சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக ஜூன் முதல் தேதிக்குப்பதிலாக ஜூன் 7 -ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் ஜப்பானில் இருந்து அனுமதி கொடுத்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் 1 முதல் 12 -ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் ஜுன் 7 -ம் தேதி தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்தது. 12 -ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 3 -ம் தேதி நிறைவு பெற்றது 10 -ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த மார்ச் 30 -ம் தேதி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து 1 முதல் 9 -ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வந்தன. இந்த இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 28 -ல் முடிவடைந்தது.
இதையடுத்து கடந்த 29 -ஆம் தேதி முதல் முதல் 1- 9 -ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 30 நாட்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, ஜூன் முதல் வாரத்தில். 1 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி, அடுத்த வாரம் பள்ளிகள் திறக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெப்பம் மக்கள் வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் வெப்பநிலை தினமும் சதமடித்து வருகிறது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பம் தகிக்கிறது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடை காலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் அச்சுறுத்தியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில், உண்மை யான கோடை காலம் கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. வரும் நாட்களில் தமிழ் நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன. நேற்றும் மட்டும் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 100 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவானது. அந்த அளவிற்கு மோசமான வானிலை நிலவி வருகிறது. வானிலை சரியாக ஜூன் 7 -ம் தேதி வரை ஆகும். அதுவரை வெயில் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்தது. மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்களும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்களுடன் ஏற்கெனவே அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். இன்று காலையில் அவர் நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை செய்தார்.
அதன்பின்னர், தலைமை செயலாளர் இறையன்புடன் ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனைக்கு பள்ளிகளை திறக்க இரண்டு தேதிகளை தேர்வு செய்துள்ளதாகவும் அந்த தேதிகளை முதல்வரிடம் கொடுத்து, முதல்வர் அதில் ஒரு தேதியை தேர்வு செய்வார் என்று அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜூன் 7 -ம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் ஜப்பானில் இருந்து அனுமதி கொடுத்த பின்னர் அந்தத் தேதி உறுதி செய்யப்பட்டது. அதன்படி, 1 முதல் 12 -ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் ஜுன் 7 -ம் தேதி தொடங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். கோடை காலத்தில் தனியார் பள்ளிகள் தனியாக வகுப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.