புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழகத் தொல்லியல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகளில், கோட்டைக் கரையில் புதிதாக 7 குழிகள் அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
புதுக்கோட்டை நகரிலிருந்து 6 கிமீ தொலைவிலுள்ள பொற்பனைக்கோட்டையில் தமிழகத் தொல்லியல் துறை மூலம் அகழாய்வுப் பணிகள் கடந்த மே 20 -ஆம் தேதி தொடங்கின.
தொல்லியல் அலுவலர் த. தங்கதுரையை இயக்குநராகக் கொண்டு நடைபெற்று வரும் இந்த அகழாய்வில், 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனைத் திடல் என்ற பகுதியில் 14 குழிகளும், அகழியில் ஒரு குழியும் என மொத்தம் 15 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தற்போது புதிதாக கோட்டைக் கரை என்ற இடத்தில் கோட்டையின் கட்டுமானத்தை அறியும் வகையில் ஐந்து அடி அகலம் மற்றும் நீளத்தில் 7 குழிகள் அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
சுமார் 2.5 கிமீ சுற்றளவு கொண்ட கோட்டைச்சுவர் சில இடங்களில் உயரமாகவும், சில இடங்களில் உயரம் குறைந்தும் காணப்படுகிறது. வடக்குப் பகுதி கோட்டைக் கரை சுமார் 5 மீட்டர் உயரம் கொண்டதாகவும், ஒட்டுமொத்த கோட்டையின் உயரமான மண் மேட்டுச் சுவராகவும் காணப்படுகிறது.
இம் மண் மேட்டுச்சுவர் சுமார் ஒரு மீட்டர் அகலத்தில் நீளமான செங்கல் கட்டடமாக தெரிகிறது. எனவே, இந்த இடத்தில் படிக்கட்டு போன்ற அமைப்பில் 7 குழிகள் அமைத்து அகழாய்வு செய்யும்போது கோட்டை அமைப்பு குறித்த புதிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அகழாய்வு இயக்குநர் த. தங்கதுரை கூறினார்.