Close
அக்டோபர் 1, 2024 7:20 காலை

புத்தகம் அறிவோம்.. “மாணவ நண்பன் “

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- மாணவ நண்பன்

வினையாகும் விளையாட்டு:மைதானங்களில் விளையாடுவதைத் தவிர்த்து அலைபேசிகளுக்குள் வீடியோ கேம்கள் விளையாடுகிறார்கள். பப்ஜி, ஃப்ரீ பயர் போன்ற இணைய வழி நிழல்பட விளையாட்டுகள் (Video games) பள்ளி மாணவர்கள் மனதில் வன்முறையை விதைக்கின்றன. இருவர் விளையாடுகின்ற போது எதிரியை இவர்கள் வீழ்த்த முடியாத நேரத்தில் பல்வேறு நண்பர்களைத் துணைக்கு அழைக்கிறார்கள்.

வெவ்வேறு இடங்களில் இருந்தபடியே இதை விளையாடவும் செய்கிறார்கள். விளையாடிக்கொண்டிருக்கும் போதே “வெட்றா அவன”, “போய்ட்டு இருக்கான் பாரு அவன சுட்டுத் தள்றா” போன்ற வன்முறை சொல்லாடல்களைப் பயன்படுத்துகிறார்கள். சில நேரங்களில் கெட்ட வார்த்தையையும் பிள்ளைகள் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டிருப்பதற்கு ஒருவகையில் அவர்களது குடும்பமும், அலைபேசியும், சீரழிந்து கிடக்கும் திரைப்படக் கலாச்சாரமும்தான் காரணம். ஒரு நாள் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். விசாரித்த போது “என்னை அவன் கொன்றுவிட்டான் ஐயா, என்னை அவன் காப்பாற்றவில்லை” என ஒரு மாணவன் கூறினான்.

எனக்கோ அதிர்ச்சியாக இருந்தது. “யார் டா கொன்னா, என்னடா சொல்றே” எனக்கேட்ட போது அந்த பிரீ ஃபயர் விடியோ கேம் விளையாட்டின் விபரீதத்தை மற்ற மாணவர்கள் விளக்கினார்கள். இந்த நிகழ்வை வெறும் வீடியோ கேம் விளையாட்டு தானே எனக் கடந்து சென்று விட முடியாது. இத்தகைய விளையாட்டுகள் மாணவர்கள் மனதில் உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன(பக்.9-11).

 முனைவர் கு. ஏசுராசா, மணப்பாறையில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுவதோடு தன் துணைவியாரோடு இணைந்து செங்காந்தள் சோழன் பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.மாணவர்கள் பேரில் கொண்ட உண்மையான அக்கறையின் காரணமாக “மாணவ நண்பன் “ என்ற இந்த நூலைப் படைத்துள்ளார்.

இன்றைய மாணவர்களை சீரழிக்கும் கைபேசி, திரைப்படம் மற்றும் கயறு பிரச்சினைகளை ஆசிரியர் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். சமூக வேற்றுமைகளை உருவாக்கும் கயிறை , “கயிறுகள் காணாமல் போகட்டும் ” என்ற தலைப்பில் பதிவு செய்திருக்கிறார். நட்பின் அவசியம், புத்த வாசிப்பின் மகத்துவம் யாவற்றையும் இந்நூலில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் ஏசுராசா.பெற்றோர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். செங்காந்தள் சோழன் பதிப்பகம்,மணப்பாறை.ரூ.30.

#சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top