Close
நவம்பர் 22, 2024 6:06 காலை

தஞ்சைக்கு வரும் ஆளுநர் ரவிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு

தஞ்சாவூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி 

தமிழ்நாட்டின் உரிமைகளை மறுத்து வரும் ஆளுநர் ரவி தஞ்சைக்கு  வரும்போது அவருக்கு எதிராக  நடத்தப்படவுள்ள கருப்பு கொடி போராட்டத்தில் அனைத்து இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் பங்கேற்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி  வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி, தாய்மொழி தமிழ் மொழிக்கு எதிராக பேசி வருகிறார்.

தமிழ்நாட்டின் தொன்மைகளை , மரபுகளை மாற்றி பேசுவதுடன், ஆண்டான்- அடிமை முறையை மீண்டும் கொண்டு வருகிற புதிய கல்விக் கொள்கை, சனாதன தர்மம் , இந்து மதவாத ஆர்.எஸ்.எஸ் ஆதரவு கொள்கை உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி வருகிறார்.

பள்ளி,கல்லூரி மாணவர்களிடம் இந்தி, சமஸ்கிருத மொழிகளில் படிக்கவும், தேர்வுகள் எழுதவும், அந்த மொழி புகழ்களை பேசி, தமிழ் மொழியை புறக்கணிக்க வலியுறுத்துகிறார். தமிழ்நாட்டின் ஜனநாயக உரிமைகளை மறுத்து வருவதுடன், சட்டமன்றத்திலும் விதிமுறைகளுக்கு மாறாக,எதிராக பேசி வந்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி உள்ள நீட் உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கோப்புகள் நிலுவையில் உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் நலன் என்பது பாதிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு எதிராக, திராவிட கொள்கைகளுக்கு மாறாக பேசி வருவதுடன், அரசுக்கு போட்டியாக தனக்கு ஆதரவான சக்திகளை திரட்டி வருவதை கண்டித்தும், ஒன்றிய அரசு ஜனநாயக விரோத நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிற ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும்  இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

தஞ்சாவூருக்கு ஏப்ரல் 24 -ஆம் தேதி வருகை தரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறுகிறது .

இந்த கருப்புக்கொடி போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்துகிறது. கறுப்புக்கொடி போராட்டத்தில் அனைத்து இடதுசாரி, ஜனநாயக ,முற்போக்கு சக்திகள்  பங்கேற்று வெற்றி பெறச் செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அழைப்பு விடுக்கிறோம் என்று தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top