சென்னை அருகே காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் & டி தனியார் நிறுவனத்தின் மூலம் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப் பட்டது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை எண்ணூர் அருகே காட்டுப்பள்ளி கடலோர கிராமத்தில் எல் & டி தனியார் நிறுவனம் சார்பில் கப்பல் கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்திய கடலோர காவல் படைகளுக்கான கப்பல்கள் கட்டும் பணி, கப்பல்கள் பழுது பார்க்கும் பணி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது மத்திய அரசின் ‘தற்சார்பு இந்தியா மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களின் அடிப்படையில் மேலும் இரண்டு புதிய கப்பல் கட்டும் தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் எல் & டி நிறுவனம் இடையே அண்மையில் கையெழுத்தானது. இதனை எடுத்து புதிய கப்பல் கட்டும் தளங்களை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது
இதில் எல் & டி நிறுவனத்தின் மூத்த அதிகாரியான சந்தீப் நைதானி கலந்துகொண்டு கடற்படை போர்க்கப்பலை கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
இது காட்டுப்பள்ளி எல் & டி கப்பல் கட்டும் நிறுவனத்தின் மூலம் மூலம் உருவாக்கப்படும் முதல் இந்திய கடற்படை போர்க்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்நோக்கு கப்பல்களுக்கான அனைத்து முக்கிய இயந்திரங்கள், துணை உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் உள்நாட்டு உற்பத்தியாளர் களிடமிருந்து பெறப்படும். இதன் மூலம் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கூடுதல் உத்வேகத்தை அளிக்கும்.
இந்தக் கப்பல்கள், இந்தியக் கடற்படைக்கு வழங்கப் பட்டவுடன், கடல்சார் கண்காணிப்பு, ரோந்துப் பணி, பேரிடர் நிவாரணம் மற்றும் பல்வேறு பயிற்சிகளுக்காக பயன்படுத் தப்படும். மேலும் தன்னிச்சையாக, தொலை தூரத்தில், ஆளில்லா கப்பல்களை இயக்க வழிவகை செய்யப்படும்.
இந்நிகழ்ச்சியில் எல் & டி நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கிரண் தேஷ்முக், த.அசோக் கேதன் மற்றும் இந்திய கடற்படை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .