Close
நவம்பர் 22, 2024 7:22 காலை

கந்தர்வகோட்டையில் நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டையில் நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வை கண்டு ரசித்த மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு இன்று மதியம் 12:13 மணி அளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் அக்கச்சிப்பட்டி, கந்தர்வகோட்டை மட்டங்கால், வேம்பன்பட்டி, காட்டுநாவல்,அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாவிடுதி , தெற்கு வாண்டான்விடுதி (தெற்கு)உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர்.

கந்தர்வகோட்டை பகுதிகளில் ஏற்பட்ட நிழல் இல்லா நாள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரகமதுல்லா பேசும் போது நிழல்கள் என்பது நம்மை என்னாலும் பின் தொடரும் அரிய அறிவியல் நிகழ்வு. இந்த நிழல்கள் வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் ஒரு சில மணித்துளிகளுக்கு நம்மை பின் தொடராது.

அந்த நாளை தான் நாம் நிழல் இல்லாத நாள் என்கிறோம். இந்த அறிவியல் நிகழ்வு கந்தர்வகோட்டை பகுதிகளில் இன்று சரியாக 12.13 மணியளவில் ஏற்பட்டது. இந்நிலையில் நிழல் என்பது என்ன? நிழல் இல்லாத நாள் என்றால் என்ன? என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஒளி ஊடுருவாத பொருளின் மீது ஒளிபடும் போது அப்பொருள் ஒளியைத் தடுத்துவிடும். அப்போது நிழல் உருவாகும். அதேபோல சூரிய ஒளி நம்மீது படும் போது நமது உடல் சூரியனின் ஒளியை தடுக்கும்.

அப்போது ‘நிழல்’ உண்டாகும். சூரியன் உங்களுக்கு பின்னால் இருந்தால் உங்களது நிழல் முன்னால் விழும். இதற்கு மாறாக சூரியன் முன்னால் இருந்தால் நிழல் பின்னால் விழும். அதேபோல சூரியன் இடது புறத்தில் இருந்தால் நிழல் வலது புறத்தில் உருவாகும். மாறாக வலது புறத்தில் இருந்தால் நிழல் இடது புறம் உருவாகும்.

நிழல் இல்லாத நாள்:சூரியன் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது சூரிய ஒளி செங்குத்தாக நம் மீது படும். அப்போது நிழல்கள் நமது கால்களுக்கு அடியில் படும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நாம் கண்களுக்கு தெரியாது அந்த நாளைத்தான் நிழல் இல்லா நாள் பூஜ்ஜிய நிழல் நாள் என்று அழைக்கிறோம்.

இந்த நிகழ்வு கடக ரேகை மற்றும் மகர ரேகை ஆகிய இரண்டு எல்லைகளுக்கு உட்பட்ட நாடுகளில் உணரப்படும்.இதற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் சூரியன் மேல்நிலையை அடையாது. அதனால் அந்தப் பகுதிகளில் சூரிய ஒளி எப்போதுமே செங்குத்தாக விழாது. இதனால் அங்கு இந்நிகழ்வு உணரப்பட முடியாது.

சூரியன் ஜுன் மாதம் 21-22 தேதி கடகரேகையின் மேலே இருக்கும்.அதேபோல டிசம்பர் மாதம் 21-22 ஆம் தேதி மகரரேகையின் மேல் இருக்கும். இந்த இரண்டு நிகழ்வுக ளுக்கு முன்னும் ஒரு முறை பூமியில் நிழல் இல்லாத நாள் வரும். அதன்படி ‘நிழல் இல்லாத நாள்’ ஏப்ரல் , செப்டம்பர் ஆகிய மாதங்களில் இரண்டு முறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க பிரசார கந்தர்வகோட்டை குழுவின் சார்பில் மாவட்ட இணைச் செயலாளர் துரையரசன் , வட்டாரச் செயலாளர் சின்ன ராஜா, பொருளாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்வில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் (பொ) முத்துராமன், அறிவியல் ஆசிரியர் யோகவேல், அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, கந்தர்வக்கோட்டை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி ஆசிரியர்கள் மணிமேகலை,சிந்தியா, தனலெட்சுமி, நிவின் ஆகியோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top