா.குருசாமியின்” புதுமைப் பொருளியலறிஞர்” கட்டுரையிலிருந்து.
காந்தியப் பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பாவின் பிறந்தநாள் இன்று ஜனவரி 4.(4.1.1892-30.1.1960)ஜே.சி.குமரப்பா தஞ்சாவூர் மாவட்டத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். காந்தியைச் சந்தித்ததிலிருந்து அவரோடும் அவரின் கோட்பாட்டோடும் இணைத்துக் கொண்டவர். அவரின் பொருளாதார சிந்தனைகள் இன்றும் கவனிக்கப்படுகின்ற ஒன்று.
ஒரு பள்ளி மாணவர்களுடனான, டிராக்டரைப் பற்றிய உரையாடலின்போது அவர் கேட்டதுதான் “டிராக்டர் சாணி போடுமா?” என்பது.டிராக்டர் பயன்பாடு அதிகம் என்றாலும், உழவுக்கு மாடுகளைப் பயன்படுத்தும்போது அது போடும் சாணி. பெய்யும் மூத்திரம் பயிருக்கு உரமாகும். டிராக்டர் அதைச் செய்யாது என்பதே இந்தக் கேள்விக்கான பதில்.
ஜே.சி.குமரப்பாவின் பொருளியல் சிந்தனைகளை, காந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்களை புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட 13 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தலை சிறந்த காந்திய அறிஞர்கள் இந்தக் கட்டுரைகளை வரைந்துள்ளனர்.தன்னறம் – குக்கூ காட்டுப்பள்ளி வெளியீடு.ரூ.100/-
# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை-புதுக்கோட்டை #