சமணம்..“ஜினர் (மகாவீரர்) தன்னைப் பின்பற்றிய சமயிகளுக்கு ஐந்து விரதங்களை விதித்தார்;
1. இம்சை (இன்னா ) செய்யாமை
2. பொய் கூறாமை (வாய்மை)
3. கள்ளாமை
4. தன்னலம் பாராட்டாமை
5. சிற்றின்பம் வெஃகாமை.
இவ்விரதங்கள் சமணத் துறவிகளுக்கு உரியவை. இல்லறத்தார்களும் இன்னா செய்யாமை என்னும் விரதத்தை முற்றிலும் பின்பற்ற வேண்டும். அவர்கள் சமயக் கருத்துப்படி உயிரற்ற பொருள்களுக்கும் ஆன்மா உண்டு, ஆதலால் அவற்றிற்கும் எவ்வித இன்னாதவையும் கருதலுமாகாது(பக்.15).
உலக வரலாற்றில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு சமய எழுச்சி மற்றும் தோற்றங்களின் காலம். யூதர்களுக்கு புத்துயிர் அளித்த இசையா,சீனாவில் கன்பூசிய சமயத்தை உருவாக்கிய கன்பூசியஸ், மற்றும் லூட்ஸு, கிரேக்கத்தில் ஸோலன் போன்ற அறிஞர்கள் வாழ்ந்த காலம். அதே போல இந்தியாவில், அகிம்சையும் அன்பையும் சத்தியத்தையும் போதித்த மகாவீரரும், புத்தரும் வாழ்ந்த காலம்.
புத்தமும், சமணமும், இந்த இரு சமயங்களின் தோற்றம் மற்றும் அவைகளின் அடிப்படை கோட்பாடுகள் அனைத்தையும், எல்லோருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் சொல்லும்நூல்தான் பேரா.ந.சுப்ரமண்யனின் “பௌத்தமும்
சமணமும் “
பேரா.ந.சுப்ரமண்யன் தமிழக வரலாற்றை எழுதிய குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர். தமிழக வரலாற்றை விரிவாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியவர். தமிழக வரலாற்றுக்கென்று தனி வரலாற்று வரைவியலை , Tamilan Historiography, எழுதியவர். அந்த வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
புத்தரின் , மகாவீரரின் போதனைகளை உலகம் ஏற்றுக் கொண்டிருந்தால் வன்முறைகள் இல்லா உலகம் உருவாகியிருக்கும் குழந்தைகளை கொல்லும் போர் முறைகள் இல்லாது போயிருக்கும். புத்தமத இலங்கையில் கூட இனப் படுகொலைகள் நடைபெற்றிருக்காது. புத்தம் சரணம் கச்சாமி.தர்மம் சரணம் கச்சாமி.சங்கம் சரணம் கச்சாமி.
# சா. விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #