Close
அக்டோபர் 5, 2024 7:18 மணி

புத்தகம் அறிவோம்… இந்திய இலக்கிய சிற்பிகள்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- ஆர்.சூடாமணி

1954 ஆம் ஆண்டு முதல் கதையான ‘பரிசு விமர்சனம்’ தினமணி கதிரில் வெளியாயிற்று. அதை கதை என்றுகூடச் சொல்ல முடியாது. ஒரு சித்திரம். எதுவானாலும் அச்சேறிய முதல் படைப்பு. அந்தக் கணத்தின் மகிழ்ச்சி அலாதியானது. பின்னால் எத்தனை பிரசுரங்கள் நிகழ்ந்தாலும் முதல்முறை தன் எழுத்தை அச்சில் காண்பது தனியானதொரு அனுபவம்.

கதை வெளியான தினமணிக்கதிர் இதழை எடுத்துக்கொண்டு என் தாயார் அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கெல்லாம் ஒரு ரவுண்ட் போய் வந்தார். என் பெண் கதை வந்திருக்கு. ‘படிச்சுப் பாருங்கோ”! படிப்பவர் பாராட்டியே தீர வேண்டும். இல்லையானால் வீடு திரும்பியதும் என்னிடம் சொல்வார். அவரு (ளு) உன்கிட்டே பொறாமை !.

இதை நினைக்கும் இப்போது சிரிப்பும் கண்ணீரும் வருகிறது. இந்த அன்பையே என் கதைக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாய் கருதுறேன் என்று தினமணிக்கதிரில் பதிவு செய்திருக்கிறார் சூடாமணி(பக்.17).

எளிய தோற்றம் ,எளிய உடை, எளிய உணவு, எளிய வாழ்க்கை என்று வாழ்ந்ததும் அவர் தேர்வாகவே இருந்தது. காந்திய சிந்தனையின் தாக்கத்தால் தனக்கிருந்த செல்வத்திற்கு தன்னை ஒரு காப்பாளராக மட்டுமே அவர் கருதி இருக்கக்கூடும். அதனால்தான் தன் காலததிற்குப் பிறகு அவற்றை ஏழை மக்களுக்கு கொடுக்கத் தீர்மானித்திருக்கிறார்.

அவருடைய எழுத்திலும் இந்தக் கருத்துக்களை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். வாக்குவேறு வாழ்க்கை வேறு என்று இல்லாத மனுஷியாக அவர் இருந்திருக்கிறார்(பக்.35). தமிழ்ப் பெண் எழுத்தாளுமைகளில் முக்கியமானவரான ஆர்.சூடாமணி (ஜன.10,1931-செப்.13,2010) அவர்களின் பிறந்தநாள்

சூடாமணியின் வாழ்க்கை தன்னம்பிக்கை நிறைந்தது. அது அவரிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், (ICS அதிகாரியான அவர் அப்பா டி.என்.எஸ்.ராகவன் சுதந்திர இந்தியாவில் தமிழக தலைமைச்செயலாளராக இருந்தவர்).

சாதாரண பெண்மணிகளுக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பெல் லாம் அவருக்குக் கிடைக்கவில்லை. சிறுவயதில் உள்ளங்கை யிலும், காலிலும் வியர்வை ஊறும் உடல்வாகு அவருக்கு இருந்திருக்கின்றது. இதனால் சாதாரணமாக மற்றவர்கள் செய்யும் எந்த வேலையுமே சூடாமணிக்கு சவாலாக இருந்திருத்திருக்கிறது.

அந்த சவாலை ஏற்றுக்கொண்ட விதமும், சோர்ந்து போகாமல் தொடர்ந்து இயங்கியதும் தான் அவரது தனிச்சிறப்பு. சூடாமணிக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் அவர் தாய் கனகவல்லி. இவரை ஊக்கப்படுத்தி மேன்மையாக்கியவர் அவர்தான்.

நான்கு வயதில், அம்மை நோய் வந்து மிகப்பெரிய பாதிப்பை சூடாமணிக்கு ஏற்படுத்தியது. அவருக்கு மருத்துவம் செய்து காப்பாற்றியவர் மருத்துவ மூர்த்திகளில் ஒருவரான டாக்டர் ரங்காச்சாரி.

உயிர் பிழைத்தாலும், சராசரி குழந்தையாக, மனுசியாக அவரால் மாற முடியவில்லை. பள்ளியில் சென்று படிக்க முடியவில்லை. வெளியில் செல்லக்கூட முடியாத நிலைமை. இதிலிருந்து மீண்டெழச் செய்தவர் அவர் அம்மாதான்.

திருமணம் செய்துகொள்வதில்லை என்று தீர்மானித்து, தூய வெள்ளையில் மெல்லிய நூல் வேலைப்பாடு கொண்ட புடவை, வெள்ளை ரவிக்கையும் தனக்கான நிரந்தர உடையாகத் தேர்வு செய்தார். காதில் சிறிய முத்துத் தோடு தவிர எந்த நகையும் கிடையாது.இதோடு விட்டிற்குள்ளேயே ஒரு துறவு வாழ்க்கையை அவர் வாழ்ந்தார்.

7 நாவல்கள் 8 குருநாவல்கள், 20 சிறுகதைத்தொகுப்புகள், 3 நாடகங்களை எழுதிய சூடாமணி, தான் சம்பாதித்தது, தன் தந்தை மூலம் வந்த செல்வம் எல்லாவற்றையும் தனக்குப் பிறகு எழைகளுக்கு வழங்க உயில் எழுதிவிட்டுச் சென்றவர் சூடாமணி.

கிட்டத்தட்ட 10 கோடி போய் மதிப்பிலானது உயிலில் இருந்த சொத்துகள். இதையெல்லாம் நடைமுறைப்படுத்தியவர்கள் நூலாசிரியர் கே.பாரதியும் அவரது கணவர் நீதிபதி சந்துருவும்.

சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள இந்த நூலில் அதன் ஆசிரியர் பாரதி, சூடாமணியின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக, முதல் அத்தியாயத்தில் ‘அரப்பணமான வாழ்வு’ என்று தலைப்பிட்டு எழுதியிருக்கிறார்.

சூடாமணியின் எழுத்தில் உள்ள உளவியல் செய்திகளையும், மானிட மேன்மைகளையும், பெண்ணியப் பார்வைகளையும் சிறப்பாகவே பதிவு செய்திருக்கிறார் பாரதி.

சூடாமணியின் படைப்புகளை விட அவரின் வாழ்க்கை உன்னதமானது என்பதை இந்த நூலின் வழி அறிந்து கொள்ளலாம்.இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை.சாகித்ய அகாதமி வெளியீடு. ரூ.50.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top