.அவருக்கு புகழும் இருந்தது. இகழும் இருந்தது. இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாது, அவர் முன்னேறிச் சென்றதுதான் அவரது ஒற்றைச் சாதனை. பிறரிடமிருந்து கிடைத்த வழிகாட்டல்கள் அவருக்கு பெரிதும் உதவின.
ஆனால் அடிப்படையில் அவரது உள்ளார்ந்த குணங்களை, நல்லமனம், எளிமை, தன் சுயத்தை அழித்துக் கொண்டதுதான் அவரை அவரது தலைமுறையின் பிரியத்துக்குரியவராக ஆக்கின. அவர் அதிகம் மதிக்கப்பட்ட மனிதராக, அதிகம் மதிக்கப்பட்ட பாடகியாக மாற உதவின.
“எம்.எஸ்ஸின் நல்ல மனத்தின் வசீகர அம்சம், அது முற்றிலும் இயற்கை ஆனது என்பதுதான். பிறரைப் பற்றி தவறாக நினைக்க மாட்டார். பொறாமை என்றால் என்னவென்று தெரியாது. சதாசிவத்தை (கணவர்) நேசித்த ஒவ்வொரு மனிதருக்கும் அவரை வெறுத்த இருவர் இருப்பார்கள் என்று பொதுவாகச் சொல்வார்கள்.
ஆனால் ஏதேனும் ஒரு விஷயத்துக்காக எம்.எஸ்ஸை ஒருவர் வெறுத்ததாக ஒரு சம்பவமும் கிடையாது. கடும் போட்டி நிலவும் ஒரு தொழிலில் எதிரிகளே இல்லாத ஒரே கலைஞர் அவர். அவருக்குப் போட்டியாக இருந்தவர்கள் அவரது ஆதரவை பெற்றவர்களாக இருந்தார்கள்.
எம். எல் வசந்தகுமாரி ஆனந்தவிகடனில் (1967 ஜனவரி) எம்.எஸ்ஸின் பெருந்தன்மைபற்றி மிக அழகாக பின்வருமாறு எழுதினார். ‘எம் .எஸ் . தன் இயல்பினாலேயே, எல்லோரும் இசையில் முழுமையை , நல்ல நிலையை அடைய வேண்டும் என்று நினைப்பார்.
மற்றவர்களது கச்சேரி சுமாராக இருந்தாலும் கூட, எந்த தயக்கமுமின்றி புகழ்வார். எளிமை, கடவுள் மீதும், கணவர் மீதும் பக்தி, பெரியவர்கள் மீது மரியாதை, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் ஆகிய குணங்கள் தான் அவரை மகத்தானவராக மாற்றின’
(பக். 240).
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா குறையொன்றுமில்லை கண்ணா குறையொன்று மில்லை கோவிந்தா…
இது ராஜாஜி எழுதி எம்.எஸ்.சுப்புலெட்சுமி பாடிய பாடல்.
எம். எஸ்.குறையொன்றுமில்லாத மனுசி.நேரு சொன்னது போல்”நான் சாதாரண பிரதமர். ஆனால் அவர் இசை அரசி”. மதுரை சண்முகவடிவு சுப்புலெட்சுமிஒரு இசை சகாப்தம்.
காநாடக இசையின், இன்றும் என்றும், அடையாளம்.
இரண்டு ‘லஷ்மி’ க்கள் தமிழக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றவர்கள். ஒருவர் புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி மற்றவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இருவரும் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்திருக் கிறார்கள். மருத்துவக் கல்வி மூலம் டாக்டர் முத்துலெட்சுமி,. இசையின் மூலம் சுப்புலெட்சுமி. இசையின் மூலம் தனக்குக் கிடைத்த வெகுமானங்களை எம்.எஸ்.போல பிறருக்கு அள்ளி கொடுத்தவர் யாருமில்லை. முத்துலெட்சுமி “பத்மபூஷன்” வரை வந்தார். எம்.எஸ். இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்ன ” விருதையும் பெற்றார்.
ஆனால் விருதெல்லாம் அவரை குதூகலிக்கச் செய்யவில்லை. அதோடு …. எல்லாவற்றையும் தாண்டி ..கர்நாடக இசை உலகில் எம்.எஸ் -ஸை விட மனித இனத்தை நேசித்தவர் ஒருவருமில்லை என்கிறார் டி.ஜே.எஸ்.ஜார்ஜ்.
டி. ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதியுள்ள “எம்.எஸ்.சுப்புலட்சுமி – உண்மையான வாழ்க்கை வரலாறு “உண்மையில் உண்மையான வாழ்க்கை வரலாறே. எதையும் விட்டு விடாமல், எம்.எஸ் -ஸின் முழு உலகத்தையும் விருப்பு வெறுப்பின்றி, உண்மையின் பக்கம் நின்று எழுதியிருக்கிறார் ஜார்ஜ்.
எம்.எஸ். கால சமூகம் தொடங்கி, கர்நாடக இசை வரலாறு, கர்நாடக இசை உலக பெண்களின் நிலை, அரசியல் சூழல்கள், எம்.எஸ் -ஸோடு தொடர்புடைய மனிதர்கள், கணவர் சதாசிவத்திற்கும் இவருக்குமான உறவு, எம்.எஸ்.ஸின் சமூக பங்களிப்பு என்று எம்.எஸ் -ஸோடு தொடர்புடைய அனைத்து செய்திகளையும் நமக்குத் தந்திருக்கிறார் ஜார்ஜ்.
ஜார்ஜ் மிகச்சிறந்த பத்திரிக்கையாளர். இந்தியன் எக்ஸ்பிரஸ் ஞாயிறு இதழில் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் வாரந்தோறும் கட்டுரை எழுதியவர். நேர்மையான பத்திரிகையாளர். இந்த நூலையும் நேர்மையாக எழுதியுள்ளார்.
மொழி பெயர்ப்பாளர் ச. சுப்பாராவ் தமிழின் சிறந்த எழுத்தாளர். இந்த நூலை ஆத்மார்த்தமாக மொழிபெயர்த் திருக்கிறார் அவர்.எம்.எஸ் -ஸை அறிய வேறு நூலைத் தேட வேண்டாம். இது ஒன்றே போதும்.
இன்றும் எம்.எஸ்ஸின் குரல் கேட்டுதான் வேங்கடாசலபதியே கண் விழிக்கிறார். எம்.எஸ்ஸும் அங்கே சிலை வடிவில் நின்று பாடிக்கொண்டிருக்கிறார் “சுப்ரபாதத்தை “.வெளியீடு :பாரதிபுத்தகாலயம்,சென்னை.044 24332424.
# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #