சாதியின் முதல் பண்பு அதனுள் இயங்கும் இரத்த உறவு. இந்த இரத்த உறவைக் கலப்பில்லாமல் பேணுகிறது அகமண முறை. இந்த அகமண முறையையும் மீறி இரத்தக் கலப்பு நடந்து விடாமல் தடுக்கின்றன பெண் மீது செலுத்தப்படும் பாலியல் ஒடுக்குமுறை.
அதற்கும் மேலே கட்டுக்கோப்பான சமூக நடைமுறைகள், சாதிக்கே உரிய ஒழுக்க விதிகள், பல வேறு விதமான சடங்குகள் – இவ்வாறு சாதியின் அடித்தளமான அதன் உடலியல் அம்சமும், அதனை ஒழுங்குபடுத்தும் பண்பாட்டு அம்சமும் பின்னிப்பிணைந்து அமைந்து விடுகிறன. சாதியின் பிற அடையாளங்கள் எல்லாம் படிப்படியாக மறைந்து போய்க் கொண்டிருக்கும் இன்றைய சூழலிலும் சாதியை வலுவாக வைத்துக் கொண்டிருக்கும் அடிப்படை இந்த அகமண முறையே.
“சமீப காலங்களில் கலப்பு மணங்கள் பெருகியுள்ளன. ஆனாலும், இமமாதிரிக் கலப்பு மணங்களில் உருவாகும் வாரிசுகள் ஆணின் சாதிக்குள்ளேயே உட்கிரகிக்கப்பட்டு சீரணமாகி விடுகின்றன. அபூர்வமாக சில சந்தர்ப்பங்களில் பெண்களின் சாதிகளோடு வாரிசுகள் சங்கமமாகிவிடும் வழக்கமும் உள்ளது. எவ்வாறாயினும் எச்சாதிக்குள்ளும் அடங்காது, தேசிய மனிதன், அதாவது தமிழன், மலையாளி, தெலுங்கன் போல இந்தியாவில் இன்னும் தோன்றவில்லை. சாதியின் இரத்த இறுக்கம் அவ்வளவு வலுவாக உள்ளது. -இந்திய சாதி அமைப்புகட்டுரையில்(பக்.1- 2)
..
“தெற்கிலிருந்து … ” எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய
1. இந்திய சாதி அமைப்பு முறை,
2. தெற்கில் முதல் வெளிச்சம்
3. தென் திருவிதாங்கூர் தோள்சீலைப் போராட்டம்.
4. வைகுண்டசாமி,
5. கோயில் நுழைவுப் போராட்டங்கள்
6. சாதி தர்மமும் மனுதர்மமும்
7. நாராயண குரு
8. மகான் அய்யங்காளி ஆகிய 8 கட்டுரைகளின் தொகுப்பு.
இந்தியச்சாதி அமைப்பின் பண்புகள், கிறிஸ்தவ மிஷினரிகளின் செயல்பாடுகள், வைகுண்டசாமி, நாராயணகுரு, அய்யங்காளி இவர்களின் சமூக மாற்றத்திற்கான பங்களிப்புகள், தெற்கே கோயில் நுழைவுப் போராட்டம், வடக்கே அம்பேத்கார் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டம் யாவற்றையும் பேசுகிறது இந்தக் கட்டுரைகள்.
மேலும் தென் தமிழகத்தில், குறிப்பாக, கன்னியாகுமரிக்கும் திருவனந்தபுரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்ந்திருக்கும் சமூக மாற்றங்களுக்கான தோற்றுவாயையும் இக்கட்டுரைகள் வழி அறியலாம்.
தமிழகத்தின் மிகச்சிறந்த சமூகவியல் ஆய்வாளர் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் சிறந்த ஆய்வுரையை அறிமுக உரையாகத் தந்துள்ளது இந்த நூலுக்கு இன்னொரு சிறப்பு.NCBH வெளியீடு,ரூ.145.
#சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#