Close
செப்டம்பர் 20, 2024 6:52 காலை

9 மீனவர்களுடன் நடுக்கடலில் தத்தளித்த விசைப்படகை பத்திரமாக மீ்ட்ட கடலோரக் காவல் படையினர்

தமிழ்நாடு

இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் சிக்கித் தவித்த சென்னை காசிமேட்டைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் மீனவர்களை பத்திரமாக மீட்டு விசாகபட்டனம் துறைமுகம் நோக்கி அழைத்து வந்த கடலோரக் காவல் படை ரோந்துக் கப்பல் ஆயுஷ்.

இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சென்னை காசிமேட்டைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் இதில் சென்ற 9 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கடலோரக் காவல் படையினர் வியாழக்கிழமை விசாகபட்டினம் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி பெருமாள். இவர் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தனது விசைப்படகில் இதர 8 மீனவர்களுடன் கடந்த ஆக.24-ம் தேதி வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அடுத்த இரண்டு நாள்களில் சுமார் நடுக்கடலில் விசைப்படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் திசைமாறிச் சென்று தொலை தொடர்பு சாதனங்களின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மீன்வளத் துறை அதிகாரிகள் கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காணாமல் போன விசைப்படகினை ரோந்துக் கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டு வந்தனர். இதில் சென்னைக்கு வடகிழக்கே சுமார் 250 கடல் மைல் தொலைவில் படகு நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பது கடந்த புதன்கிழமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மூலம்  இவ்வழியே காரைக்கால் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பல் ஒன்றினைத் தொடர்பு கொண்டு பழுதடைந்த விசைப்படகு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் வணிகக் கப்பல் மூலம் படகில் இருந்தவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது.  மேலும் கடலோரக் காவல் படையினர் அங்கு வந்து சேரும் வரை பழுதடைந்த விசைப்படகை பாதுகாக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  இதற்கிடையை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் கப்பலான ஆயுஷ் மூலம் விரைந்து வந்த கடலோரக் காவல் படையினர் விசைப்படகினையும், 9 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு அருகாமையில் இருந்த விசாகபட்டனம் துறைமுகத்திற்கு அழைத்து வந்து  மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top