புத்தம் சரணம் .
“பிறப்பையும் பழக்க வழக்கங்களையும் சார்ந்த வேற்றுமைகளால், நாடெங்கும் குழப்பமுற; அழுக்காறு, அவா, அறியாமை, பகை முதலியன கதித்தோங்கி அனைவரையும் அச்சமுறுத்தாநிற்க, இருண்டு குவிந்த கருமுகில் திரளைக் கீறிக் கொண்டு, அதன் விளிம்பிலும் இடைகளிலும் விட்டுவிட்டுஅவிர்தரும் மின்னொளியைப் போல, இக்குழப்பத்தின் இடையிடையே பிறர் நல நாட்டமும், ஒற்றுமை உணர்ச்சியும், நாட்டுப்பற்றும், மேலான பிறவெண்ணங்களும் ஆங்காங்குத் தலைநீட்ட முயலும் இந்த நாளிலே அறவாழியந்தணனான சித்தார்த்தனது அருமை பெருமை வாய்ந்த வரலாறு நம்மவர்க்கெல்லாம் நன்மை விளைவிக்கலாம் என்று கருதியே இதை எழுதலானேன்.
இங்ஙனம் எழுதுகையில் வடமொழி சொற்களே கலவாத நூலொன்றும் தமிழில் இதுகாறும் யானறிந்தவரை இல்லாமையையும் , அத்தகைய நூல் தமிழ் மாணவர்க்கு பேருதவியாகும் என்பதையும் நினைத்து , கூடியவரை இந்நூலை தனித்தமிழில் இயற்றி இருக்கிறேன். இதனால் சில சொற்தொடர்கள் காதுக்கு இனிமையில்லாத போல முதலில் ஒலிக்கலாம்; புதுமையினால் தோற்றும் இவ்வோசைக் குறை நீங்கிவிடுமென்று நம்புகிறேன்….” -நூலின் முன்னுரையில்அ.மாதவையா .
… ஒரு சிற்றூரில் உழுது பயிர் செய்து பிழைத்து வந்த மறையவனான பாரத்துவாசன் என்பவனிடம் சென்று அவர் ஐயம் இரந்தார். ஏற்றமான தோற்றப் பொழிவுடையவர் இருப்பதைக் கண்டு அவன் சினமுற்று, “நான் உழுது பயிரிட்டுப் பாடுபட்டு, அதனால் விளையும் விளைவையுண்டு வாழுகிறேன்; நீரும் அப்படியே செய்யலாமே” என்றான். அதைக் கேட்ட புத்தர், “நானும் உழுது பயிட்டுப் பாடுபட்டே பிழைக்கின்றேன்” என்றார். அந்தணன் “ஆயின் உமது விதை கலப்பை முதலியன எங்கே ” என்று கேட்டான். புத்தர் என்னுடைய அன்பே விதை ; நற்செயலே மழை; அறநூலே வயல்;
அறிவும் வணக்கமுமே கலப்பையின் உறுப்புகள்; அறம்தான் எனது கலப்பையின் பிடி: விடா முயற்சியே உழும் எருது; என் உள்ளமே அதை அடக்கிச் செலுத்தும் தலைக் கயிறு; ஊக்கமே தாற்றுக் கோல்; மயக்கம் தான் பயிர்க்கு இடையூறான களை; இப்படிப்பட்ட என் உழுதொழில் இன்ப வீடாகிய விளைவையுதவி பல வகைத் துன்பங்களையும் போக்குகின்றது” என்று பதிலுரைத்தார்.
பார்ப்பான் அதைக் கேட்டு வெட்கி , அறவழிப் பட்டான். இவ்வண்ணமாக, “நல்லவை செய்யுமின்; அல்லவை ஒழிமின் ” என்றும் “அறம் செய்யு மின் மறம் தவிர்மின் ” என்றும் கூறிக்கொண்டு, காட்டிலே தமது மாணவருடன் தங்கும் மழைநாள்களைத் தவிர மற்றை நாள்களிலெல்லாம், நாற்பத்தைந்து ஆண்டுகள் புத்தர் பல சிற்றூர்களுக்கும் பேரூர்களுக்கும் சலிப்பின்றி சென்று, துன்புற்று வருந்தும் மாந்தர்களைத் தமது தண்ணளியின் மேலீட்டால் நல்வழி படுத்த முயன்று வந்தார்.(பக். 91).
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அ.மாதவையா (1872 – 1925) உப்புச் சுங்கத்துறையில் உதவி ஆணையராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று கிடைத்த பணத்தில் அச்சகம் நிறுவி பஞ்சாமிருதம் என்ற பத்திரிக்கை யை நடத்தியவர்.
பத்திரிக்கை ஆசிரியராக, நாவலாசிரியராக, கவிதை,சிறுகதை, கட்டுரை ,நாடக (ஆங்கிலத்திலும், தமிழிலும்) எழுத்தாளாராக, பரிணமித்தவர். ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் புலமை பெற்றவர். புகழ்பெற்ற ‘பத்மாவதி சரித்திரம்’நாவலை எழுதியவர்.
1925 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினராக இருந்த மாதவையா தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்று பேசி முடித்த சிறுது நேரத்தில் அவ்விடத்திலேயே மூளை ரத்த நாள வெடிப்பால், “சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் “என்று ஈழத்துக் கவிஞர் க.சச்சிதானந்தம் சொன்னது போல், தமிழ்பேசி மரணத்தை தழுவினார்.
“சித்தார்த்தான் புத்த சரிதை “இயன்றவரை வடமொழி கலப்பின்றி தனித்தமிழ் நடையில், 1918 -ஆம் ஆண்டு எழுதப்பட்ட முதல் நூல். .
நாவல் வடிவத்தில் அமைந்துள்ள இது முதலில் சுதேசமித்திரன் பதிப்பாக 1918ல் வெளிவந்தது. தனித்தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளது.
புத்தரின் வாழ்க்கை வரலாறு, அவர் போதனைகள் யாவும், புத்தரை முழுமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் மாதவையா நமக்கு வழங்கியிருக்கிறார்.புத்தர் பேதமின்றி யார் யார் இல்லங்களிவெல்லாம் உணவுண்டார் என்பதை சுவை பட எழுதியுள்ளார் மாதவைய்யா.
முதல் தனித் தமிழ் நூல்.வாசிக்க வேண்டிய நூல். தமிழினி பதிப்பகம், 2014,சென்னை-9344290920-ரூ.70..
#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #