வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(29.8.2023) ஆஜராயினர்.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 காலம் மாதம் ஆகியும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மீது கடந்த 17. 10. 2021 -ஆம் ஆண்டு புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் 2016 -இல் இருந்து 2021 -ஆம் ஆண்டு வரை 35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி ரம்யா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கடந்த 18. 10. 2021 -ஆம் ஆண்டு இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு மற்றும் உறவினர்கள் அவரது நண்பர்கள் வீடுகள் என 56 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அந்தச் சோதனையில் 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம், 4.87 கிலோ தங்கம் 3.76 கிலோ வெள்ளி, 135 கனரக வாகனங்க ளின் பதிவு சான்றுகள், 19 ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் 19 மாதங்களாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பீட்டர் தலைமையிலான போலீசார் கடந்த மே மாதம் புதுக்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 216 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 5 -ஆம் தேதி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவரும் ஆஜரானார்கள். அப்போது இருவரும் ஆகஸ்ட் 29 -ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படிமுன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவரும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், செப்டம்பர் 26 -ஆம் தேதி இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.