Close
செப்டம்பர் 20, 2024 8:33 காலை

புத்தகம் அறிவோம்… நட்பெனும் நந்தவனம்…இறையன்பு

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- நட்பெனும் நந்தவனம்

நட்பு ஆயுளை அதிகரிக்கும் அபூர்வ லேகியம். அளவின்றி உண்டாலும் உபத்திரவம் செய்யாத உன்னத மாமருந்து நட்பு எனும் பண்பாட்டு அமிர்தம். நாம் பிறக்கும் போது இல்லாமல் இருந்த இன்னொரு பகுதியே இனிய நண்பன்(பக். 15).

தனி வாழ்வில் மகிழ்ச்சியையும், நேர்மையையும், பாதுகாப்பையும் சமூக வாழ்வில் நல்லிணக்கத்தையும், மானுடத்திற்கு அமைதியையும் வழங்கும்படி அமைவதே நட்பின் அடிப்படைத் தத்துவம்(பக். 47).

நட்பு நீடிப்பது மகிழ்ச்சியில் கரம் கோர்ப்பதால் அல்ல; வெற்றியில் விருந்து உண்பதால் அல்ல; சொத்தை அனுபவிப்பதால் அல்ல. மாறாக துயரத்தில் தோள் கொடுப்பதால்; தோல்வியில் ஊக்கம் கொடுப்பதால்; வறுமையில் வளம் கொடுப்பதால்; பட்டினியில் சோறு படைப்பதால் : ஆதரவற்று இருக்கும் போது அடைக்கலம் தருவதால்(பக். 63).

‘நான் பூரணமானவன்’ என்று எண்ணுகிற ஒருவர் வளர வாய்ப்பே இல்லை. ஓடுகிற நதியாக இல்லாமல் தேங்குகிற குட்டையாக அவர்கள் இருந்து விடுவார்கள். ‘நான் குறையுடையவன், என்னைத் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன். என்ற எண்ணம் இருக்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்தே சில நேரங்களில் நம் குறைகளை நாம் உணர முடியும்…

நண்பர்கள் மூகநூல் நண்பர்களாக மட்டும் இருக்கக்கூடாது. அவர்கள் நம் முகமாக இருக்க வேண்டும். கண்களாக இருந்து நம் பார்வையை கூர்மையாக்க வேண்டும். மூக்காக இருந்து நம் உயிர்ப்பை நீட்டிக்க வேண்டும். செவிகளாக இருந்து இனியவற்றை நுகரும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதழ்களாக இருந்து இனிய சொற்களைப் பேசுகின்ற மனிதர்களாக மாற வேண்டும்(பக்.,312,313).

இன்று நட்பு குறைந்து வருவதற்கு படிப்புச் சூழலும் காரணம். மதிப்பெண்களை மட்டுமே வைத்து பெற்றோர் குழந்தைகளை வளர்க்கிறார்கள், நட்பைச் சொல்லித் தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. நன்றாகப் படிக்கும் மாணவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும் என்கிற நிபந்தனைக ளையும் விதிக்கிறார்கள்.

நன்றாகப் படிக்கும் மாணவன் நல்ல நண்பனாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இரண்டு பேரும் நன்றாகப் படித்தால் போட்டியும், பொறாமையும் ஏற்படும். சுயநலம் சார்ந்த வளர்ப்பு முறை அவர்களை நண்பர்கள் இல்லாத நிலைக்கு தள்ளிவிடுகிறது(பக். 336).

மற்ற எல்லாக் காலங்களையும் விடவும் நட்புக்கான தேவை இன்று அதிகரிப்பதாகவே படுகிறது. நல்ல நண்பர்கள் பணியில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க பயன்படு கிறார்கள். நம்மை அறியாமல் அவ்வப்போது சுருட்ட நினைக்கும் தனிமையை தவிர்க்க நண்பர்கள் தோள் கொடுக்கிறார்கள். இன்றும் உதவி என்றால் மூன்னுக்கு வந்து நின்றும், பந்தி என்றால் கடைசியில் பங்கெடுக்கும் வாழ்வை இனிமையாக்குகிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள்(பக். 339).

“புத்தகங்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்” என்பார் டாக்டர் அப்துல் கலாம்.அர்த்தசாஸ்திரத்தில் ஒரு உரையாடல். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். “ஏன அவர்கள் தானே எல்லாச் சூழ்நிலையிலும் நம்மோடு இருப்பவர்கள்? ”

“ஆம், நம்மோடு இருப்பவர்கள்தான். ஆனால் நம்மைப் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள். நம்முடைய பலம் பலவீனம் எல்லாம் அவர்களுக்குத் தெரியும். எப்போது வேண்டுமானாலும் நம்மைக்கவிழ்க்கலாம். ( இந்திய அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா )

புதுக்கோட்டை பேக்கரி மகராஜ் நிறுவனர் மறைந்த சீனு. சின்னப்பா சொல்வார் “ஒரு நல்ல நண்பன் இருந்தால் போதும்” என்று. ஏனென்றால் அவருடன் வாழ்நாள் முழுவதும் பயணித்தவர் பாலு என்ற ஒரே நண்பர்தான்.

தன் தொழிலை வளர்க்க உதவியும் பின்னர் துரோகமும் செய்த தன் நண்பரை மன்னித்தவர் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன்.

இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் இறையன்பு வின்”நட்பெனும் நந்தவனம்.”நட்பிற்கான ஒரு முனைவர் பட்ட ஆய்வு நூல் என்று இதைச் சொல்லலாம்.இறையன்பு சொல்வது போல் முழுக்க முழுக்க நட்பைப் பற்றியே அலசும் முதல் தமிழ் நூல் இதுவாகத் தானிருக்கும்”.நட்பின் மகத்துவம்,நட்பின் தத்துவம்,நட்பின் இலக்கணம்,நான்குவித நண்பர்கள் (அவசிய நண்பர்கள், ஆத்மார்த்த நண்பர்கள்,நெடுங்கால நண்பா்கள், பேருக்கு நண்பர்கள்).

இந்திய நட்பு,சரித்திரத்தில் நட்பு,இலக்கியத்தில் நட்பு, நண்ப னும் ஆசானே, கிரேக்க நட்பு,ஆண் -பெண் நட்பு -நட்பு வேறுபாடு,போலி நண்பர்கள் ,எதிர்மறை நண்பர்கள்,நல்ல நண்பர்கள் – போன்ற 70 தலைப்புகளில் இந்த நூல் வரையப்பட்டுள்ளது.

ஒரு ஆய்வு நூலுக்கு தரப்படுவது போல், இந்த நூல் எழுதுவதற்கு உதவிய நூல்கள், உரைகள் பட்டியலை 7 பக்கங்களுக்கு தந்துள்ளார் இறையன்பு.

உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும்,உற்சாகமான வாழ்க்கைக்கு நல்ல நட்பு அடித்தளம் என்பதையும், நட்பில்லாத வாழ்க்கை பாலையில் நிகழும் பயணம் என்பதையும் வலியுறுத்தவே இந்த நூலைஎழுதினேன் “என்கிறார் இறையன்பு நூலின் இறுதியில் .நல்ல நட்புலகத்தை உருவாக்க, வாசிப்போம்” நட்பெனும் நந்தவனம்”

வெளியீடு- கற்பகம் புத்தகாலயம்,சென்னை. 600017
044 – 2431 4347.ரூ.420.

நன்றி🙏இந்த நூல் அரங்கத்தில்  500 நாட்கள் தொடர் ஒட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த வாசிப்பு தொடர் ஓட்டத்தில் 500 நாட்களும் என்னுடன் பயணித்த நட்புகளுக்கும், இடையில் இணைந்து வாசித்த நட்புகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நூலை வாசித்து கருத்துச் சொல்லி, கூடுதலாக தகவலைத் தந்தவர்களுக்கும்
எனது நன்றி.🙏நன்றி.🙏 எனது இந்த தொடரில் முதல் நூலும், 500 -ஆவது நூலும் இறையன்பு எழுதியது.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top