Close
நவம்பர் 22, 2024 6:26 மணி

செறிவூட்டப்பட்ட அரிசி… ஏப். 1 -முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிமுகம்

புதுக்கோட்டை

செறிவூட்டப்பட்ட அரிசி ரேஷன் கடைகள். பள்ளிகளுக்கு விநியோகம்

ஒன்றிய அரசு, பொது விநியோகத்திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டு செயல்படுத்தி வருகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, ஏற்கெனவே குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள ஊட்டச்சத்தின் பயன்கள் விவரம், இரும்புச் சத்து இரத்தச் சோகையைத் தடுக்கிறது. போலிக் அமிலம் கருவளர்ச்சிக்கும் இரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 21.09.2020 அன்று முதல் அறிமுக திட்டமாக ((Pilot Scheme) செயல்படுத்தும் பொருட்டு திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் அறிமுகம் செய்து பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் நியாய விலை கடையில் வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 01.04.2023 முதல் செறிவூட்டப் பட்ட அரிசி, இந்திய உணவு கழகத்திலிருந்து பெறப்பட்டு நியாய விலைக் கடைகள் வாயிலாக குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசியின் நன்மைகளை உள்ளடக்கிய நோட்டீஸ்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் இரும்புச் சத்து, போலிக்அமிலம், மற்றும் வைட்டமின் பி 12 ஆகிய மூன்று ஊட்;டச்சத்து குறைப்பாட்டினைப் களைந்து இரத்தச் சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

 

செறிவூட்டப்பட்ட அரிசி  குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.. அதற்கான அரசின் விளக்கம்  என்ன என்று பார்க்கலாம் ..

உணவின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்தவும், பொது சுகாதார நலன்களை கருத்தில் கொண்டு உணவுப் பொருட்களை வழங்கவும், ஒரு உணவின் அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களின் உள்ளடக்கத்தை அதிகரிப்பது” தான் செறிவூட்டல் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI– செறிவூட்டப்பட்ட அரிசி என்பதற்கான விளக்கத்தை கூறியுள்ளது.

வழக்கமான அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. கடைசியாகக் குறிப்பிடப்பட்டி ருப்பது எக்ஸ்ட்ரூடர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மாவுக் கலவையில் இருந்து வலுவூட்டப்பட்ட அரிசிகளை தயாரிப்பதை உள்ளடக்கியது. இந்தியாவில் இது சிறந்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி கர்னல்கள் வழக்கமான அரிசியுடன் கலக்கப்பட்டு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.

உலர்ந்த அரிசி மாவை நுண்ணூட்டச்சத்து கலவையுடன் சேர்க்கப்படுகிறது. மேலும் இந்த கலவையில் தண்ணீர் சேர்க்கப்பட்டு, இரட்டை திருகு எக்ஸ்ட்ரூடர் வழியாக அனுப்பப்படுகிறது. இந்த இயந்திரம் அரிசி மணிகளைப் போன்றே கலவையை மாற்றி வெளியேற்றுகிறது. உலரவைக்கப்பட்டு, குளிரூட்டப்பட்டு பயன்பாட்டிற்காக பேக் செய்யப்படுகிறது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட அரிசியை 12 மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, செறிவூட்டப்பட்ட அரசி மணிகள் சாதாரண அரிசியின் அளவு மற்றும் வடிவமைப்புடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. வழிகாட்டுதல்களின்படி, தானியத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 5 மிமீ மற்றும் 2.2 மிமீ இருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியே, இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் அதிகமாக உள்ளது. உணவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாட்டில் இரண்டில் ஒரு பெண் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றில் ஒரு குழந்தை வளர்ச்சி குன்றியதாக உள்ளது.

ஊட்டச் சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு உணவை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமான பயன்பாட்டு முறையாக கருதப்படுகிறது. அரிசி இந்தியாவின் முக்கிய உணவுகளில் ஒன்றாகும், இது மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் உட்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் தனிநபர் அரிசி நுகர்வு மாதத்திற்கு 6.8 கிலோ. எனவே, அரிசியை நுண்ணூட்டச் சத்துக்களுடன் செறிவூட்டுவது ஏழைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க உதவும்.

அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, 10 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசியை 1 கிலோ வழக்கமான அரிசியுடன் கலக்க வேண்டும். 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச் சத்து 28 mg-42.5 மில்லி கிராம், ஃபோலிக் அமிலம் 75-125 மைக்ரோகிராம், மற்றும் வைட்டமின் B-12 0.75-1.25 மைக்ரோகிராம் இருக்கும்.

அதே அரிசியில் துத்தநாகம் 10 mg-15 mg, வைட்டமின் A 500-750 மைக்ரோகிராம் RE, வைட்டமின் B-1, 1-1.5 மில்லி கிராம், வைட்டமின் B-2 (1.25 mg-1.75 மில்லி கிராம்), வைட்டமின் B-3 (12.5 மில்லிகிராம் -20 மில்லி கிராம்) மற்றும் வைட்டமின் B-6 (1.5-2.5 மில்லிகிராம்) இருக்கும்.

இதனை சமைக்க மாற்று வழி ஏதும் தேவையில்லை. எப்போதும் அரிசியை சமைக்கும் போது சுத்தம் செய்து, கழுவி பயன்படுத்துவது போன்று தான் பயன்படுத்த வேண்டும். சமைப்பதற்கு முன்பு எப்படி இருந்ததோ அதே அமைப்பு மற்றும் வடிவில் தான் சமைத்த பிறகும் இந்த அரிசி இருக்கும்.

கடந்த ஆண்டு பிரதமரின் அறிவிப்பின் போது, ​​கிட்டத்தட்ட 2,700 அரிசி ஆலைகள் செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்திக்கான அலகுகள் நிறுவப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவின் இந்த திறன் 14 முக்கிய மாநிலங்களில் 13.67 லட்சம் டன்களாக இருக்கிறது என்று அமைச்சகம் வழங்கிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி 2 ஆண்டுகளில் 7,250 டன்களில் இருந்து 60,000 டன்களாக அதிகரித்துள்ளது.

சணல் பைகளில் விற்பனைக்கு வைக்கப்படும் இந்த அரசியின் பைகளில் (+F) என்று குறிப்பிட்டு “Fortified with Iron, Folic Acid, and Vitamin B12 என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும்.

கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி 2024 -க்குள் செறிவூட்டப்பட்ட அரிசியை பள்ளிகளில் மதிய உணவு திட்டம் மூலமாகவும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமும் (PDS), பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழும் விநியோகிக்கப்படும்.

அரசு திட்டங்களில் மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கான ஒப்புதலை  மத்திய அரசு அளித்தது. இந்தியா உணவுக் கழகமும் மாநில அரசு மாநில அமைப்புகளும் இதுவரை 88.65 லட்சம் மில்லியன் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top