Close
ஜூன் 28, 2024 6:39 காலை

புத்தகம் அறிவோம்.. நல்லாரைக் காண்பதுவும்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- நல்லாரைக்காண்பதுவும்

மக்களை நினைத்து, அவர்களை நேசித்து, அவர்களுக்கு வேண்டியதைச் செய்து , அவர்களோடு இணைந்து அன்பு காட்டி, அரவணைத்து அவர்களுக்காகவே வாழ்வது தான் மக்கட் பண்பு. எனவே இவை அனைத்தும் பொருந்தியவர்தாம் நம் கர்மவீரர் . அந்த மக்கள் பண்புகள் அனைத்தும் நிறைந்தவர் நம் காமராஜர்.

அதனால்தான் அவர் பெருந்தலைவர் தலைவர்களுள் அவர் தனித்து நின்றார். அவர் வாழும் போது, அவர் மதிப்பினை உணராதவர்கள் , அவர் மறைந்த பிறகு அவரைக் கொண்டாடி வருகின்றனர். அதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பெருமை.(பக். 1).

எப்போதும் சிரித்த முகத்துடனும், தம் வெற்றிலைக்காவி படிந்த பற்களோடு காட்சிதரும் அவர் இனமானப் பேராசிரியர் என்று தம் தொண்டர்களாலும் அன்பர்களாலும் அழைக்கப்பட்டார்.

அது என்ன இனமானம்? ஆம், தமிழகத்தைப் போற்றி, எந்த ஒரு நிலையிலும் தமிழ் மொழியை விட்டுக் கொடுக்காமல், தமிழரை அரவணைத்துக் கொண்டு, எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் ! என்று எங்கும் பறை சாற்றி, எந்தச் சூழ்நிலையிலும் தாய் மொழியாம் நம் தமிழ் மொழியினை தமிழர்கள் விட்டுக் கொடுக்காமல் தன்மானத்துடன் வாழ வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லி தமிழரின் மான உணர்ச்சியை தூண்டி விட்டு, அவர்தம் மானத்தைக் காத்து வந்த காரணத்தினால் தான் அவர் இனமானப்பேராசிரியர் – அதுவே அவர் தமிழ்மானம்(பக். 14, 15).

கவிதையின் கனமே கற்பனைதான். ஆனால் அந்தக் கற்பனை, அக்கவிதையினை நாம் படிக்கும் போதோஅல்லது அதனை மற்றவர் எழுச்சியுடன் படித்து நாம் கேட்கும் போதோ அது மனத்தினுள் புகுந்து நம் சிந்தனையைப் பாதிக்க வேண்டும். ஆம்! அத்தகைய கவிதையினை வழங்கும் கவியுலகின் ஓர் கற்பனைக் களஞ்சியம் தான் நம் கவிக்கோ அப்துல் ரஹ்மான்(பக். 109).

இப்படி தான் சந்தித்த 70 ஆளுமைகளின் சிறப்புகளைச் சொல்லி, அவர்களோடு தனக்கிருந்த மேன்மையான உறவுகளை அழகாக, ‘தமிழ் நாடக மேதை’ அவ்வை டி.கே.சண்முகம் அவர்களின் மகன் டி.கே.எஸ்.கலைவாணன், எழுதியிருக்கும் நூல் தான்

நல்லாரைக் காண்பதுவும் .நம்முடன் வாழ்ந்து மறைந்த நல்லோர், நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லோர் என்று இரண்டு பகுதிகளாகப் பிரித்து எழுதியுள்ளார்.

அவர் தாம் பெருந்தலைவர் – கு.காமராஜ்,

அரசியலில் விடிவெள்ளி – பேரறிஞர் அண்ணா,

மக்கள் நேசித்த மக்கள் தலைவர். ஜி.கே.மூப்பனார்,

தமிழ்வளர்க்கும் செம்மொழிப் பேராசிரியர்-தி. இராசகோபாலன் – 

என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டம் தந்து ஒவ்வொருவரைப் பற்றியும் சிறப்பான சித்திரம் வரைந்திருக்கிறார் கலைவாணன்.

இந்த பட்டியலில் அரசியல் ஆளுமைகள், தமிழ் வளர்த்த பெரியோர்கள், கலை உலகம் கண்ட பெருமக்கள், தொழில் துறை சாதனையாளர்கள், ஆன்மீகச் செம்மல்கள், இசை விற்பனர்கள், பத்திரிக்கையாளர்கள், பதிப்புச் செம்மல்கள் என்று யாவரும் அடங்குவர் .

புகழ் வெளிச்சத்தில் உள்ளவர்களும் உண்டு, இல்லாதவர்களும் உண்டு.கலைவாணன் சொல்வது போல் “வாசிக்கும் உங்களுக்கு 70 ஆளுமைகளைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளாலாம். எனக்கு, அவர்களுக்கு நன்றி சொல்லிய நூல் .வானதி பதிப்பகம். 044 – 24342810, விலை-ரூ.350.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top