இந்த இதிகாசம் (மகாபாரதம்) இந்தியாவில் மிகவும் பிரபலமானது. கிரேக்கர்கள் மீது ஹோமரின் கவிதைகள் எவ்வளவு செல்வாக்குபெற்றுள்ளதோ அவ்வளவு செல்வாக்கை இது இந்தியர் மீது பெற்றுள்ளது. (பக். 4).
அந்த கால போர் நியமங்கள் மிகவும் அலாதியானவை. போர் முடிந்து, மாலைநேரம் வந்ததும் இருதரப்பினரும் நண்பர் களைப்போல் பழகுவார்கள், ஒருவர் முகாமுக்கு இன்னொரு வர் செல்வார்கள். பகலில் மீண்டும் ஒருவரோடு ஒருவர் போர் புரிய ஆரம்பிப்பார்கள்.முகமதியர் படையெடுப்பு வரை இந்த அற்புதப் பழக்கம் இந்துக்களிடம் இருந்தது. குதிரைவீரன் காலாட்படை வீரனைத் தாக்கக்கூடாது. ஆயுதங்களில் விஷம் தோய்க்கக்கூடாது. சம பலம் இல்லாதவனை வீழ்த்துவதும், நேர்மையற்ற முறையல்ல. எதிரியின் துணையற்ற நிலையை அனுகூலமாக்கிக் கொள்ளக்கூடாது; இப்படிப் பல நியமங்கள் இருந்தன. இந்த நியமங்களை மீறுபவர்கள் ஒதுக்கப்பட்டனர்.
ஷத்திரியர்கள் இந்த வழியில்தான் பயிற்சி பெற்றார்கள். மத்திய ஆசியாவிலிருந்து அந்நியர் படையெடுப்பு ஏற்பட்ட போது, அவர்களிடம் இந்துக்கள் இதேமுறையில்தான் நடந்து கொண்டனர். அவர்களை பல தடவை முறியடித்து, சிலவேளைகளில் வெகுமதிகளுடன் சொந்த நாட்டிற்கு அனுப்பினார்கள்.
அந்நிய நாட்டைப் பிடிக்கக்கூடாது என்பது தான் நியமம்; ஒருவனை வெற்றிகொண்ட பிறகு, அவனைத் தகுந்த மரியாதையுடன் அனுப்பிவைக்க வேண்டும். ஆனால் முகமதியர் இந்து மன்னர்களிடம் இப்படி நடந்துகொள்ள வில்லை; வெற்றிகொண்டபின் அவர்களை ஈவிரக்கமின்றி அழித்தனர்.(பக்.54-56).
“(மகாபாரதப்) போரின் மிகப்பெரிய நிகழ்ச்சி என்ன வென்றால் அமரத்துவம் வாய்ந்த அற்புதமான கீதை என்னும் தேவகானம் நமக்கு கிடைத்ததாகும். இது இந்திய நாட்டின் பொது சாஸ்திரம், போதனைகளில் தலைசிறந்தது. குருஷேத்திரப் போர்க்களத்தில் போருக்கு முன்பு அர்ஜுனன் கிருஷ்ணருடன் நடத்திய உரையாடல். இதைப் படிக்காதவர் கள் உடனே படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுடைய நாட்டிலேயே அதன் தாக்கம் எவ்வளவோ உள்ளது. எமர்சனின்(Emerson) தூண்டுதலுக்கான மூலகாரணம் எது தெரியுமா? இந்த நூல், இந்தக் கீதை தான்.அவர் கார்லைலைப் (Carlyle) பார்க்கச் சென்றார். கார்லைல் அவருக்கு கீதையைப் பரிசாக அளித்தார்.
அந்த சிறுநூல்தான் எமர்சனின் சமரச இயக்கத்திற்கு ( Concord Movement) காரணமாகியது. அமெரிக்காவின் பெரிய இயக்கங்கள் அனைத்தும் ஏதாவது ஒருவகையில் இந்தச் சமரச இயக்கத்திற்கு கடன்பட்டவை.(பக்.61-62).
சுவாமி விவேகானந்தர் கலிபோர்னியாவில் பாஸதேனா சேக்ஸ்பியர் கழகத்தில், 1900, பிப்ரவரி 1 ஆம் நாள், மகாபாரதத்தைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவின் தமிழாக்கமே இந்த நூல். அமெரிக்க மக்களுக்கு, மகாபாரத்தின் சாரத்தை பிழிந்து தந்துள்ளார்.
மகாபாரதத்தின் ஒரு கதாபாத்திரத்தையும் மிக நேர்த்தியாக அறிமுகப்படுத்துகிறார் இந்த உரையில். பெண் கதாபாத்திரத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக அமெரிக்க மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். இந்த கையடக்க புத்தகம் மகாபாரதத்தின் சாரம். ஸ்ரீராமகிருஷ்ண மடம்.வெளியீடு.விலை ரூ.12.
# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #