Close
நவம்பர் 23, 2024 10:06 காலை

புத்தகம் அறிவோம்… புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகிகள்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகிகள்

புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகிகள் பலர் இருந்த போதிலும் நால்வர் நமது கவனத்தை ஈர்க்கின்றனர்.
சர் வில்லியம் பிளாக் போர்ன்(1807 – 1823).
சர் ஏ. சேஷய்யா சாஸ்திரி (1878-1894).
சர் அலெக்ஸாண்டர் டாட்டன்ஹாம் (1934 – 1947).
கான்பகதூர் பி. கலிபுல்லா (1941 – 1947)  ஆகியோர்.
நூலின் முன்னுரையில்.

1878 – 1894 வரை புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகி மற்றும் திவான் பதவிகளில் சிறப்பாகக் பணியாற்றி, புதுக்கோட்டையின் அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் நிலையான இடம்பெற்றிருப்பவர் சேஷய்யா சாஸ்திரி.சரிந்து கொட்டிக்கிடந்த சமஸ்தான நிர்வாகத்தை உயர்ந்த மாளிகையாக கட்டிக்காட்டியவர்.

நவீன புதுக்கோட்டையின் முன்னோடி. பல்லவன்குளம், புதுக்குளம், பொது அலுவலகக் கட்டிட வளாகம், மன்னர் கல்லூரி, ராணியார் பள்ளி இப்படி இன்னும் பல அவரின் பெயரை முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றன(பக்.13-14).

அரசு கோப்புகள் பதிவேடுகள் ஆகியவற்றைப் பராமரித்தல் குறித்து பல புதிய வழிமுறைகளை இந்திய நிர்வாகத்திற்கு அளித்தபெருமை டாட்டன் ஹாமைச் சாரும். அவர் வகுத்த அலுவலக நிர்வாக நிர்வாக நடைமுறைகளும், கோப்புகள் நிர்வகிக்கும் முறைகளும் இன்னும் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது.

அரசு அலுவலக நிர்வாக நடைமுறைகளை வகுத்தவகையில் இந்திய நிர்வாகவியல் வரலாற்றில் டாட்டன்காம் நிலையானதொரு இடத்தைப் பெருகிறார். அவரது அலுவலக நடைமுறை சீர்திருத்தங்களுள் பல புதுக்கோட்டையில் பிறந்தவை.(பக்.31).

13.12.1946 அன்று இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலத்தில் மன்னர் உட்பட ஆயிரக்காணக்கானோர் கலந்துகொண்டனர். அவரது உடல் மச்சுவாடியிலுள்ள லூதரன் தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அலெக்ஸாண்டர் லாப்டஸ் டாட்டன்ஹாமின் ஏழாவது மகன், இந்தியாவில் 50 ஆண்டுகள் பணியாற்றியவர், இந்நாட்டு மக்களை நேசித்தவர்”. இது அவரது கல்லறையில் காணப்படும் வாசகம்.

இறப்பதற்கு முன் தன்னிடமிருந்த 6000 ரூபாயை மன்னரிடம் ஒப்படைத்து அப்பணத்தின் மூலதனத்தைக் கொண்டு தனது இறந்த நாளன்று ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்க வேண்டுமெனவும், இதுவே தனது கடைசி ஆசை எனவும் தெரிவித்தார். டிசம்பர் 13 ஆம் நாள் இன்றளவும் ஏழை எளிய மக்கள் பலரின் வயிறு நிறைந்து டாட்டன்ஹாமை வாழ்த்திக்கொண்டிருக்கின்றன(பக். 34).

இன்று,புதுக்கோட்டை மாவட்டம் தனது 50 -ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. பல்வேறு முதன்மைகளுக்கு சொந்தக்கார மாவட்டம் இது. அதன் வரலாற்றின் ஒவ்வொரு அம்சங்களையும் நூல்களாக ஆவணப்படுத்தியதில் முனைவர் ராஜாமுகமது அவர்களுக்கு பெரும்பங்குண்டு. புதுக்கோட்டை மாவட்ட வரலாற்றை எழுதிய அவர் அதில் உள்ள சிறப்பான விஷயங்களை, தனித்தனியாக,

புதுக்கோட்டை வரலாறு
செய்தித்துளிகள்,
ஒரு ராஜாவின் காதல் கதை
புதுக்கோட்டை தந்த சொல்வேந்தர் சத்தியமூர்த்தி,
சித்தன்னவாசல்,
புதுக்கோட்டை தொண்டமான் கட்டப்பொம்மனைக் காட்டிக் கொடுத்தாரா
போன்ற தலைப்புகளில்சிறு, சிறு புத்தகங்களாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.அந்த வகையான ஒரு புத்தகம் தான் புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகிகள் .

இந்த நான்கு நிர்வாகிகளைப் பற்றியும், அவர்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு ஆற்றிய பங்கு பணிகள் பற்றியும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் ராஜாமுகமது. மேலும் புதுக்கோட்டை வரலாற்றையும் அறியும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது இந்த நூல்.

வெளியீடு:புதுக்கோட்டை வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம்,புதுக்கோட்டை.9443132922-ரூ.40.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top