Close
நவம்பர் 21, 2024 3:28 மணி

புத்தகம் அறிவோம்… பாபா சாஹேப் அம்பேத்கர்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- பாபாசாஹேப் அம்பேத்கர்

டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், மனித குலத்தின் மகத்தான கனவு. ஒரு தத்துவஞானி தொட்டால் இரும்பும் பொன்னாகும் என்பார்கள். நான் திருமதி அம்பேத்கராக ஆனதும் நடந்தது அதுதான் – டாக்டர் அம்பேத்கர் என்ற தத்துவஞானியுடன் எனக்குச் சந்திப்பு ஏற்பட்டதும் என் வாழ்க்கைப் பொன்னாக மாறிவிட்டது.

மாபெரும் சகாப்தத்தை உருவாக்கிய மனிதரின் துணையாக அவருடைய வாழ்வின் பிற்பாதியிலிருந்து அவர் மறையும் வரை நிழல் போல் கூடவே இருந்தேன் உடல், பேச்சு, உள்ளம் எல்லாவற்றையும் ஒன்றாக்கி அவருக்கு சேவை புரிந்தேன்.

அவரை வழிபட்டேன். மகத்தான சகாப்தத்தை வரையருக்கும், உலகின் மகிமையாக இருந்த இந்த மனிதருடன் என்னுடைய வாழ்க்கை நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டுவிட்டது. இதை விட நிறைவான வாழ்க்கை வேறு எண்ணவாக இருந்து விட முடியும்?

“ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் அவருடைய மனைவியின் பங்களிப்பு இருக்கிறது என்று சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது. முதல் பாதியில் ரமாபாயும் இரண்டாம்பாதியில் நானும் இந்தச் சொலவடைக்கு ஆதாரமாக நிற்கிறோம்(பக். 34).

“தலித்துகளின் ஓட்டுமொத்த முன்னேற்றத்துக்காக டாக்டர் அம்பேத்கர் தன்னைப் பின்பற்றுவர்களுக்கு மிகச்சிறந்த செய்தி ஒன்றை வழங்கினார் – ‘கற்றுக் கொள்’. அவர் தன்னுடைய முயற்சியால் ஒரு முழுத் தலைமுறையையும் கற்க வைத்தார்.

ஆனால் அப்படிக் கற்றவர்கள் உண்மையான அர்த்தத்தில் கற்றறிந்தவர்களாகவும் அறிவாளிகளாகவும் மாறிவிட்டார் களா? டாக்டர் அம்பேத்கர் முன்வைத்த கல்விக்கான வரைமுறையை அம்பேத்கரின் தொண்டர்கள்உள்ளபடியாக புரிந்து கொண்டார்களா? ஆழ்ந்த வருத்தத்துடன் இதைச் சொல்லித் தான் ஆக வேண்டும், என்னுடைய பதில், இல்லை.

‘கற்றுக் கொள்’ என்ற வார்த்தையின் ஊடாக, பட்டங்கள் வாங்குவதை மட்டும் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடவில்லை. எல்லாவகையிலுமான கல்வி, ஞானம், கூறு என்பதும் அதில் அடங்கும் (பக்.35,36) நூலின் முன்னுரையில் சவிதா அம்பேத்கர்.
நான் -சவிதா – மனம் புரிந்து கொண்ட நபர்.

“சுதந்திர இந்தியாவின் அரசமைப்பைச் செதுக்கிய சிற்பி, இந்தியக் குடியரசின் முதல் சட்ட அமைச்சர், இந்தியாவின்புக்கர் டி. வாஷிங்டன், பெளத்த தம்மச் சக்கரத்தை தொடங்கி வைத்த போதிசத்துவர், மானுட விடுதலைக்கு துணை நின்ற மாமனிதர், மானுட சுயமரியாதைக்காக போராடிய மாவீரர்.

நவயுக மநு, உலகின் தலைசிறந்த ஐந்து அறிவு ஜீவிகளில் ஒருவர், ஆகச்சிறந்த சட்ட ஞானி, நிராதரவான இந்தியர்களின் மீட்பர், ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர், உலகின் மாபெரும் மனித நேயவாதி, ஐனநாயகப் பாதுகாவலர், திறமை மிக்க நாடாளுமன்றவாதி, மிகச்சிறந்த அமைப்புவாதி.

நேரு அமைச்சரவையின் ரத்தினம், புரட்சிகர மெசியா, சமூக சீர்திருத்தவாதி, பாரத ரத்னா, உலகின் பெருமிதம், இப்படி யான வார்த்தைகளில் ஏதேனும் ஒன்று நினைவுக்கு வரும் தருணத்தில் ஒரே ஒரு உருவம் தான் அகக் கண்ணில் பளிச்சிடும்.

அது டாக்டர் பாபாசாஹேப் என்ற பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். டாக்டர் அம்பேத்கரின் பெயரை நினைவு கூறும் தருணத்தில், புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங் களிருந்து அவர் பெற்ற நீண்ட பட்டங்களின் பட்டியலும் நினைவுக்கு வந்து விடும்.

ஆறு ஆண்டுகள் என்ற மிகக் குறுகிய காலத்துக்குள், எம்.ஏ., பிஹெச்.டி, ,டி.எஸ்சி., எல்.எல்.டி., டி.லிட்., பார் – அட் – லா ஆகியவற்றைப் பெற்றார். உயர் கல்வியில் பெருந்திரளான பல பட்டங்களைப் பெற்றுச் சாதனை படைத்தார். டாக்டர் அம்பேத்கர் தனது அருஞ்செயல்களாலும் பெருந்தியாகத் தாலும், மேற்குறிப்பிட்டபுகழுரைகளுக்கு வேறு பரிமாணம் கொடுத்தார்.(பக். 41).

டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்காருக்கும் டாக்டர் ஷாரதா கபீருக்கும் – பின்னர் சவிதா அம்பேத்கார் -1948 ஏப்ரல் 15 -ல் திருமணம் நடைபெற்றது. சவிதா சாரஸ்வத் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இந்தத் திருமணம் அன்று பேசு பொருளாக இருந்திருக்கிறது. இந்தத் திருமண நாளிலிருந்து அம்பேத்கர் இறக்கும் வரை அவருக்கு உறுதுணையாக உயிருள்ள நிழல் போல் இருந்திருக்கிறார்.

அம்பேத்கர் மறைந்து நீண்ட இடைவெளிக்குப்பின், இந்த நூல், சவிதா சொல்ல, விஜய் ராவ் என்பவரால் எழுதப்பட்டு, “டாக்டர் அம்பேத்கராஞ்ச்யா சகவாசத்” என்ற தலைப்பில் மராத்தியில் 1990 ல் வெளியிடப்பட்டிருக்கிறது. 2020 ல் நதீம் கான் என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, தற்போது நம் கையில் இருப்பது த.ராஜன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள ‘பாபா சாஹேப்’.

சவிதா, இந்த தன்வரலாற்றில் நிறைய விஷயங்களைப் பேசுகிறார்.மருத்துவராகஅம்பேத்கருக்கு அறிமுகமாகி, காதலியாகி, மனைவியாகிய செய்தியை உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறார். உயர்சாதியில் பிறந்திருந்தாலும், வயது வித்தியாசம் மிகுந்திருந்தாலும், அம்பேத்கருக்கு மனைவியானதை வாழ்வின் பெரும் பேராகக் கருதி, அவரிடம் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டதை சிறப்பாக பதிவிட்டிருக்கிறார். சவிதா-அம்பேத்கருக்கிடையே நடந்துள்ள கடித உரையாடல்கள் மிகச் சிறந்த காதல் கதை. இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நேசித்திருக்கிறார்கள்.

அம்பேத்கரின் அன்றாடச் செயல்பாடுகள்,அவருக்கு பிடித்த உணவு வகைகள்,அரசியல் அமைப்பை எழுதும் போது 16 முதல் 18 மணி நேரம் உழைத்தது,சட்ட அமைச்சராகப் பணியாற்றியது, அந்தக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் குறிப்பாக இந்து சட்டத் தொகுப்பு.

பெளத்த சமய மாற்றம், அது தொடர்பான நிகழ்வுகள், அம்பேத்காரின் ஒரே மகன்ஜெயந்திற்கும் இவருக்குமிடை யேயான உறவு, ஜெயந்த் தவறு செய்யும் போது அம்பேத்கர் கண்டித்தது மேலும் அரிதினும் அரிதான செய்திகள் பல இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது.

அம்பேத்கர் மறைவிற்குப்பின், சவிதாவின் மேல் விழுந்த கொலைப்பழி, அதிலிருந்து மீண்டு வந்ததையும் மிகுந்த வருத்துடன் பதிவு செய்கிறார். மேலும் அம்பேத்கர் இயக்கங்கள் திசை மாறி போன செய்திகளும் சோகத்துடன் உள்ளது.

இந்நூலில் உள்ளது பலருக்கும் உகந்ததாக இருக்காது என்றாலும்”இந்த தன் வரலாற்றுப் புத்தகம் என்னுடைய இதயத்தின் அடியாளத்திலிருந்து உருவாகியிருக்கிறது. இதன் நோக்கம் என் தரப்பு நியாயத்தை முன்வைப்பது மட்டுமல்ல. டாக்டர் அம்பேத்கருடன் வாழ்ந்ததின் வழியாக நான் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும், அவர் மறைந்த பின் நெருப்பி னூடாக நடக்க நேர்ந்த சோதனைக் காலத்தையும் பதிவு செய்வதுதான் ” என்ற சவிதாவின் வரிகளையும் நினைவில் கொள்ள வேண்டும்.

“என் வாழ்நாளை பத்தாண்டுகள் நீட்டித்துத் தந்து, வாழச் செய்த பெண் சவிதா ” என்று அம்பேத்கரால் சொல்லப்பட்ட, ஒரு மாபெரும் மனிதனுக்கு தன்னை முழுமையாக அர்பணித் துக் கொண்ட ஒரு உன்னத மனுஷியை வாசிப்போம் வாருங்கள். எதிர் வெளியீடு,பொள்ளாச்சி,99425 11302.

#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top