Close
செப்டம்பர் 19, 2024 9:46 காலை

புதுக்கோட்டை நகரில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சிபிஎம் கட்சியினர் முற்றுகைப் போராட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் நடைபெற்றது

புதுக்கோட்டை பழனியப்பா கார்னர் அருகே பொதுமக்க ளுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் பெரும் துயரை ஏற்படுத்தி வரும் அரசு மதுபான கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை பழனியப்பா முக்கம் அருகே இயங்கிவந்த அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்) செவ்வாக்கிழமை முதல் நிரந்தமாக மூடப்பட்டது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியென அப்பகுதி மக்கள் மகிழ்;ச்சி தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை பழனியப்பா முக்கம் அருகே ராணியார் மகப்பேறு மருத்துவமனைஇ அரசு உயர் தொடக்கப்பள்ளி, எல்ஐசி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. கூடுதலான பயணிகள் ஏறி, இறங்கும் பேருந்து நிறுத்தமும் இதன் அருகே உள்ளது. இதன் அருகிலேயே அரசு மதுபானக்கடையும் (டாஸ்மாக்) நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த கடையில் குடித்துவிட்டு வருபவர்களால்  கர்ப்பிணிகள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அந்தப் பகுதி வழியாக செல்லும் பெண்களிடம் மதுபோதையில் உள்ள நபர்கள் அத்து மீறுவதாகவும், அடிதடி வெட்டு குத்துகள் அடிக்கடி அரங்கேறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை இணைத்துக் கொண்டு பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தியுள்ளது. போராட்டம் நடத்தும் போதெல்லாம் வருவாய்த் துறையினர் கடையை மூட கால அவகாசம் கேட்பதும், பின்னர் கடையை மூடாமல் விட்டுவிடுவதும் தொடர்கதையாக இருந்து வந்தது.

பூட்டுப்போடும் போராட்டம்:  டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்காததால் செவ்வாய்க்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பூட்டுப்போடும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், எஸ்.ஜனார்த்தனன், ஒன்றியச் செயலாளர்கள் எல்.வடிவேல், எம்.ஆர்.சுப்பையா, டி.லட்சாதிபதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சலோமி, எஸ்.பாண்டிச்செல்வி, டி.காயத்திரி, சி.மாரிக்கண்ணு, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.மாகாதீர், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சந்தோஷ்.

கட்சியின் நகரக்குழு உறுப்பினர்கள் சி.அடைக்கலசாமி, எம்.முத்தையா, பழ.குமரேசன், எஸ்.பாண்டியன், கு.ஜெகன், எம்.ஏ.ரகுமான், கணேஷ், உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மகாகவி பாரதி, காவலர் ஆகியோரின் வேடங்கள் அணிந்த மாணவர்களோடு நகர்மன்ற வளாகத்திலிருந்து பேரணியாக டாஸ்மாக் கடையை நோக்கி சென்றனர்.

கடைக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தடைகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால், தடைகளை உடைத்துக்கொண்டு கடையை அகற்ற வேண்டும் என்ற முழக்கத்துடன் போராட்டக்காரர்கள் கடைக்கு முன்பாக குவிந்தனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி முற்றுகைப் போராட்டம் தொடர்ந்தது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பகுதியினர் மற்றும் மாற்றத் திறனாளிகள் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார் வேறு வழியின்றி வருவாய்த்துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

காவல் துணைக் கண்காணிப்பாளர் ராகவி, திருக்கோகர்ணம் காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் அதிகாரிகள் கடையை உடனடியாக மூடுவதாகவும், தற்பொழுதே அங்குள்ள மதுப்பாட்டில்களை அகற்றுவதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. என்றாலும்,அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் நடத்தியதாகக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top