Close
ஜூலை 7, 2024 10:00 காலை

புத்தகம் அறிவோம்.. ஜவஹர்லால் நேரு…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்.. ஜவஹர்லால் நேரு

இன்று ,மே 27,ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம்.கடந்த 10 ஆண்டுகளாக வரலாற்றின் பக்கங்களிலிருந்து நேருவின் பெயரை மறைத்து விட வேண்டுமென்று பெரும் முயற்சி நடைபெறுகிறது என்றாலும் இன்னும் அவர் நிலைத்திருக்கிறார்; என்றும் நிலைத்திருப்பார்; என்றும் தேவைப்படுவார்.இந்திய பிரதமர்களில் அதிகம் வாசித்தவர், எழுதியவர், பேசியவர் நேரு .நீண்டகாலம் சிறையிருந்த பிரதமரும் இவர் தான்.

நேருவினுடைய, Discovery of India, Glimpses of World History, Autobiography of Nehru-கண்டுணர்ந்த இந்தியா, உலக வரலாறு, நேருவின் சுயசரிதை- இம்மூன்றையும் வாசிக்காமல் நாம் முழுமையாக இந்திய வரலாற்றையோ, உலக வரலாற்றையோ, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றையோ புரிந்துகொள்ள முடியாது .Non-aligned movement-கூட்டு சேரா இயக்கம் என்ற புதிய வெளியுறவுக்கொள்கையை உலகிற்கு அறிமுகம் செய்தவர் இவர்.ஒவ்வொரு முக்கிய பிரச்னையின்போதும் மாநில முதல்வர்களுக்கு தவறாமல் கடிதம் எழுதும் பழக்கம் கொண்டவர்.

ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்தில் 16 முதல் 17 மணிநேரம் பணியாற்றுவது நேருவின் வழக்கம். அவருடன் இருந்த வகையில் அப்படி எனக்கும் பழக்கமாகிவிட்டது. என்கிறார் அவரிடம் முதன்மைச் செயலாளராக இருந்த எச். வி.ஆர்.ஐய்யங்கார்.

எப்படி அவரைப்பற்றி கேலிச்சித்திரம் போட்டாலும் ரசிப்பார் என்பார் ‘சங்கர்ஸ் வீக்லி’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் சங்கர்.இன்றைய அரசியல்வாதிகள் கவனிக்க. தான் பணி நிமித்தமாக காரில் பயணிக்கும்போது திரும்பிப் பார்ப்பாராம்;இரண்டு கார்களுக்கு மேல் வந்தால் தன் காரை நிறுத்தி பின்னால் வரும் கார்கள் திரும்பிப்போனால்தான் பயணத்தைத் தொடர்வாராம். இன்று சாதாரண மந்திரிகள் வந்தாலே ..

தனக்கிருந்த செல்வாக்கை சாதகமாக்கி அவர் ஒரு சர்வாதிகாரியாகக் கூட மாறியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் ஜனநாயகம் நிலைபெறச் செய்தவர். இந்தியாவோடு சுதந்திரம் பெற்ற நாடுகளெல்லாம் சர்வாதிகாரத்திற்கு மாறிய போது இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர்.
“ஒரு தேசம், ஒரு சமயம்” என்று பேசுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தவர் அவர். அவர் இட்ட அடித்தளத்தில் பயணம் செய்பவர்கள் அவரை மறைக்க நினைப்பது வரலாற்று விநோதம்.
நேருவுக்கு பிடித்த வாசகம்;
“அழகிய வனங்கள், இருண்ட அடர்ந்த காடுகள்ஆனால் நான் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; உறங்குவதற்கு முன்னால் நெடுந்தொலைவு போகவேண்டும்”. என்ற ராபர்ட் பிரோஸ்டின் வாசகம். சுதந்திர தினத்தன்று நேரு வாங்கிய செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் இடம் பெற்றிருக்கிறது.

“நேருவின் அன்பு மனைவி இறந்து விட்டாள். கடைசியில் ஒரு கிண்ணம் சாம்பல் தான் மிஞ்சியது அவர் கமலாவின் சாம்பலை அலகாபாத்துக்கு எடுத்துச் சென்று கங்கை நீரில் கரைத்தார். கமலாவின் சாம்பலில் ஒரு சிறு பகுதியை அவர் தன் கடைசி நாட்கள் வரை வைத்திருந்தார். தன் மரணத்திற்குப் பிறகு தன் சாம்பலோடு அதைக் கலக்குமாறு கேட்டுக் கொண்டார்… (பக். 325).

“உலகத்தின் எல்லாப் பிரச்னைகளுக்கும், இந்தியாவின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு ஒரே திறவுகோள் சோஷலிசமே என்று நான் நம்புகிறேன். இந்த வார்த்தையை நான் தெளிவில்லாத மனிதாபிமான அர்த்தத்தில் உபயோகிக்கவில்லை. ஸ்துலமான, விஞ்ஞானரீதியான, பொருளாதார அர்த்தத்தில் அதை உபயோகிக் கிறேன். ஆனால் சோஷலிசம் என்பது சாதாரண பொருளாதார சித்தாந்தை விட பெரியது.

அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். இந்திய மக்களுடைய வறுமை, பரந்த வேலையில்லாத் திண்டாட்டம், அவமதிக்கப்படுதல் மற்றும் அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டுவதற்கு சோஷலிசத்தை தவிர வேறு வழி எனக்கு எதுவும் தெரியவில்லை. அதை நிறைவேற்ற நம்முடைய அரசியல் மற்றும் சமூக அமைப்பில் பரந்த புரட்சிகரமான மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டும்.

நிலத்திலும் தொழில்துறையிலும் பணக்காரர்களின் ஆதிக்கத்துக்கும் இந்தியாவில் சுதேச சமஸ்தானங்கள் என்ற நிலப்பிரபுத்துவ சர்வாதிகார அமைப்பிற்கும் முடிவு கட்ட வேண்டும். “நேரு -1935 – ஏப்ரல் 12 – 15 வரை நடைபெற்ற லக்னோ காங்கிரஸ் மாநாட்டில்.(பக். 327).

ரஷ்ய வரலாற்றாய்வாளர்கள் அ.கோரெவ், வி. ஸிம் யானின் எழுதியுள்ள
“ஜவகர்லால் நேரு”, இந்தியாவிற்கு வெளியிலிருந்து, புதிய கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ள நூல்.” இன்றைய சூழலில் மீண்டுமொரு முறை நேருவின் வாழ்க்கை வரலாற்றை வாசிப்பது அவசியமானது “என்பதால் இந்த நூலை மறுபதிப்பு செய்வதாக NCBH பதிப்பகத்தார் கூறுகின்றனர்.

நேருவினுடைய முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் இது. நேருவின் செல்வாக்கான குடும்பச்சூழல், கல்வி, நேரு – கமலா உறவு, காந்தி – நேருவிற்கிடைய இருந்த உறவு, சுதந்திரப் போராட்டம்,சிறைவாழ்க்கை, சோஷலிசத்தின் மேல் இருந்த பற்று, எழுதிய நூல்கள், வெளியுறவுக் கொள்கை (பஞ்சசீலம்) நாட்டின் விவசாயம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றிற்கு மேற்கொண்ட முன்னெடுப்புகள் யாவும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நூலில்.பேரா.நா.தர்மராஜன் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.NCBH,சென்னை.044 – 2625 1968.ரூ.420/.

# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top