Close
செப்டம்பர் 19, 2024 11:06 மணி

இறையூர் கிராமத்தில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்த கொடுமை…கோவிலில் வழிபாடு மறுப்பு… இரட்டைக்குவளை முறை: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

புதுக்கோட்டை

புதுகை அருகே இறையூரில் தலித்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்து விசாரணை நடத்திய ஆட்சியர் கவிதாராமு. உடன் எஸ்பி வந்திதாபாண்டே

இறையூர் கிராமத்தில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்த கொடுமை  சம்பவம் குறித்தும், கோவிலில் வழிபாடு மறுக்கப்பட்டு வந்தது குறித்தும் கடைகளில்  இரட்டைக்குவளை முறை தொடர்வது  போன்ற தீண்டாமைகள் தொடர்பாக  புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் கவிதாராமு  நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம். இறையூர் கிராமத்தில் தலித் மக்களுக்கான குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு  கலந்த கொடுமையைத் தொடர்ந்து அங்கே அடுக்கடுக்காக நிகழும் தீண்டாமைக் கொடுமைக்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட அதிகாரிகள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் திங்கள்கிழமை மனிதக்கழிவு  கலந்த கொடுமை தெரியவந்தது. இச்சம்பவம் பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மூலமாக வெளிச்சத்திற்கு வரவே நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகளுடன் விரைந்துசென்ற கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை,  அங்கே நடந்துள்ள சம்பவம் குறித்து உரிய நடவடிகை எடுக்குமாறும், அப்பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருமாறும் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள அசுத்தமான தண்ணீரை வெளியேற்றி வேறு குடிநீர் வழங்கப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நடந்துள்ள சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட அதிகாரிகள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் செவ்வாய்க்கிழமை இறையூர் கிராமத்திற்கு  நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.  நாங்கள் தலித் மக்கள் என்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். இங்குள்ள அய்யனார் கோவிலில் இதர சமூகத்தினரைப்போல எங்களை கருவறை அருகில் சென்று வழிபட அனுமதிப்பதில்லை. இங்குள்ள தேனீர் கடைகளில் எங்களுக்கு தனிக் குவளையில்தான் டீ கொடுக்கின்றனர்.

மயானத்திற்குச் செல்ல சாலை வசதி இல்லை. தெருவிளக்கு கள் எரிவதில்லை. பல ஆண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட வீடுகள் வசிக்க முடியாத அளவுக்கு மிகவும் பழுதடைந் துள்ளது.  எங்கள் குடியிருப்பு அருகில் உள்ள வரத்து வாய்க்கால் தூர்வாரப்படாததால் மழைக் காலங்களில்  மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தில் எங்களுக்கு முறையாக வேலை வழங்குவதில்லை என அடுக்கடுக்காக  புகார்களை தெரிவித்தனர்..

இந்நிலையில், தற்பொழுது எங்களுக்கான குடிநீரிலும் மனிதக்கழிவை கலந்துள்ள சம்பவம் எங்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது என கண்ணீருடன்  தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பழுதடைந்த வீடுகளை விரைந்து செப்பனிடவும், வரத்துவாரிகளை தூர்வாரவும், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மயான சாலை அமைக்கவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
தேனீர் கடை உரிமையாளர் கைது: இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட தேனீர்கடையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்கு தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தேனீர் கடை உரிமையாளர் மூக்கையா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டார்.
தலித் மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்ற ஆட்சியர்:
அங்குள்ள அய்யனார்கோவிலில் பட்டியல் இன மக்கள் சாமி கும்பிட அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்ததை அடுத்து அவர்களை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கோவிலுக்குள் சென்றார். கோவிலுக்குள் நுழைந்து பட்டியல் இன மக்களை சாமி கும்பிட வைத்தார்.

மேலும், அங்குள்ள இதர சமூகத்தினரிடமும் பட்டியல் இன மக்கள் கோவிலுக்குள் உள்ளே சென்று சாமி கும்பிட மறுப்பது சட்டப்படி குற்றம் எனவும் அறிவுறுத்தினார். அப்போது, அங்கு சாமி ஆடுவது போல ஆடி. தலித் மக்களை இழிவாகப் பேசிய லெட்சுமணன் மனைவி சிங்கம்மாள் மீது கோவிலில் தலித் மக்களை நுழைய விடாமல் தடுத்ததாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை
இறையூர் கிராமத்தில் உள்ள கோவிலில் பட்டியலின மக்களை ஆலயப் பிரவேசம் செய்ய வைத்த ஆட்சியர் கவிதாராமு

பிரச்னை வரும்போது மட்டும் நடவடிக்கை போதாது: சிபிஎம் கருத்து: இதுகுறித்து, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதை எங்கள் கட்சியின் சார்பில் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறோம்.

தொடர்ந்து பல்வேறு ஆய்வுகள் மூலமாகவும், ஆதாரங்களில் அடிப்படையிலும் நிரூபித்து வருகிறோம். ஆனால், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இதுகுறித்து எந்த அக்கறையும் செலுத்துவதில்லை. பிரச்னைகள் பெரிதாக வெடிக்கும் போது மட்டும் கண்துடைப்பாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பகுதிகளில் சில மாதங்கள்கூட நீடிப்பதில்லை. அங்கே தீண்டாமைக் கொடுமைகள் பழையபடி அரங்கேற்றப் படுகிறது.

எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகள் எங்கெல்லாம் உள்ளது என்பதை தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பபொழுதான் இதற்கு சரியான தீர்வை எட்ட முடியும் என்றார். அங்கு குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவை  கலந்துள்ளவர்களை விரைவாக கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட வேண்டும். இங்குள்ள பட்டியில் இன மக்கள் அமைதியாக வாழ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்தஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன்.

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ச.இராம்கணேஷ், உள்ளிட்ட அதிகாரிகளும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், சி.அன்புமணவாளன், சு.மதியழகன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் டி.சலோமி, செயலாளர் சி.ஜீவானந்தம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top