Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி: குற்றவாளியைக் கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை

மோசடி

வேலை வாங்கித் தருவதாக கூறி உயர் அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு ரூ.80 லட்சம் மோசடி.செய்தவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது.
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கையெழுத்தை அரசு முத்திரையுடன் போலியாகப் போட்டு ரூ. 80 லட்சம் அளவுக்கு மோசடி செய்தவரை கைது செய்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறியதாவது:காஞ்சிபுரம் அனகாபுதூர், திம்மசமுத்திரம் திவ்யா நகரைச் சேர்ந்த ஆரோன் மகன் பிரான்சிஸ் ஜெரால்டு என்கிற சசிகுமார் (35) . இவர் தமிழ்நாடு முழுவதும் போலி பணி ஆணைகளை வழங்கி பண வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருவரங்குளம், கறம் பக்குடி ஆகிய வட்டாரப் பகுதிகளில் படித்து வேலைக்காக காத்திருக்கும் வறுமையில் வாடும் குடும்ப இளைஞர்கள், இளம் பெண்களிடமும் இத்தகைய மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
எனக்கு தலைமைச் செயலாளரை தெரியும். என்னை நம்பி பணம் கொடுத்தால் வேலை ஆர்டர் வாங்கித் தருவதாகக் கூறி சில காகிதங்களைக் காட்டி அவர்களை நம்ப வைத்துள்ளார். பிறகு அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டுதலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், உமா மகேஸ்வரி ஐஏஎஸ், மகிழ்மதி ஐஏஎஸ், ஜெயந்தி ஐஏஎஸ், அகிலாண்டேஸ்வரி ஐஏஎஸ் எனப் பலரது கையெழுத்து களுடன் தமிழ்நாடு அரசு முத்திரையைப் பயன்படுத்தி போலி பணி ஆணைகளை வழங்கியுள்ளார்.
சுமார் 80 லட்ச ரூபாய் அளவுக்கு அவர் வசூலித்து இருப்பது தெரிய வருகிறது. இது மோசடியான, போலியான பணி ஆணை எனத் தெரியவந்ததும் கொடுத்த பணத்தை கேட்டு பாதிக்கப்பட்ட வர்கள் ஜெரால்டு என்ற சசிக்குமாரிடம் கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு திமிராகவும் அலட்சியமாக வும் ஜெரால்டு பதிலளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் எங்கள் கட்சி அலுவலகம் வந்து தங்களைக் காப்பாற்றுமாறு முறையிட்டனர். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு முத்திரை மற்றும் தலைமைச் செயலாளர், ஐஏஎஸ் அதிகாரிகளின் கையெழுத்துகள் போலியாகப் பயன்படுத்தி கிராமங்களில் படித்த இளைஞர்கள், இளம் பெண்களிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரிடம் பாதிக்கப்பட்ட மக்களுடன் புகார் தெரிவித்தோம்.
இந்நிலையில், மேற்படி மோசடிப் பேர்வழி ஜெரால்டு ஆலங்குடி அருகே பாச்சிக்கோட்டை  கிராமத்தில் இருந்து கொண்டு, நேரில் வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு  வெள்ளிக் கிழமை அலைபேசியில் அழைத்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் ஜெகன், கமல் உள்ளிட்ட 4 பேர் அங்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த ஜெரால்டு, தன்னைக் கொல்ல வருவதாக நாடகமாடி ஆலங்குடி போலீசாருக்கு மற்றவர்களை வைத்து தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆலங்குடி போலீசார் பாதிக்கப்பட்ட நபர்களையே கைது செய்து இரவு முழுவதும் தங்க வைத்துள்ளனர்.
காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயர் அதிகாரிகளின் கையெழுத்து மற்றும் அரசு முத்திரைகளை மோசடியாக பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நபரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபர்கள் இழந்துள்ள பணத்தை மீட்டுத்தர வேண்டும்.தமிழ்நாடு முழுவதும் இது போன்ற மோசடிப் பேர்வழிகளின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எஸ்.கவிவர்மன் தெரிவித் துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top