Close
ஜூலை 8, 2024 12:24 மணி

புத்தகம் அறிவோம்.. ஜெயகாந்தன் உரைகள்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- ஜெயகாந்தன் உரைகள்

யோசித்துப் பார்த்தால் எல்லாமே புத்தகம் தான். மதங்கள் என்பது என்ன? கிருஸ்தவம் என்பது ஒரு நூல் பைபிள். இஸ்லாம் என்பது ஒரு நூல் குர்ஆன். நமக்கு ஒன்றல்ல பல நூல்கள். நூல்களைத் தெய்வமாக மதிக்கிற, பண்பு நமக்கு இருக்கிறது.

ஏனென்றால் அது நம்மை செம்மைப்படுத்துகிறது. வழி நடத்துகிறது. வெளிச்சம் தருகிறது. பலம் தருகிறது. நம்மை நமக்கே நன்கு அறிமுகம் செய்கிறது. நாம் யார்? நம் முன்னோர்களை நாம் எப்படி தரிசிப்பது ? அதற்கு ஒரே வழி அவர்களது நூல்களைத் தரிசிப்பதுதான்(பக். 3).

எதையும் சிறப்பாகச் செய்தால் புகழ் உங்களை வந்து அடையும். சிறப்பாகச் செய்தல் வேண்டும். வையகம் காப்பவராயினும், சிறு வாழைப்பழக்கடை வைப்பராயினும் பொய் அகலத் தொழில் புரிதல் வேண்டும். அதுதான் சிறப்பு. அதற்கு உண்மையாக dedicated ஆக நீங்கள் செய்கிற வேலையை நீங்கள் நேசிக்க வேண்டும்.

அரை மனதோடும் குறையோடும் வேண்டா வெறுப்போடும் செய்தால் அந்தக் காரியம் சிறப்பதில்லை. ஆகவே அந்த பிழைதிருத்தும் பணிக்கு நான் என்னை பரிபூரணமாக ஒப்புக் கொண்டேன். அதற்கு என்னை அர்ப்பணித்தேன். அதிலே நமக்கு ரொம்பப் பேர் வந்தது.

ஜெயகாந்தன் புரூப் திருத்தினால் அதிலே ஒரு பிழை வராது. எனவே என்னை அது தொடர்ந்தது. தமிழ் மிகவும் நன்றியு டைய மொழி. அதற்கு பிழைதிருத்தியதால் அது என்னை விடவில்லை. தொடர்ந்து வந்தது. தமிழிலே பிழை தெரிந்தது எப்படி? பள்ளிக்கூடமே போகவில்லை. எனக்குப் பிழையில் லாமல் தமிழ் எழுதத் தெரிந்திருந்தது. அது ஒரு அருள். நம்ப வேண்டும்(பக்.6-7).

எனவே ஒன்றுக்குமே லாயக்கற்றவன் நான். வேற எந்த வேலைக்கும் போக முடியாது. நமக்குப் படிப்பும் வராது. எது என்னை உருவாக்கிற்று என்பதற்கு பதில் சொல்கிறேன். நான் பள்ளிக்கூடத்துக்கு போகவில்லையே தவிர படிக்காமல் இருந்ததில்லை.

கல்விக்கூடங்களுக்குத்தான் போகவில்லையே ஒழிய கற்காமல் இன்றுவரை இல்லை. உயிர் உள்ளவரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். நான் எழுதாமல் இருக்கலாம். ஆனால் படிக்காமல் இல்லை. நான் படிக்காமல் கூட இருக்கலாம். நான் சிந்திக்காமல் இருக்க வே முடியாது. சுவாசிக்காமல் எப்படி இருக்க முடியாதோ அது மாதிரி சிந்திக்காமலும் இருக்க முடியாது(பக். 13).

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி, “புத்தகம்” என்ற தலைப்பில் ஜெயகாந்தன் ஆற்றிய உரையிலிருந்து.

நாம் நிறைய தமிழ்க்கவிதையெல்லாம் படித்திருக்கிறோம். ஆனால் பாரதியின் கவிதையில் நமக்கு புதிய அறிவு பிரகாசிக்கிறது. அன்பைப் பற்றி அவர் சொல்கிற போது செய்க தவம். அன்பிற் சிறந்த தவம் இல்லை; அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு”

இன்பமாக இருப்பதற்கு என்ன வழி – அன்பு செய்தல் வேண்டும். துன்பப்படுபவர்கள் யார் அன்பு இல்லாதவர்கள் . அன்பு உடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு. நீதி, உயர்ந்த மதி, கல்வி இது எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் இருந்தால் போதும். அன்பு நிறைய உடையவர்கள் மேலோர். மேலோர் என்பவர்கள் யார் என்றால் அன்பு நிறைய உடையவர்கள் மேலோர். இந்த அன்பு கொண்டு பார்ப்பவர்களுக்கு பேதமில்லை (பக். 35, 37).

பாரதி மட்டும் இல்லாதிருந்தால் சுதந்திர சூரியனே உதித்திருக்காது. மத்தபடி காங்கிரஸ் கட்சி இல்லாமே போயிருக்கலாம். மகாத்மா காந்தி கூட இல்லாமல் போயிருக்கலாம் ஆனால் கவிஞர்கள் இல்லாமல் … கம்பன் என்றொரு மானுடன் சொன்னது அதற்குத்தான். கவிஞர்கள் அல்ல. மானுடம் வாழவந்த மானுடத்தை அதற்கு சிரஞ்சீவித் தனத்தைத் தருகிற மகானுபவர்கள் அவர்கள்.

எனவே அந்த சுதந்திர உத்வேகம் மக்களுடைய உள்ளத்தில் கிடந்தது. இந்த ஊமைச்சனங்களுக்கு வாயாய் இவர்கள் சிந்தனைகளை வெளிப்படுத்துகிற ஞான சூரியனாய் மகாகவி பாரதியார் விளங்கினார்(பக். 41, 43).

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் 2002 ஆண்டு பாரதி விருது வழங்கும் விழாவில், பாரதி விருது பெற்று ஜெயகாந்தன் நிகழ்த்திய உரை.

மேற்கண்ட இரண்டு உரைகளின் தொகுப்பே இந்த நூல். புத்தகங்களைப் பற்றியும், பாரதியைப் பற்றியும் இந்த உரைகளில் சொல்லியிருப்பவை வித்தியாசமானது. முழு உரையை வாசிக்க நியூசெஞ்சுரி புத்தக நிலையத்தை அணுகலாம். விலை ரூ.60.

#சா. விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top