Close
ஜூலை 7, 2024 9:30 காலை

புத்தகம் அறிவோம்.. புத்தரின் அறமுரசு..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம் புத்தரின் அறமுரசு

சுவாமி விவேகானந்தர் கூறுவதுபோல், ‘முற்றிலும் எந்தவித சுயநல நோக்கமும் இல்லாமல் வாழ்ந்தவர் புத்தர்…(இன்றைய ஆன்மீகவாதிகள் கவனிக்க) இதுவரை வெளிப்பட்டவற்றுள் மகோன்னதனமான ஆன்ம சக்தியின் நிலைக்களன் அவர். உலகம் முதன்முதலாகக் கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அவர். “சாஸ்திரங்கள் கூறுகின்றன என்பதற்காக ஒன்றை நம்பாதீர்கள்!
உங்கள் தேசிய பாரம்பரியம் என்பதற்காக நம்பாதீர்கள்!
சிறுவயதிலிருந்தே உங்களுக்கு உபதேசிக்கப்பட்டது என்பதற்காக நம்பாதீர்கள்!உங்கள் அறிவால் ஆராய்ந்து பாருங்கள்!
பகுத்து உணர்ந்து கொண்ட பிறகு அது எல்லோருக்கும் நன்மை தரும் என்று கண்டால் அதனை நம்புங்கள்;வாழ்வில் அதைச் செயல்படுத்துங்கள்.மற்றவர்களும் பின்பற்ற உதவுங்கள்.” என்று துணிவுடன் முழங்கியவர் அவர்.
( இது மதம்  தேவையா நூல் அறிமுகத்திலும் உள்ளது)

‘பணம்,புகழ், அல்லது வேறு எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் வேலை செய்பவர்களே சிறப்பாக வேலை செய்ய முடியும் அப்படிச் செய்யும்போது அவன் புத்தர் ஆகிறான். உலகத்தையே மாற்றக் கூடிய அளவு வேலை செய்வதற்கான ஆற்றல் அவனிடமிருந்து பொங்கி எழுகிறது. ‘
(பக்.12-14).

என்று விவேகானந்தரால் புகழப்பட்ட,புத்தரைப் பற்றிய சிறிய,ஆனால் அவரைப் பற்றி முழுமையாக அறிய உதவும் நூல்தான்”புத்தரின் அறமுரசு”.
பெரிய நூல்களை வாசிக்கின்ற பழக்கம் குறைந்துவரும் இந்நேரத்தில், இந்த நூல் புத்தரின் அத்தனைஅம்சங்களையும், தோலை உறித்து பழமாக சாப்பிடத்தந்திருக்கிறது
ஸ்ரீராமகிருஷ்ண மடம்.

புத்தரின் வாழ்க்கை வரலாறு, போதனைகள் மற்றும் உபதேசங்கள் யாவும்இந்த 96 பக்க நூலில் உள்ளது.அதிலிருந்து சில பகுதிகள் கிழே:

புத்தரின் ஐந்து போதனைகள் (பஞ்சசீலம்)
கொலை கூடாது
களவு கூடாது
ஒழுக்கமின்மை கூடாது.
பொய் கூடாது.
மது கூடாது.(பக், 16).

எட்டு நெறிகள்

நல் அறிவு
நல் நினைவு
நற் பேச்சு
நற் செயல்
நல்வாழ்வு
நன் முயற்சி
நல் விழிப்பு
நல் ஒருமை.
(பக்.17)..

போதனைகள்
-கொல்லாதே
களவு செய்யாதே
விபசாரம் செய்யாதே
பொய் சொல்லாதே
பழி சொல்லாதே
கடுமொழி சொல்லாதே
வம்பு பேசாதே
பிறர் பொருளை
விரும்பாதே
பகைமை கொள்ளாதே.
நேர்மையாக நினை.(பக்.18).

புண்ணியச் செயல்கள்.

தகுந்தவர்களுக்கு தானம் செய்.ஒழுக்க போதனைகளைப் பற்று.நல்ல எண்ணங்களை நினை.பிறருக்கு பணி செய்,
பிறரைக் கவனித்துக் கொள்.பெற்றோரையும் மூத்தோரையும் மதித்து நட, அவர்களுக்கு வேண்டுவன செய்.உன் புண்ணியங்களில் ஒரு பகுதியைப் பிறருக்கு கொடு.பிறர் உனக்கு கொடுக்கும் புண்ணியங்களை ஏற்றுக்கொள்.நல்ல கருத்துகளைக் கேட்டு உணர்.நல்ல கருத்துகளைப் பிறருக்குக் கற்றுக்கொடு.உ ன் குற்றங்களை நீக்கு.(பக்.19- 20).

எது தீமை?

கொல்வது தீமை.
திருடுவது தீமை.
பொய் பேசுவது தீமை.
பழிப்பது தீமை.
ஏசுவது தீமை
வம்பளப்பது தீமை.
பொறாமை தீமை.
பகை தீமை.
பொய்க் கொள்கைகளைப் பற்றிக்கொண்டிருப்பது தீமை.

தீமைக்கு வேர் எது?

மனிதர்களின் செயல்கள் பத்து விஷயங்களால் தீயவை ஆகின்றன. அந்த பத்து விஷயங்களையும் விலக்கிவிட்டால் அவை நல்லவையாகிவிடும். அந்தப் பத்தும் பின் வருமாறு:
1.உடம்பால் வரும் தீமைகள் மூன்று : கொலை, களவு, காமம்.
2. நாக்கால் வரும் தீமைகள் நான்கு : பொய், பழித்துப் பேசுதல், ஏசுதல், வீண்பேச்சு.
3. மனத்தால் வரும் தீமைகள்: பேராசை, பகைமை, தவறான அணுகுமுறை.

இந்த பத்து குற்றங்களையும் விலக்குவதற்கான வகையையும் உனக்குக் கூறுகிறேன்.
1. கொல்லாதே, வாழக்கையை மதித்து நட.
2.திருடாதே,கொள்ளைஅடிக்காதே.உழைக்கின்ற எல்லோருக் கும் அதன் பலன் கிடைப்பதற்கு உதவு.
3. அசுத்தத்தை விட்டொழி. தூய்மையாக வாழ்.
4. பொய் பேசாதே. உண்மையாக இரு. விவேகத்துடனும், பயம் இல்லாமலும், அன்பு நிறைந்த நெஞ்சத்துடன் உண்மையைப் பேசு.
5.வதந்திகளை உருவாக்காதே, அவற்றைப் பரப்பாதே. பிறரிடம் குறை காணாதே. அவர்களுடைய நல் இயல்புகளைப்பார். அப்போதுதான் நீ முழுமனத்தோடு அவர்களைப் பகைவர்களிடமிருந்து பாதுகாக்க முடியும்.
6. சபதம் செய்யாதே, மரியாதையும் மதிப்பும் தோன்றப் பேசு.
7.வம்பளப்பதில் காலத்தை வீணாக்காதே, தேவைக்கேற்ப பேசு, அல்லது மெளனமாக இரு.
8. பேராசை கொள்ளாதே, பொறாமையை ஒழி. பிறருடைய நலத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள்.
9.தீய நினைவுகளை ஒழித்து நெஞ்சத்தை தூயதாக்கு விரோதிகளையும் வெறுக்காதே. அனைத்து உயிர்களையும் அன்பால் தழுவு.
10.அறியாமையாமையிலிருந்து உன் உள்ளத்தை விடுவித்துக்கொள்.

புத்தரின் பதில்கள்:

மிகவும் கூர்மையான வாள் எது?

கோபத்தில் பேசப்பட்ட வார்த்தை.

மிகக் கொடிய விஷம் எது?

எல்லாம் எனக்கு வேண்டுமென்ற எண்ணம்.

தோல்வி அடையாத ஆயுதம் எது ?

பொறுமை.

மிகச்சிறந்த ஆயுதம் எது?

அறிவு.

மிகப் பயங்கரமான திருடன் யார்?

தீய சிந்தனை..

மிகக் கடுமையான காய்ச்சல் எது?
வெறுப்பு(பக்.93 – 95).

வெளியீடு- ஶ்ரீராமகிருஷ்ண மடம், விலை ரூ .15.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top