பல்வேறு ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக புதுக்கோட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவலர்கள் சுரேஷ் மற்றும் ரேவதி ஆகிய இருவரை பணியிலிருந்து நீக்கம் செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ். இவர் அரியலூர் ஆயுதப்படை காவல் அணியில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு உதவி ஆய்வாளருடன் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை ஆயுதப்படைக்காவலராக பணியாற்றி வந்த ரேவதி என்பவரை ரகசியமாக கோயிலில் வைத்து இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இருவரது நடவடிக்கைகள் குறித்த கடிதம் சென்றதாம். அந்தக்கடிதத்தை வைத்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் காவலர் ரேவதி, சுரேஷுடன் வாழ்க்கை நடத்தி வருவதை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவலர் ரேவதி ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி உத்தவிட்டார்.
ஆயுதப்படை காவலர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.