Close
நவம்பர் 23, 2024 10:13 காலை

புத்தகம் அறிவோம்… “வந்த வினாக்களும், தந்த விடைகளும்”

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

ஜீவாவைப் பார்த்து “நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து” என்று சொன்னார் காந்தியடிகள். தலைவர் நல்லகண்ணுவும் அப்படித்தான். அரசியல் நேர்மை, ஒழுக்கம் இவற்றுக்கு அடையாளம் இவர். ஒரு பற்றற்ற துறவி. தனது சேவைக்காக வழங்கப்பட்ட நிதியையோ, வாகனத்தையோ ஏற்றுக் கொள்ளாதவர்.

காந்தி தென்னாப்பிரிக்காவில் செய்த சேவைக்காக தனக்கு கிடைத்த பொன்,பொருள் எதையும் எடுத்துக்கொள்ளாமல் வெறுங்கையோடு வந்தாரே அதேபோன்றது தான் நல்லகண்ணுவின் செயலும். நிகழ்காலத்தில் பழங்கதையைப் பேச இவர் இருக்கிறார்.

“வந்த வினாக்களும், தந்த விடைகளும்” கவிஞர் கே.ஜீவபாரதி தொகுத்து”குமரன் பதிப்பகம்” வெளியிட்டிருக்கும் இந்த நூல், பத்திரிக்கை நிருபர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்ட கேள்விகளுக்கு நல்லகண்ணு தந்த பதில்களின் தொகுப்பு.

தலைவர் நல்லக்கண்ணுவின் 80 -ஆம் ஆண்டு நிறைவு நாள் சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டது. இந்த உரையாடல்கள் முழுமையும் வாசித்தால் நல்லகண்ணுவின் முழு வாழ்க்கை வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

அதேபோல சமகால தமிழக வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும். ஒரு சுயசரிதத்திற்கான அத்தனை அம்சங்களும் இதில் உள்ளன. இதை அர்ப்பணிப்போடு தொடுத்த ஜீவபாரதிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஒரு கேள்வி பதில்: எத்தனையோ கனவுகளுடன் அரசியலுக்கு வந்தீர்கள். உங்கள் லட்சியங்கள் நிறைவேறினவா?
“அக்ரஹாரத்துக்குள், கோயிலுக்குள், தலித் மக்கள் நுழையக் கூடாது. இரட்டை டம்ளர் முறை என தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் நிறைய இருந்தன. அவற்றிற்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தினோம். அதில் வெற்றியும் கிடைத்தது.

அந்த வகையில் சில சந்தோஷங்கள் இருந்தாலும், என் மாமனார் அண்ணாசாமி 95-ம் வருடம் நாரைக் கிணற்றில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் உட்பட, இன்னமும் சாதிப் பிரச்சினைக் கொடுமைகள் ஓய்ந்த பாடில்லை.

இது ஒருபுறமிருக்க, இன்று மக்கள் சந்திக்கும் பொருளாதார பிரச்சினைகள் அதிகம். வறுமைக் கொடுமையால் படித்த இளைஞர்கள், கொலை, கொள்ளை என்று சமூக விரோதச் செயல்களுக்குத் திசைமாறுவது  வேதனையானது. பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். இது ஒரு தொடர் பயணம்.” (பக்.131) 1.5.2005ல் ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியது. இன்றும் நிலைமை மாறவில்லை.

—பேராசிரியர் விஸ்வநாதன்-வாசகர் பேரவை–

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top