Close
நவம்பர் 21, 2024 1:28 மணி

புத்தகம் அறிவோம்… நண்பர்கள் நினைவில் பாரதியார்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- நண்பர்கள் பார்வையில் பாரதியார்

என் குருநாதர் பாரதியார்.”பாரதியாரை நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனால் அவரையே எனது பரமகுருநாதராகக் கொண்டிருக்கிறேன். எனக்கு தேசபக்தி ஊட்டியவர் பாரதியார். தாய்மொழிப் பற்றை அருளியவர் பாரதியார். கவிதை இன்பம் துய்க்கும் ஆற்றலை அளித்தவர் பாரதியார். ரசிகர்களின் நட்பாகிய பெரும்பாக்கியத்தைத் தந்தவர் பாரதியார்.-கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி,சுதந்திரச் சங்கு, 9.9.1931(பக். 19).

பாரதியாரை நேரில் காணவும், நெருங்கிப் பழகவும் அவருடைய அந்திமக் காலத்தில் தான் எனக்கு சந்தர்ப்பம் வாய்த்தது …பாரதியிடத்தில் நான் கண்ட விஷேசம் என்ன? பால்மணம் மாறாத குழந்தைகளிடம் காணும் குணங்களைக் கண்டேன். சூதுவாது தெரியாத மனம். வேற்றுமை கிடையாது. நயமுண்டு, பயம் இல்லை. நாளையைப் பற்றி நினைக்க மாட்டார்.  படாத கஷ்டங்களைப் பட்டார். தழும்பு தரிக்கவில்லை….

கல்லூரியில் கற்காததை கடற்கரையில் கற்றார்; சென்னையிலும் புதுவையிலும் அவர் கடற்கரைக்கு செல்லாத நாள் கிடையாது. கடற்கரையில் உட்கார்ந்த வண்ணம் அலைகள் துள்ளித் தழுவி, உருண்டு திரண்டு நுறையும் நீருமாய் தாண்டவமாடுவதை கண்டுகளித்தார்.

இயற்கையிலிருந்து செயற்கையை அறிந்தார். மனித வாழ்வின் மூல மந்திரத்தை உணர்ந்தார். சமபாவம் பிறந்தது; நிஷ்காமம் தொடர்ந்தது; வீரம் வைராக்கியமாய் மாறியது. தர்மம் சேவாஸ்வரூபம் பெற்றது. புதுவை சென்ற பாரதி வேறு; உள்ளே சென்றவர் வீரர்; வெளியே வந்தவர் ஞானி. ஞானிகளுக்கு இருப்பிடம் இகத்தில் அன்று. இரண்டு வருடங்களுக்குள் அழைப்பு வந்துவிட்டது. பூத உடல் நீத்தது. புகழ் உடல் நிலைத்தது. -சுதேசமித்திரன் ஆசிரியர் சீனிவாசன்( பக். (104, 105)

“அடிக்கடி மாம்பழம் சாப்பிடுவதைக் கண்ட நான் பாரதியாரிடம் சாமி! மாம்பழம் அதிகமாய் சாப்பிடாதீர்கள். அது உடம்பிற்கு சூடு என்பேன். அதற்கு பாரதியார், “சம்பந்தம் ! பசிக்குத் தானடா மாம்பழம் சாப்பிடுகிறோம். பசிக்கு தெரியுமாடா சூடு” என்று என்னையே திருப்பிக்கேட்டு விடுவார். -சம்பந்தம் , முன்னாள் “சுதேசமித்திரன் ” அலுவலக ஊழியர்(பக். 107).

உலகில் தோன்றிய மனிதர்களில் சிலருக்கு கணக்கற்ற புத்தகங்கள் எழுதப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. நெப்போலியன், ஆபிரகாம் லிங்கன், காந்தி, மார்க்ஸ், லெனின் (சோவியத் யூனியன் இருந்தவரை) மறைந்து பல்லாண்டுகள் கடந்த பின்னும் புதிய புதிய நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

2002 ஆம் ஆண்டு கணக்குப்படி, கடந்த இரு நூறு ஆண்டுகளில் நெபோலியனைப் பற்றி 80 ஆயிரம் புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இணைய தளங்களில் 55 படங்கள், ஆறு தொலைக்காட்சித் தொடர்கள் வந்துள்ளன என்று 2002 தினமணி செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இப்போது எண்ணிக்கை கூடியிருக்கலாம். இந்தியாவை எடுத்துக் கொண்டால் காந்தியும், தமிழகத்தில் பாரதியும் அந்தப் பேறு பெருவார்கள் என்பது நிச்சயம்.

பாரதி பற்றாளர் இளசை மணியன் (இயற்பெயர், மு.இராமசுப்பிரமணியன்) தொகுத்துள்ள “நண்பர்கள் நினைவில் பாரதியார் “பாரதி பற்றிய நூல் வரிசையில் மற்றொன்று. இந்நூலில் பாரதியுடன் வாழ்ந்த , பாரதியைப் பார்த்த, அறிந்த, நேசித்த – வ.வே.சு.ஐயர், திரு.வி.க., உ.வே.சா, கல்கி, பாரதிதாசன், வ.ரா., சாவி, நாவலர் சோம சுந்தர பாரதி உள்ளிட்ட -32 பெரியார்களின் நினவுகள் பகிரப்பட்டுள்ளன. இந்த நினைவலைகள், சுதேசமித்திரன், நவசக்தி, ஆனந்த விகடன், சுதந்திரச் சங்கு, தினமணிச்சுடர் மற்றும் பல இதழ்களில் வெளிவந்தது. அவற்றை இளசை மணியன் தேடி எடுத்து தொகுத்திருக்கிறார்.

இளசை மணியன் சொல்வது போல் இந்த கட்டுரைகளின் வழி, பாரதியின் பழக்கவழக்கங்கள், உபசரிப்பு, மனிதநேயம், அஞ்சாமை, நேர்மை ஆகிய குண நலன்களை நாம் காணமுடிகிறது. இது பாரதியைப் பற்றிய ஒரு வாழ்வியல் நூல்.

வெளியீடு-பவித்ரா பதிப்பகம்,சிறுவாணி வாசகர் மையம், (2017)கோயம்புத்தூர்.
9488185920.ரூ.160/-

#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top