ஒன்றிய , மாநில அரசுகளிடம், எங்கே எனது வேலை? என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 23ஆம் தேதி தமிழ்நாட்டின் நான்கு முனைகளிலிருந்து பரப்புரை பயணம் மேற்கொள்ளப் போவதாக இளைஞர், மாணவர் பெருமன்றம் அறிவிப்பு
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றத்தின் மாநில குழு கூட்டம் தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் த.கு. வெங்கடேசன், மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் சீ.தினேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் க.பாரதி, மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் பா.தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மாநில குழு கூட்டத்தில் எங்கே எனது வேலை என கேட்டு இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம் இணைந்து தமிழ்நாட்டில் நான்கு முனைகளில் இருந்து மார்ச் 23ஆம் தேதி துவங்கும் பரப்புரை பயணம் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துவதாக தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், வேலை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக்க பகத்சிங் தேசிய வேலை உறுதி அளிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வேலை கொடு அல்லது வேலை கொடுக்கின்ற வரை மாதம் ரூபாய் பத்தாயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஒன்றிய மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் ஆசிரியர் காலி பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, வேலை வாய்ப்புகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புகளில் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையினை ரத்து செய்து, நிரந்தர பணியிடங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூபாய் 21,000 ம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 45 வயதுக்குள் இறந்து விடுவோர் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளில் ஒன்றிய , மாநில அரசுகளை வலியுறுத்தி, எங்கே எனது வேலை என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, சென்னை, வேதாரண்யம், கன்னியாகுமரி ,ஓசூர் ஆகிய தமிழ்நாட்டின் நான்கு முறைகளில் இருந்து மார்ச் 23 ஆம் தேதி பரப்புரை பயணம் மேற்கொள்வது. ஏப்ரல் இரண்டாம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்துவது என்றும் இந்த மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.