Close
அக்டோபர் 5, 2024 6:49 மணி

புத்தகம் அறிவோம்… நம்மாழ்வார் ஆயிரங்காலத்துப்பயிர்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- நம்மாழ்வார்

நம்மாழ்வார்..தமிழகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் இவரது கால்கள் பயணப்பட்டுள்ளன. சின்னஞ்சிறு சிற்றூர் முதல் பல பெரிய நகரங்கள் வரை இவரது குரல் முழங்கியதுண்டு. ஏதாவது பேருந்தின் கடைசி இருக்கையில் இருந்து கொண்டு பயணம் செய்து கொண்டிருப்பார். ஏதாவது ஒரு ஊரில் இயற்கை வேளாண்மைப் பற்றிய ஓர் உரை நடந்து கொண்டே இருக்கும்(பக். 7).

பேச்சாற்றல் இயல்பாகவே அவருக்கு அமைந்துவிட்டது. திருக்குறளில் இருந்தும் அவ்வையார் பாடல்களிலிருந்தும் மேற்கோள் காட்டுவதில் அவருக்கு நிகர் அவரே. மிக எளிய சொல்லாட்சி மூலமாக கடினமான கருத்துக்களைச் சொல்வதிலும் மிகத்திறன் மிக்கவர். மக்களின் பழமொழிகள், அதில் இருக்கும் உள்ளார்ந்த மெய்ப்பொருள் இவற்றை எடுத்துக் காட்டுவதிலும் புலமை பெற்றிருந்தார்.(பக்.8).

அவரது நடைபயணங்களில் முக்கியமானது பவானிசாகர் அணை முதல் கொடுமுடி வரை பவானி நதிநீரைப் பாதுகாக்க 25 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டதுதான். ஊர் ஊராகச் சென்று ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். அவரது கருத்துரைகள் மூலம் பல உழவர்கள் இயற்கைவழி வேளாண்மைக்கு மாறினார்கள்
(பக்.26).

தமிழகத்தில் விவசாயம் பற்றிப் பேசப் போனால் இருவர் நினைவுக்கு வருவர் ஒருவர் “பாரத ரத்னா” விருது பெற்ற டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன். மற்றவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். இருவருக்கும் நோக்கம் ஒன்றுதான் – எல்லோருக்கும் உணவு வேண்டும். ஆனால் வழி வேறு.ஒருவர் இரசாயன உரத்தின் மூலம் விவசாயத்தை ஊக்குவித்தவர்.

மற்றவர் அதனால் மக்களின் உடல் நலனுக்கு கேடுதல் விளைகிறது. மண் மலடாகிப் போகிறது. ஆகவே பாரம்பரிய இயற்கை விவசாயத்தை வாருங்கள் என்று அழைப்பு விடுத்தவர். MSS அளவிற்கு நம்மாழ்வார் அங்கீகாரப்படுத்தப்படவில்லை. நம்மாழ்வார் ஆதரவாளர் ஒருவர் சொல்கிறார்.”சென்னையில் ஓடுகின்ற ஆட்டோ எண்ணிக்கை அளவிற்கு MSS க்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது” என்று.

இந்த நூல் “நம்மாழ்வார் ஆயிரங்காலத்துப் பயிர்” , அவரின் மறைவிற்குப் பிறகு எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகளின் தொகுப்பு.பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்பது, நீர்நிலைகளை இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பது, மரபணு விதைகளுக்கு எதிரான போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு, வறண்ட நிலங்களில் வனங்களை உருவாக்கியது என்று நம்மாழ்வார் மேற்கொண்ட அத்தனை முன்னெடுப்புகளையும் , தகவல்களையும் தாங்கிய எட்டு கட்டுரைகள் இந்த நூலில் உள்ளது. சூழலியல் ஆர்வலர் பாமய்யன், மருத்துவர் கு.சிவராமன் போன்றோரின் கட்டுரைகளும் இதில் உள்ளது.

வாய்ப்பான அரசு வேலையிருந்தும், அதைத் துறந்து, நல்ல உணவு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், சுற்றுச்சூழல், இயற்கை ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் மாநிலம் முழுவதும் தடம் பதித்த உன்னத மனிதற்கு செலுத்தப்பட்ட அருமையான அஞ்சலி இந்த நூல். வெளியீடு: பூவுலக நண்பர்கள், சென்னை. விலை- ரூ.60/- 90949 90900.

# சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top