ஆவின் நிறுவனத்திற்கு விவசாயிகள் வழங்கும் பால் கொள் முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் வெள்ளிக்கிழ ஆவினுக்கு பால் விற்பனை செய்வதை நிறுத்தி போராட் டத்தில் ஈடுபட்டனர்.
பால் உற்பத்தியாளர்களின் அதிகரித்து வரும் உற்பத்தி செலவை சமாளிக்க உதவும் வகையில், பசும்பால் விலையை 35 ரூபாயில் இருந்து 42 ரூபாயாகவும், எருமைப்பால் லிட்டருக்கு 44 ரூபாயில் இருந்து 51 ரூபாயாகவும் உயர்த்த சங்கம் கோரியது.
அது வரை ஆவினுக்கு பால் வழங்கா போராட்டம் 17 -ஆம் தேதி முதல் நடத்த அறிவித்தது. ஈரோடு மாவட்டத்தில், 500 -க்கும் மேற்பட்ட ஆவின் ஆரம்ப பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, நாளொன்றுக்கு, 3.5 லட்சம் லிட்டர் பால் ஆவின் பெறுகின்றது.
இப்போது, சங்கத்தின் போராட்டம் காரணமாக, வரத்து இன்று கிட்டத்தட்ட 50 சதவீதமாக குறைந்தது. ஈரோடு அருகேயுள்ள நசியனூரில் ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை காலையில் கறவை மாடுகளுடன் மறியலில் ஈடுபட்டனர்.
பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாசருடன் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பாலை சாலையில் கொட்டி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம். போராட்டம் தொடரும் என சங்கப் பொருளாளர் ராமசாமி கவுண்டர் தெரிவித்தார். இதையடுத்து சனிக்கிழமையும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.