தமிழகத்திலே புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பெயர் வைக்கப்படுவது அக்குழந்தை எந்த சாதியினருக்குப் பிறந்தது என்பதை மட்டும் கொண்டு அமைவதில்லை. தமிழகத்து கிராமங்களில் பெரும்பாலும் பாட்டனுடைய பெயர் பேரனுக்கும், அதே போல பேத்திக்கு பாட்டியின் பெயர் வைக்கப்படும்….
லட்சுமி என்ற பெயருடைய பெண் நிச்சயமாக புதன்கிழமை பிறந்ததாக இருக்கும். அது புனித நாள் என்றும் எனவே லெட்சுமி தெய்வத்தினுடைய செல்வமும் மகிழ்ச்சியும் அந்தக் குழந்தைக்கு கிடைக்கும் என்றும் கூறுவர்…..
மண்ணாங்கட்டி என்ற பெயர் தமிழகத்தில் அரிதாகத் தான் விளங்கிவருகிறது. துயரத்தையும் மோசமானதையும் குறிக்கிறது இப்பெயர்.எக்காரணங்களாலோ தங்களுக்கு மேலும் குழந்தைகள் வேண்டாம் என்று கருதுகின்ற பெற்றோர்கள் இம்மாதிரிப் பெயர் வைப்பர்(பக். 19).
“வேளாண்மை மாந்தரியல்பு” என்று வர்ணிக்கப்படும் தமிழ்வேளாண் குடிமக்களிடையே நிலவும் ஒருவித ஒழுக்கநெறிகளைக் குறிப்பிட வேண்டியது அவசியமானதே. ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டிய பத்து ஒழுக்கங்களை அது உள்ளடக்கியதாகும். அவையாவன, ஆணை வழி நிற்றல், அழிந்தோரை நிறுத்தல், கைக்கடனாற்றல், கசிவகத்துண்மை, ஒக்கல் போற்றல், ஓவா முயற்சி, மன்னிறை தருதல், ஒற்றுமை கோடல், விருந்து புரந்தருதல், திருந்திய வொழுக்கம். இவற்றை மக்கள் இறக்கும் வரை கடைபிடிக்க வேண்டுமென்று அறநூல் இயம்புகிறது(பக்.97).
ரஷ்ய ஆய்வாளர், தமிழறிஞர் டாக்டர் விதாலி ஃபுர்னிக்கா வின்”பிறப்பு முதல் இறப்பு வரை” – தமிழகக் காட்சிகள் -ரஷ்ய – ஒரு ஐரோப்பிய மொழியில் வந்த முதல் புத்தகம். ஆசிரியரே சொல்வது போல் “வாசகர் ஒரே நாளில் இந்நூலினை படித்து முடிக்கக் கூடும். ஆனால் இதனை எழுதி முடிக்க எனக்கு இருபது ஆண்டு காலம் தேவைப்பட்டது.
அவர் தமிழகத்தில் இருந்த காலத்தில் நேரடியாக தமிழர்களோடு பழகியது மட்டுமல்லாமல், நூற்றுக நூற்றுக்கணக்கான தமிழ் நூல்கள், செய்திப் பத்திரிக்கைகள், திரைப்படங்கள், கிராமங்களுக்குச் சென்று பார்த்து, கேட்ட விஷயங்கள் யாவற்றையும் முறையாக ஆய்வு செய்தே இந்த நூலை எழுதியிருக் கிறார். இவ்வளவு உண்ணிப்பாக நாம் நமது சடங்கு சம்பிரதாயங்களை கவனித்திருப்போமா என்பது சந்தேகமே.
பிறப்பு முதல் இறப்பு வரை, தமிழர்களிடை டையே உள்ள – குழந்தை பிறப்பு, பெயர் வைப்பது, காத்து குத்து, பூப்பூ நிராட்டு, திருமணம், இல்லறம், இறப்பு, ஜோதிடம், தமிழக விழாக்கள், எண்கள் மீதான நம்பிக்கை என்று – ஒவ்வொன்றைப் பற்றியும், அது தொடர்புடைய சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் யாவற்றையும் சித்திரமாக்கித் தந்திருக்கிறார் ஃபுர்னிக்கா நமக்கு.
திருமணம் என்றால் அது ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கக் கூடிய மாறுபட்ட பண்புகளையும் படமாக்கித் தந்திருக்கிறார்.தமிழ் மொழி பெயர்ப்பு ஒரு நாவலைப் போல சுவையாக வாசிக்கும் அளவிற்கு உள்ளது.இந்த நூலில் உள்ள அனைத்து செய்திகளும் அடிப்படையில் இன்னும் எந்த மாற்றமும் அடையவில்லை என்பதே இந்த நூலின் சிறப்பு. நியூசெஞ்சுரி புத்தக நிலையம் 1986 ல் வெளியிட்டுள்ள இப்புத்தகம் இப்போது கிடைக்குமா என்று சொல்ல முடியாது.( 184 பக்கம்) விலை-ரூ.15 (1986).
#சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை#