“ப.ஜீவானந்தம் நூல் திரட்டு” எனும் இந்நூல் பொன்னீலன் அவர்களால் தொகுப்பட்ட சாகித்திய அகாதெமி வெளியீடு. ‘ஜீவா’ என்று தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ப.ஜீவானந்தம் எல்லோராலும் மதிக்கப்பட்ட ஒரு பொதுவுடமைத் தலைவர்.
சுயமரியாதை இயக்கம், இந்திய தேசிய இயக்கத்திலும் ஒரு சேரப்பணியாற்றிவர். “நீங்கள்தான் தேசத்தின் சொத்து” என்று காந்தியால் அழைப்பட்டவர். வாழ்நாள் முழுவதும், எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்த அரசியல் தலைவர். மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். பாரதியை பட்டிதொட்டியெங்கும் பரப்பிய பெருமைக்குரியவர்.
அவருடைய உரைகள், எழுத்துகள் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளது. நெஞ்சில் நிறைந்தவர்கள், சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள், புதுமைப்பெண், கலையும் இலக்கியமும், ஜீவாவின் பாடல்கள், மொழியும் சமூகமும் என்று 6 தலைப்புகளில் இந்நூல் தொகுப்பு உள்ளது.
தேசியம், பொதுவுடமை, பண்பாட்டு விடுதலை – என்ற, ‘ முப்பரிமாணம் கொண்ட முழுமையான மனிதர்’ என்று ஜீவாவைப் பற்றிய அருமையான முன்னுரையையும் பொன்னீலன் எழுதியுள்ளார். நூலின் இறுதியில் ஜீவாவின் வாழ்க்கைக் குறிப்பும் உள்ளது.
‘புதிய சமத்துவத்தை உத்தரவாதம் செய்ய பெண்களுக்குத் தனிச்சலுைகைகள் பல வேண்டும்..தாய்-சேய் நல உரிமைகளை அரசாங்கம் கற்கோட்டையும் இரும்புக் கதவுமாக நின்று காக்க வேண்டும்.பிரசவ கால ஒய்வு, முழுச் சம்பளத்தோடு பெண்களுக்கு கிடைக்க வேண்டும்.
தாய்-சேய் நல விடுதிகளும், குழந்தை வளர்ப்பு நிலையங் களும் நாடு முழுவதும் சங்கிலித் தொடர்போல் முளைத்துத் தழைக்க சகல ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். (பக்.77) என்பது புதுமைப் பெண் பகுதியில் எது தர்மம்? என்ற தலைப்பிலான கட்டுரையில் உள்ளது.எல்லோருக்குமான நூல்.
–பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை.