Close
நவம்பர் 24, 2024 12:09 காலை

ஆக. 26 -ல் புதுக்கோட்டையில் தனியார் துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை

தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் தொடர்பாக ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 150 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 10,000 -க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26.08.2023 அன்று நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக  தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரகஃ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26.08.2023 (சனிக்கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையில்  நடைபெற்றது.

இம்மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள 10,000க்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

மேலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட் டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை நாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்று பயன்பெறும் வகையில் இவ்வேலைவாய்ப்பு முகாம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் இம்முகாமை சிறப்பாக நடத்திடும் வகையில் வருவாய்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், செய்தி மக்கள் தொடர்புத் துறை, நகராட்சி, பேரூராட்சிகள், முன்னோடி வங்கி, தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுனர்கள் பயனடையும் வகையில் பணியாற்ற வேண்டும்.

மேலும், வேலைநாடும் இளைஞர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்  (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in  வாயிலாக பதிவு செய்து, இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன் (பொது),வேல்முருகன் (தொழில்நெறி வழிகாட்டல்), வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, முன்னோடி வங்கி மேலாளர்  ஆனந்த்; மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top