மாண்டஸ் புயல் அபாயத்தை அடுத்து சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை இரவு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு சென்னை அருகே கரையைக் கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப் பள்ளி அதானி ஆகிய மூன்று துறைமுகங்களில் 6-ஆம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை இரவு ஏற்றப்பட்டுள்ளது. புதன்கிழமை 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் அது விலக்கிக் கொள்ளப்பட்டு வியாழக்கிழமை இரவு 6-ம் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம் புயல் அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது. எந்த நேரமும் துறைமுகங்கள் அருகே கரையை கடக்க கூடும். இதனால் பலத்த காற்றுடன் பலத்த கனமழை பெய்யக்கூடும் என்பது இந்த எச்சரிக்கை கூண்டின் அறிவிக்கை ஆகும்.
புயல் எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதிக்காக நிமித்தமாக சரக்கு பெட்டகம், கச்சா எண்ணெய், நிலக்கரி, இரும்பு கழிவுகள், பொது சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்கான கப்பல்கள் அவசரம் அவசரமாக நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிட்டு பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மாண்டஸ் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் துறைமுக நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காரைக்கால், நாகப்பட்டினம் கடலூர் துறைமுகங்களில் நான்காம் எண் எச்சரிக்கை தூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.