Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

புத்தகம் அறிவோம்… மாணவனே உன்னை உலகம் கவனிக்க..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

” மாணவனே , உன்னை உலகம் கவனிக்க. “இந்த நூலை புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாங்கினேன். முழுதும் படித்த பின்தான் இன்னும் சில பிரதிகள் வாங்கி தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கு வாசிக்க கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. அத்தனை சிறப்பாக அமைந்துள்ளது இந்த நூல்.

கேள்வி: நான் படிப்பதற்கு நிறைய திட்டமிடுவேன். ஆனால் எதையும் செயல்படுத்த முடியவில்லை இதற்கு நல்ல தீர்வு கூறுங்கள்.

பதில் : படிப்பதற்கு ஓரளவிற்கு மேல் திட்டமிட வேண்டியதில்லை. எந்த இடைஞ்சல் வந்தாலும் படித்தே தீருவேன் என்ற உறுதி கொள். மனமொன்றி ஆர்வத்துடன் படிப்பேன் என்ற திடப்புத்தி உனக்கு வேண்டும்.

படித்ததை அடிக்கடி நினைவு படுத்திக்கொள். பரிட்சை ஹாலில் உட்கார்ந்து எழுதுவதாக அடிக்கடி கற்பனை செய். இவற்றைச் செயல்படுத்திப்பாரேன். பயம் போகும்.(பக். 6).

கேள்வி : பாடங்களை நன்கு படித்திருந்தும் படித்ததை பரிட்சையில் எழுத முடியாதது ஏன்?

பதில் : பரிட்சைக்கு முன்பு நீ படிப்பதெல்லாம் படிப்பு.

பரிட்சையில் நீ செய்வதோ எழுதுவது.

பரிட்சைக்கு என்று பல முறை படித்துப் பயிற்சி பெறுகிறாய். ஆனால் பரிட்சைக்காக எத்தனை முறை எழுதி பயிற்சி பெறுகிறாய் என்று யோசி. எழுதிப் பார்த்தால் அதுவே பரிட்சை நேரத்தில் உன்னைப் பாடாய்படுத்தும் பயத்திலிருந்து நீக்கும். தைரியமாய் எழுதி நல்ல மதிப்பெண் பெறுவாய்.(பக். 14).

கேள்வி : ஞாபக சக்தியை எப்படிக்கூட்டுவது?

பதில்: ஞாபக சக்தி குறைவதற்கான காரணங்களுள் இதோ இதுவும் ஒன்று : நீ சாப்பிடும்போது மென்று, சுவைத்து கவனத்துடன் தின்னாமல் டி.வி. பார்த்துக் கொண்டே விழுங்கி வைத்தால் அது உன் உடம்பில் ஒட்டுமா?

அது போலத்தான் பாடம் படிக்கும் போது கவனச்சிதறல் இல்லாமல், ஆழ்ந்து விஷயங்களைப் படிக்க – இல்லை ரசிக்கக் கற்றுக் கொள்.

அப்போது படித்த பாடங்கள் உன் மூளையில் தனித்து நிற்காமல் உன் நினைவின் ஒரு பகுதியாகவே அது மாறிவிடும்.(பக். 50-51).

இப்படி, படித்துக் கொண்டிருக்கும் மாணவ – மாணவிகளின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் நூல் தான்

பயம் இல்லாமல் பரிட்சை எழுதுவது எப்படி?

கவனம் சிதறாமல் பார்க்க சில வழிகள்

ஞாபக மறதியை வெல்வது எப்படி?

தூக்கம் ஒரு தடையா?

தைரியம் பெறுவது எப்படி?

எப்படிப் படிப்பது?

நமது கடமை

ஆசிரியர் – மாணவர் உறவு

மாணவர்களின் பொதுவான கேள்விகள் –
என்று 9 தலைப்புகளில், ராமகிருஷ்ண மடம் தமிழ் வெளியீடான “ராமகிருஷ்ண விஜயம் ” மாத இதழில் மாணவ – மாணவிகள் பலரும் கேட்ட கேள்விகளுக்கு, ராமகிருஷ்ண மட துறவி சுவாமி விமூர்த்தானந்தர் (சுவிர்) வழங்கிய பதில்களின் தொகுப்பு தான் இந்த நூல். 150 கேள்விகளுக்கான பதில்கள் இந்நூலில் உள்ளது. அத்தனை கேள்விகளும் ஒவ்வொரு மாணவ – மாணவிகளின் மனதில் ஓடும் கேள்விகள்தான்.

“நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் பரிட்சையில் தோற்று தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

“முதல் மதிப்பெண் பெறுவதில் போட்டி, திட்டமிடாத படிப்பு, தன் பலம் பலவீனம் அறியாமல் இருப்பதால் இந்தத் தற்கொலைகள் நிகழ்கின்றன.
அவ்வாறு நிகழாமல் இருக்க IBM வேண்டும்.

IBM என்றால் Intellect – Body – Mind , அறிவு, உடல், மனம். இந்த மூன்றின் ஒத்துழைப்புதான் மாணவர்களுக்கு எல்லாக்காலங்களிலும் வெற்றியைக் கொண்டு வரும். அதற்கான வழியைச் சொல்வதுதான் இந்த நூலின் நோக்கம் ” என்று நூலின் முன்னுரையில் தரப்பட்டுள்ளது,மிகவும் சரியே.

தேர்வுகளை சந்திக்கின்ற – அது பள்ளி இறுதித் தேர்வாக இருக்கலாம், பட்டப்படிப்பு தேர்வாக இருக்கலாம், வேலைக்கான போட்டித் தேர்வாக இருக்கலாம் – அனைவருக்கும் பயன்படும் நூல் இது.அதே போல ஆசிரியர்கள், மாணவர்களை நெறிப்படுத்த, ஒழுங்குபடுத்த, வெற்றிகரமான மாணவர்களைத் தயாரிக்க இந்த நூல் உதவும்.
பெற்றோர்களும், தம் குழந்தைகளை சிறந்தவர்களாக உருவாக்க இந்த நூலை வாசிக்க வேண்டும்.

“மாணவ மாணவிகளே இங்கு தரப்பட்டுள்ள கேள்விகளுல் உங்களுக்குத் தொடர்பாக எத்தனைக் கேள்விகள் உள்ளன என்று பாருங்கள், படியுங்கள், தெளியுங்கள்”என்று ஒரு வேண்டுகோளையும் வைக்கிறது நூலை வெளியிட்டுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடம்.நாமும் தான்.

ஸ்ரீராமகிருஷ்ணமடம்,மைலாப்பூர்,சென்னை. 4.ரூ.100/.

# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top