தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (25.8.2023) இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் முன்னோட்டமாக 16 மாவட்டங்களில் உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உள்ள 17 வட்டாரங்களில் அரசு தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி கடந்த செப்டம்பர் 2022 மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கை அறிவிப்பினை தொடர்ந்து, நடப்பாண்டில் தமிழகம் முழுவ தும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது
அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 1048 தொடக்கப்பள்ளிகள், 276 நடுநிலைப்பள்ளிகள், 2 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1326 பள்ளிகளில் 71,006 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றார் சட்ட அமைச்சர் ரகுபதி.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மூலம் மகளிர் உதவிக்குழு சுய உறுப்பினர்களைக் கொண்டு சத்தான காலை சிற்றுண்டி அனைத்து பள்ளி நாட்களிலும் காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை அனைத்து பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்றார்.
நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு சிதம்பரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.