“துப்புத் துலக்கல், கைது செய்தல், தண்டனை அளித்தல் ஆகியவற்றை விட, குற்றம் நிகழாமல் தடுத்தல்தான் காவல் துறையின் அடிப்படை என்பது என் உறுதியான கருத்து. காவல் துறை முழுவதிலும் நிகழ்ந்து வரும் வெளிப்பகட்டு தான் எனக்கு வேதனை தருகிறது.
குற்றங்களைத தடுத்தல், சீர்திருத்தல் பற்றி வெறும் வாய் வேதாந்தம் பேசப்படுகிறது. துப்புத் துலக்கல், கைது செய்தல் மகிமைப்படுத்தப்படுகிறது. முக்கியமான வினாவாக, ‘இவற்றையெல்லாம் தடுக்க முடியாதா?’, என்பது எழுவதேயில்லை. செய்ய வேண்டியதைச் செய்யாமல், வருங்கால வழிமுறைகளை வகுத்துக் கொள்வதை இவர்கள் எவ்வாறு கற்றுக் கொள்ள முடியும்?.(பக். 303).
“நான் அரசியலில் நுழையலாம் என்று பலரும் எனக்கு ஆலோசனை கூறி வருகிறார்கள். அரசியல் என்னைத் தீவிரமாக கவரவில்லை. நம் தேசத்தந்தை போல, தன்னை நாட்டுக்காக முழுமையாக அர்ப்பணித்துக் கொள்பவர்களுக் குத் தான் அரசியல் என்பது என் நம்பிக்கை. அதனால்தான் அதில் எனக்கு ஈடுபாடு ஏற்படவில்லை. நான் எப்போது பூரண அர்ப்பணிப்புக்குத் தயாராக இருக்கிறேனோ அப்போது நான் அரசியல் கடலில் குதித்து விடுவேன்.(பக். 305).
கிரண் பேடி கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பெண் சக்தியாக போற்றப்பட்டவர். கிரண் பேடியாக பெண்கள் தங்களை உருவகப்படுத்திக் கொண்டது உண்டு. அவருடைய வாழ்க்கை வரலாறு தான் இந்த நூல்.
இந்தியாவின் முதல் ஐபிஎஸ் பெண்மணி. நிறைய படித்தவர். திகார் சிறையில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்களுக்காக ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும், பிலிப்பைன்ஸ் வழங்கும் ரோமன் மகாசேசே விருது பெற்றவர்.
ஆனால் அரசியலுக்கு வந்து தன் தனித்தன்மையை இழந்தவர் என்றாலும், “I dare ” KIRAN BEDI என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கமான இந்த புத்தகத்தை அனைவரும் வாசிக்கலாம்.
இவரின் சிறைத் துறை சீர்திருத்தங்கள் மிகச் சிறந்த மனிதாபி மானத்திற்கு எடுத்துக்காட்டு. அவர் காவல் துறைக்கு கொடுத்த கொடை அது. கவிஞர் புவியரசு சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். வெளியீடு- கண்ணதாசன் பதிப்பகம்.
# சா. விஸ்வநாதன்- வாசகர்பேரவை-புதுக்கோட்டை #