வெள்ளை இனத்தவரையும் கருப்பினத்தவரையும் சேர்க்கும் இரண்டு விஷயங்கள்: ஒன்று கிருஸ்துமஸ் மற்றது ஒரு குடும்பத்தில் நிகழும் இறப்பு. ஒரு குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால், அந்த குடும்பத்தின் வீட்டிற்கு அனைவரும் வருவார்கள். இரவு வரை அமர்ந்திருப்பார்கள். இரண்டு மூன்று நாட்கள் இப்படி கழியும். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் வெள்ளைக்காரர்கள் உணவையும், துணிமணிகளையும் எடுத்துக்கொண்டு வருவார்கள். இதோ போல வெள்ளைக்காரர்கள் இறந்து விட்டால் நாங்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று இதோ போலச் செய்வோம். மக்கள் ஒன்றினைவதை இது காட்டுகிறது.(பக். 14).
என் அப்பாவைப்பொறுத்தவரை, கல்வி என்பது பெரிய விஷயம் அல்ல. அந்தக் காலத்தில் அவர்கள் நினைத்ததெல்லாம் ‘நீயோ கருப்பினத்தைச் சேர்ந்தவன். எனவே நீ தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் எப்படி உன் பெயரைப் படிப்பது, எழுதுவது. இது போன்ற விஷயங்கள்தான். இதற்கு எதற்கு பள்ளியில் உட்கார வேண்டும் மருந்து கடையில் உனக்கு வேலை கிடைக்கப் போவதில்லை. எனவே இது நேரத்தை வீணடிப்பது”(பக். 18 – 19).
எனக்கு ஒரு கனவு உள்ளது. ஒரு நாள் இந்த தேசமானது எல்லா மனிதர்களும் சமம் என்ற வாசகத்தின் முழு அர்த்தத்துடன் வாழத் தொடங்கும். எனக்கு ஒரு கனவு உள்ளது. ஒரு நாள் அநீதி தாண்டவமாடும் மிசிசிபி மாநிலம் கூட சுதந்திரமும் நீதியும் கொண்ட சோலையாக மாறிவிடும். மார்ட்டின் லூதர்கிங் ஜீனியரின் புகழ்பெற்ற “எனக்கு ஒரு கனவு உள்ளது” உரையிலிருந்து(பக்.69-70).
நீ என்னை வரலாற்றில் அவமதிக்கலாம்.உன்னுடைய கசப்பான சுற்றிவளைத்த பொய்களால் .நீ என்னை அழுக்கில் அலுத்தலாம். இருந்தாலும் தூசியைப் போல நான் எழுவேன்.
உனது வார்த்தைகளால் நீ என்னைச்சுடலாம்.உனது கண்களால் என்னைக் காயப்படுத்தலாம்.உனது வெறுப்பால் என்னைக் கொல்லலாம்.ஆனால் காற்றைப் போல பின்னும் நான் எழுவேன்.-மாயா ஏஞ்சலோவின் ” பின்னும் நான் எழுகிறேன்” கவிதையிலிருந்து.(பக். 73 – 74).
புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியர் முனைவர் சு.கணேசன் உருவாக்கியிருக்கும்”அடக்குமுறைக்கு பின்னும் நம்பிக்கை ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வாழ்க்கை ” நூலில் ஒரு கதை, ஒரு உரை, ஒரு கவிதை உள்ளது. மூன்றும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் துயரத்தைப் பேசுகிறது.
லியோன் வால்டர் டில்லேஜ் எழுதிய “லியோன் கதை ” லியோனின் சுயசரிதம். ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவிற்கு எப்படி வந்தார்கள், அவர்களின் நிலை, வெள்ளையர்கள் அவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தும் விதம் மற்றும் நிறவெறியின் உண்மைமுகத்தை இந்த சிறிய புத்தகம் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஆப்பிரிக்க- அமெரிக்க மக்களின் உரிமைக்காக தன் இன்னுயிரை ஈந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் ” எனக்கு ஒரு கனவு உள்ளது” ஒரு உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவு. அதில் தனது மக்கள் மகிழ்ச்சி கரமாவும் சுதந்திரமாகவும் வாழப்போகும், தான் காணும் கனவை நமக்கு காட்சிப்படுத்தியுள்ளார்.
மாயா ஏஞ்சலோவின் கவிதை, எத்தனை அவமானங்கள் நிகழ்ந்தாலும் அச்சமின்றி எழுந்து நிற்பேன் என்று வெள்ளையர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். மிகச்சிறந்த தன்னம்பிக்கை கவிதை.
இந்தக் கதை, உரை, கவிதை மூன்றும் கறுப்பு இனத்தவரின் கதறல். கனவு. நம்பிக்கை.பேராசிரியர் கணேசன் மூவரின் உணர்வுகளையும் முழுமையாக தனது சிறந்த மொழியாக்கத்தின் மூலம் நம்மை உணரச் செய்திருக்கிறார். வெளியீடு-கீதா புக்ஸ்,புதுக்கோட்டை.94438 55563. விலை.ரூ.90.
# சா. விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை#